முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் பகிரங்க வேண்டுகோள்!



*"இந்தப் பாவத்தில் உங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது... நேர்மையான, மனித நேய அரசியல் நிர்வாகம் ஒன்றை உருவாக்குவதற்கு இனிமேலாவது வழி விடுங்கள்...."*
*முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் பகிரங்க வேண்டுகோள்!*



" நாட்டு மக்களின் வாழ்க்கையை நாசமாக்கிய ஊழல் /இனவாத அரசியலுக்கு பக்க பலமாக இருந்து பங்களிப்பு செய்தவர் என்ற அடிப்படையில் இந்தப் பாவத்தில் உங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.
நீங்கள் ஒத்துழைத்திருந்தால் நேர்மையான மனித நேயமிக்க அரசியல் நிர்வாகம் ஒன்றை நமது மண்ணில் உருவாக்கியிருக்கலாம். நாட்டின் இன்றைய கையறு நிலையினை தவிர்ப்பதற்கான தேசிய பங்களிப்பை செய்த வரலாற்று முன் மாதிரி மிக்க சமூகமாக நாமும் மாறி இருக்கலாம். அதனை இல்லாமலாக்கி விட்டீர்கள். இனிமேலாவது அதற்கு வழி விடுங்கள்"
பொறியாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு அனுப்பி வைத்துள்ள பகிரங்க கடிதத்தில் தெரிவிப்பு!


அக்கடிதத்தின் முழுமையான வடிவம் கீழே தரப்படுகிறது!
**************************************

*சகோ. ஹிஸ்புல்லா அவர்களே!*

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் நீங்கள் ஆற்றிய ஒரு உரையின் ஒரு சிறிய பகுதியை ஊடகங்களில் பார்த்தேன்.
எந்த ராஜபக்ஷக்களை விரட்டி அடிப்பதற்காக மக்கள் போராடுகின்றார்களோ அந்த ராஜபக்ஷர்களின் அரசியலுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலவும், அதே போன்று இந்த நாட்டில் மக்கள் ஒழித்துக் கட்ட விரும்பும் ஊழல் மோசடிகளுக்கும் உங்களுக்கும் தொடர்பே இல்லை என்பது போலவும் உங்கள் உரை அமைந்திருந்தது.

நாட்டை நாசமாக்கியுள்ள கேடுகெட்ட ஊழல் அரசியல் உயிர் வாழ்வதற்கு, நமது பொது ஜனங்களின் மறதியும் ஒரு பிரதான காரணமாகும் என்பதனால், உங்களது உரை தொடர்பில் சில விடயங்களை ஞாபகப்படுத்தி சுட்டிக் காட்டுவது மிக அவசியம் என நினைக்கிறேன்.

1. நாட்டை நாசமாக்கியுள்ள ராஜபக்சக்களின் ஊழலும் இனவாதமும் இன்று நேற்று தொடங்கிய புதிய விடயம் அல்ல. மஹிந்த அதிகாரத்துக்கு வந்த காலம் முதல் இது நடக்கிறது. அப்போதிருந்தே நீங்களும் அவர்களுக்கு உதவியாகவே இருந்து வந்திருக்கிறீர்கள். அவர்களை அண்டிப் பிழைக்கும் அரசியலாகவே உங்களது அரசியலும் இருந்து வந்திருக்கிறது. முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்த அவர்களின் இனவாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டது. அன்றைய தினம் ஜும்மா தொழுகைக்காக வந்தவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். முழு முஸ்லிம் சமூகமும் மனமுடைந்து, வேதனைப்பட்டு, செய்வதறியாது திகைத்து நின்ற வேளையில் ராஜபக்சக்களை பாதுகாக்கும் வகையில் அறிக்கை விட்ட ஒரே ஒரு முஸ்லிம் அரசியல்வாதி நீங்கள் தான் என்பது நினைவு இருக்கிறதா? தம்புள்ளை பள்ளிவாசலின் ஒரு தகரத்துக்கு கூட எந்த சேதமும் இல்லை என்று கூறினீர்களே நினைவிருக்கிறதா? 'இவர் எங்கள் வீட்டுப்பிள்ளை' என உங்களை பகிரங்கமாக மகிந்த பிரகடனம் செய்யும் அளவுக்கு அவர்களது விசுவாசியாக நீங்கள் இருந்தீர்கள் என்பது நினைவிருக்கிறதா?

2. ராஜபக்சக்கள் புரிந்த மாபெரிய ஊழல்கள் அவர்களது குடும்பத்தோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஏராளமான சிங்கள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் அதில் பங்கு இருக்கிறது. அதில் நீங்களும் முக்கியமான ஒருவர் என்பதனை மறந்துவிடலாகாது. தொழில் ஏதும் இல்லாத சாதாரண குடும்பமாக இருந்த ராஜபக்ச குடும்பம் முழு நேர அரசியல் செய்து கொண்டு ,எப்படி இப்படியாக பல்லாயிரம் கோடி சொத்துக்களை சேர்த்தது? இந்த நிதர்சனமான கேள்வியே அவர்களது திருட்டுக்களை அம்பலப்படுத்த போதுமானது. இக்கேள்வியானது, உங்களுக்கும் மிகப் பொருத்தம் என்பதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.

3. கோட்டா போனால் தான் சர்வதேச உதவி கிடைக்கும் என கிண்டலாக மக்கள் முன்னிலையில் பேசி இருக்கிறீர்கள். இங்கே நீங்கள் ஒரு விடயத்தை சுலபமாக மறந்து விட்டீர்கள். அதே கோட்டாவை ஜனாதிபதி ஆக்குவதற்கு மறைமுக முகவராக செயல்பட்டவர் நீங்கள் என்பதனை எப்படி மறக்க முடியும். உங்களது பேச்சும் நடவடிக்கைகளும் தான் கோட்டாவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான இனவாத அரசியல் பிரச்சாரத்துக்குரிய மூலப்பொருளாக மாறியது என்பது நினைவிருக்கிறதா?

4. கோட்டா பதவி விலகினால் தான் நாடு உருப்படும் என இப்போது கூறும் நீங்கள், அவர் ஜனாதிபதியாக வெற்றி பெற்றவுடன் அவரை வாழ்த்தி அவரோடு கைகோர்த்து ஆசி பெறும் நோக்கோடு 'ருவன்வெலிசாய' சென்ற முஸ்லிம் அரசியல்வாதி நீங்கள் மாத்திரமே என்பது நினைவு இருக்கிறதா?

5. கடந்த 2018 இறுதிப் பகுதியில் ஜனநாயகத்துக்கு விரோதமான குறுக்கு வழியில் மகிந்த ஆட்சியை பிடிப்பதற்கு நீங்களும் பக்கபலமாக இருந்ததும் அதற்கு சன்மானமாக பதவிகள் உங்களுக்கு வழங்கப்பட்டதும் நினைவு இருக்கிறதா?

6. அரபு நாடுகள் நமது நாட்டுக்கு அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று கூறினீர்கள். அது உண்மையே. ஏழை மாணவர்களுக்காக என நீங்கள் கேட்ட போது அப்படித்தான் பல நூறு கோடிகளை உங்களிடம் அள்ளித் தந்தார்கள். ஆனால் நீங்கள் அதனை என்ன செய்தீர்கள்? உங்களது குடும்பத்தின் பரம்பரை சொத்தாக மாற்றிக் கொண்டீர்கள். கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது ஆவண ரீதியான ஆதாரங்களுடன் இதனை நான் அம்பலப்படுத்தினேன். உங்களால் மறுக்க முடியவில்லை. பாராளுமன்ற தேர்வு குழுவின் முன்னால் போய் அதனை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலையினை பிந்திய நாட்களில் இறைவன் உங்களுக்கு ஏற்படுத்தினான்.

இன்னும் பல விடயங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த முடியும். இருந்தாலும் மேலே சொன்ன விடயங்கள் போதுமானது என நினைக்கிறேன்.

ஆக, மக்கள் துரத்தியடிக்க போராடும் ராஜபக்ஷகளின் ஊழல்/இனவாத அரசியலுக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்ட ஒரு முக்கிய 'முஸ்லிம்' அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவர்கள் இந்த நாட்டுக்கு செய்த அநியாயங்களிலும் பாவங்களிலும் உங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. அதனை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

ஊழலாலும் இனவாதத்தாலும் நாடு 'நடுத்தெருவுக்கு' வந்துவிட்டது. வாழ்வா? சாவா? என்கின்ற நிலையில் இந்த ஊழல் அரசியலுக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென முழு நாட்டு மக்களும் வீதிக்கு இறங்கி விட்டார்கள்.
இந்த ஆபத்துகளை முன்கூட்டியே உணர்ந்ததன் காரணமாகத்தான் ஊழல் இல்லாத புதிய அரசியல் நிர்வாகத்தை உருவாக்குவதற்காக 2006 ஆம் ஆண்டு முதல் நாம் பாடுபட்டு வருகிறோம். உங்களையும் அழைத்தோம். பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையில் உங்களை சந்தித்தும் எழுத்து மூலமாகவும் உங்களின் காலை பிடிக்காத குறையாக கேட்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்பதற்கும் அப்பால் அதற்கு தடையாகவே இதுவரை இருந்து வந்துள்ளீர்கள். நீங்கள் ஒத்துழைத்திருந்தால்
நமது காத்தான்குடி பிரதேசத்திலாவது ஊழல் இல்லாத மனிதநேயமிக்க ஒரு முன்மாதிரி அரசியலை பல வருடங்களுக்கு முன்னரே நாம் ஸ்தாபித்திருக்கலாம். அது நாட்டின் ஏனைய பல பகுதிகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்திருக்கும். நாட்டின் இன்றைய கையறு நிலையினை தவிர்ப்பதற்கான தேசிய பங்களிப்பை செய்த வரலாற்று முன் மாதிரி மிக்க சமூகமாக நாமும் மாறி இருக்கலாம். ஆனால் அதற்குக் குறுக்கே நின்று அந்த அருமையான வாய்ப்பை நீங்கள் நாசமாக்கி விட்டீர்கள்.

இனிமேலாவது நேர்மையான அரசியல் நிர்வாகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு குறுக்கே நிற்காமல் வழி விடுங்கள். முடிந்தால் அதற்காக ஒத்துழையுங்கள். அரசியலால் இத்தனை காலமும் நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களை அண்டிப்பிழைப்போரும் வாழ்ந்தது போதும். இனிமேலாவது மக்களை வாழ விடுங்கள். அதுதான் உங்கள் அரசியல் பாவங்களுக்கான குறைந்தபட்ச பிராயச்சித்தமாகும்.

அல்லாஹ்வுக்காக இதனை இந்த இறுதிக் கட்டத்திலாவது செய்யுங்கள் என மக்கள் சார்பாக உங்களை வினையமுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
பொறியியலாளர் M.M. அப்துர் ரஹ்மான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :