பிரதமருக்கு Eng.அப்துர் ரஹ்மான் அனுப்பி வைத்துள்ள கடிதம்!



"மக்கள் எதிர்பார்த்த சிறந்த ஆட்சி முறையினை ஏற்படுத்தக்கூடிய இரண்டு நல்ல சந்தர்ப்பங்களை நீங்கள் நாசமாக்கி இருக்கிறீர்கள். நாட்டின் தற்போதைய அவல நிலை உங்களை வெட்கித் தலைகுனியச் செய்ய வேண்டும். தகுதியானவர்கள் இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கு காத்திருக்கிறார்கள். நீங்கள் இப்போதாவது வெளியேறிச் செல்வதே கடந்த கால அரசியல் பாவங்களுக்கான பிராயச் சித்தமாகும்"
பிரதமர் ரணிலுக்கு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிப்பு!



ஆங்கிலத்தில் இன்று( 4.7.2022) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் முழுமையான தமிழ் மொழி பெயர்ப்பு கீழே தரப்படுகிறது.

அன்புடன் திரு.பிரதம மந்திரி அவர்களுக்கு!

தாங்கள் பிரதமராக பதவியேற்றுள்ள தற்போதைய ஆட்சியின் கீழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பேரவலம் யாவரும் அறிந்ததே. இதை புதிதாக விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும் சில தினங்களுக்கு முன் கொழும்பு காலி வீதியில் நான் கண்ட ஒரு காட்சி இக்கடிதத்தை உங்களுக்கு எழுதத் தூண்டியது.
உங்களின் அரசாங்க அமைச்சர்களில் ஒருவராக அவர் இருக்க வேண்டும். அதே ஆடம்பர வாகனம், அதே வகையான முன்-பின் தொடரும் வாகனங்கள். அதே வகையான பாதுகாப்பு படையணி- பந்தாக்கள். கருப்பு கண்ணாடியால் மூடப்பட்ட குளிரூட்டப்பட்ட அந்த அதி உயர் சொகுசு வாகனத்தில் 'அவர்' வழமை போலவே 'உலா' சென்று கொண்டிருந்தார்.

வீதி நெடுகிலும் எரி பொருளுக்காக மக்கள் காத்து நிற்கின்றனர். முழு நாடுமே ஸ்தம்பிதம் ஆகியிருக்கும் நிலையில் பற்றியெரியும் மனதோடும் வயிற்றோடும் மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

இவை எது பற்றியும் நீங்களோ உங்கள் அமைச்சர்களோ கவலைப்படுவதாக தெரியவில்லை. மக்களின் வரிப்பணத்தில் உங்கள் அரசாங்க பிரமுகர்களின் சொகுசு வாழ்க்கையானது, கவலைகள் ஏதுமின்றி வழமை போலவே தொடர்கிறது.
நீங்கள் பதவியேற்ற வேளை ஏதாவது 'நல்லது' உங்களின் மூலம் நடந்து விடும் என பலர், மிகச் சிறிய நம்பிக்கை வைத்திருந்தனர். இது நம்பிக்கை என்பதை விடவும் இயலாமையின்- ஆற்றாமையின் பிரதிபலிப்பே என நான் நினைக்கிறேன். ஆனால், நீங்களோ "ஆபத்து/எச்சரிக்கை" அறிக்கை விடும் அறிவிப்பாளராக மட்டுமே செயற்பட தொடங்கினீர்கள். உங்கள் அறிவிப்புகளினால் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடும் கறுப்பு சந்தை விலையும் மேலும் உயர்ந்து மக்களின் சுமை மேலும் மேலும் அதிகரித்ததே தவிர வேறு எந்த நன்மையும் கிட்டவில்லை. உங்களின் பதவியேற்பானது ஒளிந்து கொண்டிருந்த ராஜபக்சக்கள் வெளியில் வருவதற்கும் அவர்களை பாதுகாப்பதற்கும் மட்டுமே உதவியிருக்கிறது. உங்களின் பதவியேற்பின் மூலம் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிட்டவில்லை. மக்களுக்கு நீங்கள் வழங்கி வரும் உங்கள் 'எச்சரிக்கை' அறிவிப்புகளை நிறுத்திக் கொள்வதே மக்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக அமையும்.
ஆட்சியாளர்களின் முட்டாள்தனமும் திருட்டுத்தனமும் தொடர்ந்தால் நமது நிலமை இப்படியான பேரவலத்தில் தான் போய் முடியும் என்பதனை பலரும் முன் கூட்டி அறிந்தே வைத்திருந்தார்கள். மக்களுக்கு தெளிவு படுத்தியும் இருந்தார்கள். அதை மீண்டும் மீண்டும் நீங்களும் கூற வேண்டிய எந்த தேவையும் இல்லை. இதற்கான தீர்வு என்ன என்பது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துவதும், அந்த தீர்வுகளை பெற்றுத் தருவதுமே உங்கள் கடமையாகும். ஆனால் நீங்கள் பிரதமராக பதவியேற்று ஏறத்தாழ 50 நாட்கள் ஆகிவிட்டன. எந்த ஒரு விடயத்திற்கும் உங்களால் மக்களுக்கு ஆறுதல் கிடைத்ததாக இல்லை. நாளுக்கு நாள் அனைத்துமே மோசமடைந்து கொண்டே செல்கின்றன.
தட்டுப்பாடு படுமோசமாக நிலவும் இக்கட்டான இந்த நேரத்தில் வரிசைகளில் நாள் கணக்காக காத்திருக்கும் மக்களின் அசௌகரியங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கூட உங்களினாலோ அல்லது உங்கள் அரசாங்கத்தினாலோ மேற்கொள்ள முடியவில்லை. மாறாக இந்த இக்கட்டான நிலையிலும் எரிபொருட்களை விநியோகிப்பதில் கூட மோசடிகளும் தில்லுமுல்லுகளுமே தொடர்கின்றன. பல நாட்கள் பொறுமையோடு காத்திருந்து வேதனை தாங்க முடியாமல் விரக்தியை வெளிப்படுத்தும் மக்களை உங்கள் பாதுகாப்பு படைகள் அடித்து விரட்டி துன்புறுத்தும் காணொளிகள் நெஞ்சை பிழிகிறது. மனிதநேயத்தை நேசிக்கும் எவரையும் வெட்கி தலை குனியச் செய்யும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளே இவை என்பதனை நீங்கள் மறந்து விடக் கூடாது .

திரு.பிரதம மந்திரி அவர்களே!

எரிபொருளுக்கான 'டோக்கன்' அட்டைகளை பெறுவதற்காக பல மணித்தியாலயங்கள் பசியோடும் தாகத்தோடும் நாட்டு மக்கள் வீதிகளில் காத்திருக்கத்தான் வேண்டுமா? மக்களின் சிரமங்களை குறைத்து அந்த டோக்கன்களையாவது கிரமமாக வழங்குவதற்கு கூட உங்களின் அரசாங்கத்தால் முடியாதா? இதற்கு சர்வதேச உதவி தேவையில்லையே..சர்வ சாதாரணமான பொதுப்புத்தியும் மக்கள் மீதான நேர்மையான அக்கறையும் போதுமானதே...
அப்படியென்றால் நீங்கள் எதற்காக இந்த கதிரையில் அமர்ந்திருக்கிறீர்கள்?

உங்களையும் உங்கள் பரிவாரங்களையும் போசிப்பதற்காக நாளாந்தம் எத்தனை மில்லியன் ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது என சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா? உங்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக வரியை கட்டிவிட்டு சொந்த உழைப்பில் அடிப்படை தேவைகளை கூட பெற்றுக் கொள்ள முடியாமல் வீதிகளில், வெயிலில்,இருளில் தூக்கம் இன்றி பசியோடும் தாகத்தோடும் மக்கள் காத்துக் கிடக்கின்ற அவலம் உங்களுக்கு வெட்கம் தந்திருக்க வேண்டும். அந்த வெட்கமும் தலைகுனிவும் தீர்வுகளை வழங்குவதற்கு உங்களை தூண்டியிருக்க வேண்டும். அல்லது பதவியில் இருந்து வெளியேற தூண்டியிருக்க வேண்டும். இந்த இரண்டையும் நீங்கள் செய்யவில்லையென்றால் இந்த குடிமக்களைப் பற்றி எந்த துளி அக்கறையும் உங்களுக்கு இல்லை என்பதே அர்த்தமாகும்.

இறுதியாக, வரலாற்றிலே நல்ல மாற்றங்களை நிகழ்த்துவதற்கு கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களை நீங்கள் நாசமாக்கி இருக்கிறீர்கள். முதலாவது கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்தது. இனவாத்தாலும் திருட்டுத்தனத்தாலும் தேசத்தை நாசமாக்க தொடங்கிய ராஜபக்சக்களை தூக்கி எறிந்த மக்கள் நல்லதொரு ஆட்சியினை வழங்குமாறு அந்த சந்தர்ப்பத்தை 'தங்கத் தட்டிலே' வைத்து உங்களுக்கு 2015ல் தந்தார்கள். ஆனால் நீங்களும் உங்களது பாடசாலை மற்றும் வர்த்தக நண்பர்களுமாக இணைந்து அந்த பொன்னான வாய்ப்பினை மண்ணாக்கி முடித்தீர்கள். அது, மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதே திருடர்கள் மீண்டும் பதவிக்கு வர உதவியது. அந்த திருடர்கள் மீண்டும் இந்த தேசத்திற்கும் மக்களுக்கும் ஏற்படுத்திய அழிவை தாங்க முடியாமல் மீண்டும் வீதியில் இறங்கி மக்கள் போராடினார்கள். ஒருவாறு மாற்றம் நிகழ தொடங்கிய வேளையில் மீண்டும் குறுக்கிட்ட நீங்கள் அந்த மாற்றத்திற்கான சந்தர்ப்பத்தை இப்போது மீண்டும் நாசமாக்கி இருக்கிறீர்கள்.

நீங்களும் உங்களைப் போன்றவர்களும் பல தசாப்தங்களாக அரசியலில் இருந்து கொண்டு இந்த தேசத்தையும் மக்களின் நாளாந்த வாழ்க்கையினையும், எதிர்காலத்தினையும் நாசமாக்கியது போதும்.
ஒதுங்கிக் கொள்ளுங்கள். சகல மக்களும் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக வாழக்கூடிய வளம் கொண்ட தேசமாக எமது தாய் நாட்டை கட்டி எழுப்பக்கூடிய ஆற்றலும் தகுதியும் அர்ப்பணமும் நேர்மையும் கொண்ட ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அதற்கு வழி விட்டால் போதும். அதுவே உங்கள் அரசியல் பாவங்களுக்கான பிராயச்சித்தமும் மக்களுக்கான பேருதவியும் ஆகும்.

இந்த விடயங்களை உங்களை நேரில் சந்தித்து நேருக்கு நேராக அமர்ந்து உங்கள் முகம் பார்த்து கூறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனாலும் அதற்கு இந்த நாட்களில் சந்தர்ப்பம் கிடைப்பதாக இல்லை. சில வாரங்களுக்கு முன்னால் ஒரு குறுஞ்செய்தியையும் அனுப்பி இருந்தேன் அதற்கும் பதில் இல்லை.
எனவே தான் இந்த கடிதம் மூலமாக மக்கள் சார்பாக இந்த கரிசனைகளை உங்களிடம் பகிரங்கமாக முன்வைக்கின்றேன். நிச்சயம் கவனம் செலுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

Eng. அப்துர் ரஹ்மான்
நகர சபை உறுப்பினர் காத்தான்குடி நகர சபை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :