இலங்கை அதிபர் சேவைக்கு மிகை ஊழியர் அடிப்படையில் கடந்த 2012.08.08 ஆம் திகதி நியமனம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம் இலங்கை அதிபர் சேவை மிகை ஊழியர் தரம் 3 இலிருந்து 2 ஆம் தரத்திற்கும் இலங்கை அதிபர் சேவை (மிகை ஊழியர்) தரம் 2 இலிருந்து தரம்-1 ற்கும் பதவி உயர்வு வழங்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இப்பதவி உயர்வுகளை பெறுவதற்காக பூர்த்தி செய்திருக்க வேண்டிய நிபந்தனைகள் பற்றி கல்வி அமைச்சினால் வெளியிடபட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அதிபர் மிகை ஊழியர் சேவையில் நிரந்தரமாக்கபட்டிருத்தல் வேண்டும், பதவி உயர்வுக்கு தகுதி அடையும் தினத்திற்கு முன்னர் 06 வருட சேவையை பூர்த்தி செய்திருப்பதுடன் 06 வருட சம்பள உயர்ச்சியை பெற்றிருக்க வேண்டும், உரிய காலத்தினுள் EB பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். இதற்காக 2022.05.26ஆம் திகதியில் இருந்து 03 வருடம் சலுகைக் காலம் வழங்கப்படும், ஏனைய மொழிகளில் சித்தியடைந்திருத்தல் வேண்டும் அல்லது விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும், பதவி உயர்வுக்கு முந்திய 06 வருடங்கள் செயலாற்றுகை தரங்கணிப்பு திருப்திகர மட்டத்தில் இருக்க வேண்டும், அரச சேவை ஆணைக்குழுவின் 01/2020 இற்கமைய ஒழுக்காற்று தண்டனை பெறாதவராயிருத்தல் வேண்டும் என்பனவே அந்நிபந்தனைகளாகும்.
இலங்கை அதிபர் சேவையில் மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற அதிபர் EB சித்தியைத் தவிர ஏனைய தேவைகளை பூர்த்தி செய்திருப்பின் ஓய்வுபெற்ற தினத்திற்கு முந்திய தினத்தில் இருந்து பதவி உயர்த்தப்படுவர் என அந்த சுற்றுநிருபத்தின் ஊடாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, தற்போது சேவையில் இருப்போர் ஓய்வுபெறும்போது இலங்கை அதிபர் சேவை மிகை ஊழியர் அடிப்படையில் ஓய்வுபெற வைக்கப்படுவர் எனவும் இலங்கை அதிபர் சேவை மிகை ஊழியர் ஒருவர் இன்னுமொரு மிகை ஊழியர் அதிபருடன் ஒத்துமாற அனுமதிக்கப்படுவார் எனவும் இலங்கை அதிபர் சேவை மிகை ஊழியர் ஒருவர் இலங்கை அதிபர் சேவை நிரந்தர ஆளணி பதவிக்குரிய வெற்றிடத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் நியமனம் செய்யப்படமாட்டார் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்வி அமைச்சின் இத்தீர்மானத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் அதிபர் சேவை மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றும் 3200 பேர் பயனடைவர் என இலங்கை கல்வி நிருவாக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment