சர்வதேச சந்தைக்கட்டமைப்பு மாற்றம் இலங்கை நெருக்கடியை மாற்றுமா?



சுஐப் எம்.காசிம்-
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியில் அதிக ஆதிக்கம் செலுத்துவது எது? யாரை பதவி இறக்கினால் இந்த நெருக்கடி நீங்கும் என்ற சர்ச்சை இதுவரைக்கும் விவாதமாகத்தான் உள்ளது. ஆனால், இதிலுள்ள விடயங்கள் சர்வதேச சர்ச்சையுடனும் இணைந்திருக்கிறது என்பது இப்போது புலனாகிறது. சர்வதேச அரசியல், பொருளாதாரம் என்பன இலங்கையின் நெருக்கடியை தீர்மானிக்கும் சக்திகளாக மாறியிருக்கின்றன. வெளிநாடுகளின் உதவிகள், கடன்கள், சர்வதேச ஒத்துழைப்புக்களால்தான் இந்த நெருக்கடி நீங்கும் என்கின்ற நிலைப்பாடு இன்று வலுத்து வருகிறது. இதனால்தான், உச்ச உயர் பதவியிலுள்ளவர் பதவிதுறக்க வேண்டும் என்கின்றனர்.
கடன்கள், உதவிகளை எத்தனை நாட்களுக்குப் பெறுவது? சொந்தக்காலில் நின்று உழைத்து நாட்டை மீட்பதில்லையா? என்பதும் ஒருவாதம். பதவி விலகுவதால் எதுவுமில்லை என்போரது நிலைப்பாடு இது. அவ்வாறு நமது நாட்டு உழைப்புக்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதென்றாலும் அங்கு நல்லுறவு நிலைக்கிறதா? இதுதான், இலங்கையின் நிலை. ஏற்கனவே வீழந்துள்ள மரபுரீதியான தேயிலை, கோப்பி, ரப்பர் மற்றும் ஆடை ஏற்றுமதிகளுக்கு எனைய நாடுகளுடன் போட்டியிடும் திறனை நமது நாடு இழந்துள்ளது. பத்தாயிரம் கிலோ தேயிலை தேவைப்படுகையில், இரண்டாயிரம் கிலோவை சர்வதேச சந்தையில் விற்பது எப்படி? இது ஏனைய நாடுகள் சர்வதேச சந்தையில் செல்வாக்குச் செலுத்த உதவுகிறது. இதனால், சர்வதேச உதவிகள்தான் இந்த நெருக்கடிக்கு அவசர தீர்வு என்று உணரப்பட்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சகலதையும் நாடும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதும் இதற்காகத்தான்.
ஆனால், இப்போது சர்வதேச சந்தைகளின் வாங்கல், விற்றல் நிலைமைகள் புதிய கட்டமைப்பாக மாற்றம் பெற்றிருக்கின்றன. மூன்று மாதங்களையும் கடந்துவிட்ட ரஷ்ய மற்றும் உக்ரைன் மோதல்கள் ஏற்படுத்திவரும் மாற்றங்கள்தான் இவை. ஐரோப்பாவின் 27 நாடுகளுக்கும் விநியோகித்து வந்த எரிவாயு மற்றும் எரிபொருட்களை ரஷ்யா நிறுத்தியிருக்கிறது. அல்லது ஐரோப்பா இந்த இறக்குமதிகளை தவிர்த்துக்கொண்டதாகவும் கருதலாம். இன்னும் துருக்கியை அண்மித்துள்ள கருங்கடல் கப்பல் போக்குவரத்துக்களை முடக்கியுள்ள ரஷ்யா, ஐரோப்பாவுக்கான வாங்கல், விற்றல் வழிகளையும் மறித்துள்ளது. போர் அல்லது அரசியலென்று வருகையில், ஆயுதங்களை விடவும் பொருளாதார வியூகம் முன்னிலை வகிப்பது புதிய விடயமில்லையே. இதனால், நிறுத்தப்பட்டுள்ள அத்தனையும் ஐரோப்பாவுக்குள் செல்வதற்கான வழிகள் பற்றி அமெரிக்கா உட்பட ஐரோப்பா சிந்தித்து வருகிறது.
இதற்காக முதலில் தேர்வானது மத்திய கிழக்குத்தான். ரஷ்யாவால் நிறுத்தப்பட்ட எரிபொருட்கள் இப்போது மத்தியகிழக்கிலிருந்து செல்லவுள்ளன. இது, ஏற்கனவே ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட எரிபொருட்கள் அளவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு, ஆசிய நாடுகளுக்கு நாளாந்தம் விநியோகமான ஒரு இலட்சம் பெரல் எரி​பொருட்கள்,25,000 பெரல்களாக குறையலாம். இந்தப் போட்டிகளுக்குள் நுழைந்து இலங்கை வெல்வதென்பது, நமது சிந்தனைகளுடன் நின்றுவிடட்டும்.
இதனைக் கருதித்தான் சர்வதேச உதவிகளில் நாட்டம் காட்டப்படுகிறது. இந்த நாட்டம் கிட்டுவதற்கு மாற்றம் தேவைப்படுகிறது என்கிறார்கள். வெளிநாட்டு நாணயங்களை உள்நாட்டுக்குள் ஈர்ப்பதற்காக, ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியை அரசாங்கம் துரிதப்படுத்துவதும் இதற்காகத்தான். இவ்வாறு சென்று பணம் உழைப்போர், வெளிநாட்டுப் பணங்களை உண்டியலில் அனுப்பாது, இலங்கையின் வங்கிகளூடாக அனுப்புவதுதான் நாட்டுப்பற்று. மாறாக, உண்டியல் பரிவர்த்தனைகளில் பணங்களை அனுப்பி, அந்நியச்செலாவணிகள் அங்கேயே நின்று விடும் வழிகளைத் திறத்தலாகாது. இதிலொரு கவலையும் இருக்கிறதுதான். அதிக இலங்கைத் தொழிற்படையினர் வெளிநாடு செல்லும் நிலைமைகள் ஏற்படுவதால், மலிவான பெறுகைகளுக்கு உட்படுவது தவிர்க்க முடியாமலே போகும்.
இந்தக் கவலைகளை விடவும், நமது நாட்டில் நிலவுபவை அதிக பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணித்தாய்மார் பிரசவ வலிகளால் வாகனங்களை தேடுவது, அவசர பயணத்தில் பொருட்கள் மற்றும் பணங்களை தவறவிடுவது, கள்வர்கள் கைவரிசை கைமீறிப்போய் பொருட்களை பாதுகாக்க முடியாமலிருப்பது, கைக்குழந்தைகளை தோள்களில் போட்டவாறு தாய்மார்கள் வீதியால் செல்வது, நாளாந்த தொழிலாளர்கள் வேலையிழந்திருப்பது, உயர் பதவியிலுள்ளோர் வீதிகளில் காத்துநிற்பது மட்டுமா? கையேந்தி பசிபோக்கும் யாசகர்களை எவரும் கண்டுகொள்ளாமல் செல்வதெல்லாம், கண்களைக் குளமாக்குகின்றன. அவசரத்திலா அல்லது ஆத்திரத்திலா அல்லது இல்லாமையிலா இப்படி நடக்கிறது என்பதுதான் தெரியாதுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :