4 தசாப்தங்களுக்கு பிறகு முஸ்லிம் எம்.பியொருவர் வசம் வெளிவிவகார அமைச்சு



ஆர்.சனத்-
4 தசாப்தங்களுக்கு பிறகு முஸ்லிம் எம்.பியொருவர் வசம் வெளிவிவகார அமைச்சு
ஜே.ஆரின் வழியில் நியமனம் வழங்கினார் ரணில்
1947 - 2022 வெளிவிவகார அமைச்சர்களின் விபரம்

லங்கை அரசியல் வரலாற்றில் 45 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 இல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றது. பிரதமராக டி.எஸ் . சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.
1947 முதல் 1977வரை பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சானது பிரதமர் வசமே இருந்து வந்தது.
அந்தவகையில் முதலாவது வெளிவிவகார அமைச்சர் டி.எஸ். சேனாநாயக்க ஆவார். அதன்பின்னர் டட்லி சேனாநாயக்க, சேர். ஜோன் கொத்தலாவல, எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் பிரதமராக செயற்பட்டபோதும், வெளிவிவகார அமைச்சானது அவர்கள் வசமே இருந்தது.
1977 இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.
கண்டி, ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஏ.சி.எஸ். ஹமீட் 49 ஆயிரத்து 173 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் அப்போதைய தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு மிகவும் நெருக்கமானவர்.
1977 இல் ஐக்கிய தேசியக்கட்சி அமைத்த அமைச்சரவையில் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தனி அமைச்சுகளாக்கப்பட்டன. வெளிவிவகார அமைச்சராக ஏ.சி.எஸ். ஹமீட் நியமிக்கப்பட்டார். இவரே முதலாவது முஸ்லிம் வெளிவிவகார அமைச்சர். 77 முதல் 1989 வரை அப்பதவியில் நீடித்தார். பின்னர் 1993 முதல் 1994 வரை வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டார்.
1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது. ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டது. சந்திரிக்கா ஆட்சியில் தமிழரான லக்‌ஷ்மன் கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்தார்.
அதன்பின்னர் 2022 வரை தமிழ் அல்லது முஸ்லிம் எம்.பியொருவருக்கு வெளிவிவகார அமைச்சராகும் வாய்ப்பு கிட்டவில்லை. புதிய அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர்கள் விவரம்
1947-2022
டி.எஸ். சேனாநாயக்க - (ஐ.தே.க.)
டட்லி சேனாநாயக்க - (ஐ.தே.க.)
சேர். ஜோன் கொத்தலாவல - (ஐ.தே.க.)
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க - (சு.க)
கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க - (சு.க)
சிறிமாவோ பண்டாரநாயக்க (சு.க)
ஏ.சி.எஸ். ஹமீட் (ஐ.தே.க)
ரஞ்சன் விஜேரத்ன (ஐ.தே.க.)
ஹரோல்ட் ஹேரத் (ஐ.தே.க.)
டிரோன் பெர்ணான்டோ (ஐ.தே.க.)
லக்‌ஷ்மன் கதிர்காமர் (சு.க)
மங்கள சமரவீர (சு.க.)
ரோஹித போகொல்லாகம (சு.க.)
ஜி.எல். பீரிஸ் (சு.க.)
ரவி கருணாநாயக்க (ஐ.தே.க.)
திலக் மாரப்பன (ஐ.தே.க.)
தினேஷ் குணவர்தன (மொட்டு)
அலிசப்ரி (மொட்டு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :