தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாவிட்டால் எதிர்காலத்தில் திராய்க்கேணியின் நிலைமை தான் முழு கிழக்கு மாகாணத்திற்கும் நேரும்!



32 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் கலையரசன் எம்பி பேச்சு.
வி.ரி.சகாதேவராஜா-
மிழர்களிடையே ஒற்றுமை இல்லாவிட்டால் எதிர்காலத்தில் திராய்க்கேணியின் நிலைமை தான் முழு கிழக்கு மாகாணத்திற்கும் நேரும்.

இவ்வாறு திராய்க்கேணி படுகொலை தினத்தில் உரையாற்றிய
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.

1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின் 32 வது வருட நினைவேந்தல் நிகழ்வு, சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

அகம் மனிதாபிமான வள நிலையமும், சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பும் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துரையப்பா காத்தவராயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், பிரபல சமூக செயற்பாட்டாளர் த.பிரதீபன்,சூழலியல் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரி.கிருஷாந்த் ,அகம் அமைப்பின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் திருமதி நவரட்ணம்அஞ்சலிதேவி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டார்கள்.

ஆரம்பத்தில் ,படுகொலையின் போது வெட்டிக்கொலை செய்யப்பட்ட 54 பேரின் திருவுருவப் படங்களுக்கு முன்னால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
மலர் அஞ்சலி செலுத்தி அக வணக்கம் செலுத்தப்பட்டது.

படுகொலை சம்பவத்தில் கணவர்மாரை இழந்து விதவைகளான 40 பேரில், நேரிலே கண்முன்னே சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இரண்டு தாய்மார்களான அன்னம்மா, மாரிமுத்து மற்றும் கிராம தலைவர் சி.கார்த்திகேசு ஆகியோர் அழுது அழுது உரையாற்றினார்கள்.

அங்குபாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் மேலும் உரையாற்றுகையில்...

இலங்கை நாட்டிலே சுதந்திரத்திற்கு பின்பு திட்டமிட்டவகையில் 1956 ,1985 ,1990,2009 வரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வந்திருக்கின்றார்கள். ஆனால் இதுவரை அப் படுகொலைகளுக்கு நீதியோ, நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை.

எந்த இனமாக இருந்தாலும் ஆலயம் என்பது புனித ஸ்தலமாக இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் இந்து ஆலயத்தில் தான் அதிகமான படுகொலைகள் இடம் பெற்று இருக்கின்றன. அரசாங்கமே ராணுவத்தையும், முஸ்லிம் ஊர்காவல் படையினரையும் பயன்படுத்தி இந்த திட்டமிட்ட படுகொலையை செய்தது .

அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி மட்டும் அல்ல உடும்பன் குளத்திலே 151 விவசாயிகள் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதேபோன்று சொறிக்கல்முனையில் பங்குத்தந்தை செல்வராஜா பாதர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். வீரமுனையிலும் ஆலயத்தில் வைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த வரலாற்றை எல்லாம் நாங்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்துசெல்ல வேண்டும். சமகால சந்ததியினர் சுதந்திரமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன..

அம்பாறை மாவட்டத்திலேயே 58 தமிழ்கிராமங்களை இலக்கு வைத்து இன அழிப்பு நடத்தப்பட்டது. ஆலங்குளம், மீனோடைக்கட்டு போன்ற கிராமங்கள் ஒரு தமிழர்களும் இல்லாமல் முற்றாக கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் இனவாதிகள் இணைந்து செய்தார்கள் என்பது மாற்றுக் கருத்துக்களுக்கு இட இல்லை.
எமது அடையாளத்தை நாங்கள் பேணவேண்டுமாக இருந்தால் அரசியல் ரீதியான தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் தொடர்ச்சியாக அமைதி வழி அறவழிப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதைத்தான் எமது கட்சியும் செய்து கொண்டிருக்கிறது. என்றார். ஆலய தலைவர் ரி.யோகநாதன் நன்றி உரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :