ஆர்.சனத்-







இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் தயார் என இதுவரை நால்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரே இவ்வாறு களமிறங்கவுள்ளனர்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் தற்போது 50 ஆசனங்கள் உள்ளன. ( அரவிந்தகுமார், டயானா கமகே, ஹரின், மனுச ஆகியோர் கட்சி - கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுயாதீன அணிகள் உட்பட மேலும் சில தரப்புகள் தமக்கு ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சஜித் களமிறங்குகின்றார். டலஸ் மற்றும் அநுரவுக்கு முதல் வாக்களை வழங்கும் எம்.பிக்கள், இரண்டாவது விருப்பு வாக்கை தமக்கு வழங்குவார்கள் என சஜித் நம்புகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனம் மட்டுமே உள்ளது, இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உள்ளிட்ட தரப்புகளை நம்பியே ரணில் களமிறங்குகின்றார்.
ரணிலுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் வஜீர அபேவர்தன, நிமல் லான்சா, ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, விமல், வாசு, கம்மன்பில உள்ளடங்கலான சுயாதீன அணிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள் எனக் கருதியே டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பிரிவு டலசுக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. மற்றுமொரு தரப்பு ரணில் பக்கம் சாய்ந்துள்ளது. இதனால் ரணில் - டலசுக்கு மொட்டு கட்சியின் முழு ஆதரவு கிடைக்காமல் போகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் மூன்று ஆசனங்களே உள்ளன. எனினும், பொது இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதியை தெரிவுசெய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அநுர களமிறங்குகின்றார்.
இதற்கிடையில் 'டலஸ் ஜனாதிபதி - சஜித் பிரதமர்' என்ற இலக்கை அடைவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
வேட்பாளர்களை 'கை'விட்டது - 'கை'
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்கள் எம்.பிக்களாக இருக்கின்றனர். இவர்களில் நால்வர் ( நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, சாந்த பண்டார, சுரேன் ராகவன்) அரசு பக்கம் உள்ளனர்.
மக்கள் ஆணையை ஏற்று பொது இணக்கப்பாட்டுடன் சர்வக்கட்சி அரசமைக்காமல், ஜனாதிபதி பதவிக்கு பலர் போட்டியிட்டால் தமது கட்சி எந்தவொரு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்காது என சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்தார்.
'19' இற்காக தமிழ் தேசியக் கட்சிகள் காத்திருப்பு
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து நாடாளுமன்றத்தில் 10 ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
19 ஆம் திகதி வேட்பு மனு தாக்கலின் பின்னரே இது சம்பந்தமாக கட்சியின் நாடாளுமன்றக்குழு கூடி முடிவெடுக்கும் என கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது தாம் நடுநிலை வகிக்கபோவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று அறிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுதியான நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அத்துடன், மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணிலை, ஜனாதிபதியாக்க கூடாது என போராட்டக்காரர்கள் இன்று திட்டவட்டமாக இடித்துரைத்தனர்.
இலங்கையில் 1978 ஆம் ஆண்டுதான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது. 1993 இல் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்ட பின்னர், பதில் ஜனாதிபதியாக டிபி விஜேதுங்க செயற்பட்டார். ஜனாதிபதி பதவிக்கு அவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் அவர் வாக்கெடுப்பின்றி தெரிவுசெய்யப்பட்டார்.
அதன்பிறகு இம்முறையே ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். அந்தவகையில் நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பு மூலம், ஜனாதிபதியொருவர் தெரிவாகும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்படுவதற்கு '20' ஆவது திருத்தச்சட்டமூலமும் ஓர் காரணம். 20 ஆம் திகதியே புதிய ஜனாதிபதியும் நியமிக்கப்படவுள்ளார்.
0 comments :
Post a Comment