டீசல் பற்றாக்குறையால் திண்மக்கழிவகற்றல் சேவையில் மட்டுப்பாடு;நிலைமையை புரிந்து செயற்படுமாறு முதல்வர் ஏ.எம்.றகீப் வேண்டுகோள்



அஸ்லம் எஸ்.மௌலானா-
டீசல் பற்றாக்குறை நீடித்து வருவதன் காரணமாக, கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. இந்த இறுக்கமான சூழலில், நிலைமையை புரிந்து கொண்டு, செயற்படுமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் கடந்த பல மாதங்களாக நிலவி வருகின்ற பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வுகள் காணப்பட்டு வருகின்ற போதிலும், அதன் ஊடாக பெற்றோல் தட்டுப்பாடு ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டிருந்தாலும் டீசல் தட்டுப்பாடு என்பது நாடு முழுவதிலும் இன்னும் நீடித்தே வருகின்றது.

எரிபொருள் நிறைவாக வருகிறது என்று கூறப்பட்டாலும் கள நிலைவரம் அவ்வாறில்லை. அடுத்த சில தினங்களில் டீசல் கப்பல் ஒன்று வருவதாக சொல்லப்பட்டாலும் அது சுப்பர் டீசல் என்று தெரிய வருகிறது.

இதற்கு மத்தியில் அரச நிறுவனங்களின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் QR Code முறைமை அமுல்படுத்தப்பட்டு வருவதால், கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுகின்ற வாகனங்களுக்கு போதியளவு டீசலை பெற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. இந்த முறைமை உள்ளூராட்சி மன்றங்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது. இதனால் கல்முனை மாநகர சபையின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுகின்ற 27 வாகனங்களுக்கும் வாராந்தம் சுமார் 2000 (இரண்டாயிரம்) லீட்டர் டீசல் தேவையாக இருக்கிறது. எனினும் QR Code முறைமையின் கீழ் இவ்வாகனங்களுக்கு 540 லீட்டர் மாத்திரமே டீசல் கிடைக்கிறது. இதன்படி வழமையான சேவையுடன் ஒப்பிடுகையில் தற்போது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியளவிலான சேவையையே முன்னெடுக்க முடியுமாக இருக்கும். இதனைக்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் முடியுமான குப்பைகளை சேகரித்து, அகற்றி வருகிறோம்.

இந்த QR Code முறைமைக்கப்பால் போதியளவு டீசல் தருவதற்கு எமக்குரிய எரிபொருள் நிரப்பு நிலையம் முன்வருவதாக இல்லை. இந்த முறைமை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற உத்தரவு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. QR Code முறைமையை மீறி செயற்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை பற்றி எம்மிடம் சுட்டிக்காட்டப்படுகிறது.

இப்பிரச்சினை குறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் பல தடவைகள் பேசியும் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் இதனைக் கொண்டு சென்றுள்ளோம். QR Code முறைமையில் இருந்து எமக்கு விதி விலக்களிக்குமாறு கோரி தற்போது எரிசக்தி அமைச்சு மட்டத்திலும் பேசி வருகிறோம். எமது முயற்சிகள் வெற்றியளிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இந்நிலையில், மாநகர சபை எதிர்நோக்கியிருக்கின்ற டீசல் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும் வரை எமது திண்மக்கழிவகற்றல் சேவையை மட்டுப்படுத்தி முன்னெடுப்பதென்பது தவிர்க்க முடியாத விடயமாகும். இந்த இறுக்கமான கட்டத்தில், நிலவும் அசாதாரண நிலைமையை பொது மக்கள் புரிந்து கொண்டு, சகிப்புத்தன்மையுடன் ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.

மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் உங்களது வீதிகளுக்கு வரும்வரை குப்பைகளை முகாமை செய்து கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக குப்பைகளை வகைப்படுத்தி, சமையலறைக் கழிவுகளை மாத்திரம் எமது வாகனங்களில் ஒப்படையுங்கள். ஏனைய உக்காத குப்பைகளை சில நாட்கள் வீடு, வாசல்களில் வைத்து முகாமை செய்து, நிலைமை சீரான பின்னர் ஒப்படையுங்கள். இவற்றை உடனுக்குடன் தெருக்களிலோ பொது இடங்களிலோ நீரோடைகளிலோ வீசாதீர்கள். நமது சுற்றுச்சூழலை நாமே பேணிப் பாதுகாக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

அதேவேளை, கடந்த கால கொரோனா பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் மாநகர சபைக்கான வருமானம் பாரியளவில் வீழிச்சியடைந்திருக்கிறது. இதனால் ஏற்பட்டிருக்கின்ற நிதிப்பற்றாக்குறை ஒருபுறம், எரிபொருள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் கடுமையான விலை அதிகரிப்பு இன்னொரு புறம், இவற்றுக்கு மத்தியிலேயே பெருந்தொகை செலவுகளை மேற்கொண்டு, பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து, திண்மக்கழிவகற்றல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் மிகவும் கரிசனை, பொறுப்புடன் முன்னெடுத்து வருகின்றோம் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :