குடியிருப்பொன்றிலிருந்து சிறுத்தை உயிருடன் மீட்பு



தலவாக்கலை பி.கேதீஸ்-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி கூம்மூட் தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்பொன்றிலிருந்து சிறுத்தையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது லோகி கூம்மூட் தோட்டத்தில் நேற்று முன் தினம் (4) இரவு தொழிலாளர் குடியிருப்பொன்றின் கூரையை அதிகாலை சிறுத்தையொன்று உடைத்துக்கொண்டு உள்ளே வீழ்ந்து அதன் அறையில் மாட்டிக்கொண்டது.

பாரிய சத்தம் கேட்டதையடுத்து குடியிருப்பில் இருந்தவர்கள் குறித்த அறையை பார்த்தபோது உறுமல் சத்தத்துடன் சிறுத்தை இருப்பதை கண்டு குறித்த அறையை மூடிவிட்டு அயலவர்கள் வீட்டில் இருந்துள்ளனர். விடிந்ததும் அயலவர்கள் சிலரின் உதவியுடன் சிறுத்தை இரவில் தப்பித்து ஓடியிருக்கும் என நினைத்து குடியிருப்பாளர் குறித்த அறையை திறக்க முற்பட்டபோது சிறுத்தை சீறி பாய்ந்து இவர்களை தாக்கியுள்ளது. இதன்போது உடனடியாக கதவை மூடி இவர்கள் தப்பித்துள்ளனர். இதன்போது குடியிருப்பாளர் சிறுகாயங்களுக்குள்ளானார். இதேவேளை மற்றொரு நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சிறுத்தையானது இரவில் வனப்பகுதியிலிருந்து நாய்களை வேட்டையாடுவதற்கு தோட்ட பகுதிகளுக்குள் புகுந்தபோது நாய்களை துரத்திச் சென்றபோது தவறி குடியிருப்பின் கூரை மீது விழுந்து அது உடைந்து குடியிருப்பின் அறையினுள் விழுந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று (5) சம்பவ இடத்துக்கு விரைந்த லிந்துலை பொலிஸார், நல்லத்தண்ணி, ஹக்கலை மற்றும் ரந்தனிக்கலை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல மணித்தியாலங்கள் சிறுத்தையுடன் போராடி அதற்கு மயக்க மருந்து செலுத்தி அதனை மயக்கமடையச் செய்து உயிருடன் பிடித்து ரந்தனிகலை வன விலங்கு காப்பகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.இவ்வாறு பிடிப்பட்ட சிறுத்தை 6 அடி நீளமான 5 வயதுடைய ஆண் சிறுத்தை எனவும் இதனை அங்கு கொண்டு சென்று மீண்டும் வனப் பகுதிகளில் விடுவதாகவும் வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :