அடிப்படை உரிமைகளில் ஆழ ஊடுருவும் PTA



சுஐப் எம்.காசிம்-
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் சகல வழிகளையும் திறந்துவிட்டுள்ள அரசாங்கம், இயலுமானவரை மீண்டெழும்ப முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளில் சில விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் இவ்விமர்சனங்கள் வீரியமடையலாம். இதற்காக அரசியல் நோக்கில் எவரும் காய்நகர்த்தவும் கூடாது. அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அதிரடி நகர்வுகள் அரசியல் களத்தை ஆட்டிப் பார்ப்பதாகவே பலரும் கருதுகின்றனர். முன்னூறுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதித் தடைகள், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தமை, வௌிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காகச் செல்ல விரும்புவோரை அவசரமாக அனுப்பும் ஏற்பாடுகள், இதில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர சலுகைகள் எல்லாம் மீண்டெழுவதற்கான பிரயத்தனங்களே. இந்தப் பிரயத்தனங்களில் இப்போது பிரதானமாகப் பேசப்படுவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகமாக்கும் முயற்சிகள்தான்.

சர்வதேச அரங்கில் தனிமைப்பட்டு, உதவிகள் தடைப்படாமலிருக்க சிலவற்றைச் செய்தே தீரவேண்டிய தேவை இந்த அரசாங்கத்துக்கு உள்ளது. சிலவேளைகளில், இந்தத் தேவைகள் சிலரது தேவைகளில் மண்ணை வாருவதாக இருக்கலாம். இவ்வாறானவர்களின் அதிகார ஆசைக்கு இடமளிக்கும் நிலையில், நமது நாட்டின் பொருளாதார நிலை இல்லையே! இதற்காகத்தான், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமென்ற உறுதிமொழி சர்வதேசத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அமுலில் இருப்பதால், வௌிநாடுகளின் பார்வைகளில் நமது நாடு பயங்கரமாகப் பார்க்கப்படுகிறது. தனி மனிதனின் வாழ்வியல் உரிமைகளை முழுமையாக மறுக்கும் சட்டம் இதுவென்றுதான் வௌிநாடுகள் மட்டுமல்ல மனித உரிமைகள் செயற்பாட்டு அமைப்புகளும் கருதுகின்றன. ஒருவனின் வாழ்வை, அவனது ஆசைகளை, உயிரோடு முடமாக்கும் அல்லது அழிக்கும் இந்தச்சட்டம் ‘ஜனாதிபதி’ என்கின்ற தனியொருவரிடம் எப்படி இருப்பது?

எதிர்பாராமல் எழுகின்ற கலகங்கள் மற்றும் யுத்தங்களை அடக்குவதற்கு ஒரு காலவரையறைக்குள்ளாவது இந்தச் சட்டம் மட்டுப்படுத்துகிறதா? அப்படியும் இல்லை. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அறிமுகமாக்கிய இந்தப் “பயங்கரவாதச் சட்டம்” நாற்பது வருடங்களாகியும் இன்னும் நிலைக்கிறது. அவரால் அறிமுகஞ்செய்யப்பட்ட அரசியலமைப்பு எத்தனை தடவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் எதற்குள்ளும் இந்தச் சட்டம் திருத்தப்படவில்லை. இதுதான் இதிலுள்ள கவலை. இதைத்திருத்துமாறு பல தடவைகள் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் அவ்வப்போது எழும் சுயநல நோக்குகளால் காலங்கடந்ததுதான் கவலை.

இலங்கை அரசாங்கத்தை என்றாவது வளைத்துப்பிடிக்க வாய்ப்புக்களை எதிர்பார்த்த சர்வதேசம், நெருக்கடி நேரங்களில் கையேந்தும் போது, இலங்கைக்கு நெருக்கடி கொடுத்த சம்பவங்களை நாம் மறப்பதற்கும் இல்லை. ஜீ.எஸ்.பி வரிச்சலுகையைப் பெறவேண்டுமானால், பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாமலாக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஐ.நா என்பன விடுத்த கோரிக்கைகளை நாம் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றியிருந்தால் அதலபாதாளத்திலிருக்கும் இன்றைய நெருக்கடிக்கு நேசக்கரம் நீட்டப்பட்டிருக்கும். இதுபற்றிய நீண்ட அனுபவங்கள் ஜனாதிபதியிடம் இருக்கின்றன. இந்த அனுபவங்களில்தான் சர்வதேச உதவிகளை நாடிய நகர்வுகளை ஜனாதிபதி நகர்த்தி வருகிறார். இதற்காகவே பயங்கரவாதச் சட்டம் மாற்றப்படவிருக்கிறது.

இது மாற்றப்பட்டால் ஒருவரைக் கைது செய்வதற்கான உரிய காரணங்கள் சாட்சிகளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கைதான சந்தேக நபரை வழக்குத் தொடராமல் மாதக்கணக்கில் அடைத்துவைக்க முடியாது. கைதானவர் வைக்கப்பட்டுள்ள இடத்தை பகிரங்கமாக அறிவித்தல், குடும்ப உறவினர்கள் அடிக்கடி பார்ப்பதற்கு அனுமதியளித்தல், உரிய காலத்துக்குள் கைதானவருக்கு எதிராக வழக்குத்தொடரல் மற்றும் தடுத்து வைக்கப்படும் காலத்தில் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளாரா? என்பதை அறிவதற்கு மருத்துவச் சான்றிதழைப் பெறுதல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்கி, இப்புதிய திருத்தம் அல்லது சட்டம் வௌியாக உள்ளது. சிலநேரங்களில் ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற புதிய பெயருடனும் இச்சட்டம் அறிமுகமாகலாம்.

எவ்வாறானாலும், சர்வதேசம் திருப்தியுறும் வகையில் இந்தச் சட்டமோ அல்லது திருத்தமோ இருத்தல் அவசியம். அப்போதுதான், நாம் தேடும் சர்வதேச உதவிகள் நமது வாசல்கதவுளை தட்டும். எந்தச் சமூகங்களையும் இலக்குவைக்கும் நோக்கில் இந்தச் சட்டங்கள் இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பது ‘மனித உரிமைகளுக்கு எதிரானவர்கள்’ என்ற கருதுகோள் ஏற்பட்டு, சர்வதேச அரங்கில் நமது நாடு தனிமைப்பட நேரிடும்.

ஜெனீவா அமர்வுகள் மற்றும் ஐ.நா கூட்டங்களில் இங்கிருந்து சென்றோர் அரசியல் நோக்கங்களுக்காக நமது நாட்டை காட்டிக்கொடுத்த பாவங்களால்தான் நாம் பழிவாங்கப்படுகிறோம் என்பதை முதலில் அரசியல்வாதிகள் உணர வேண்டும். இவ்வாறு இவர்கள் உணர்வது, வரப்போகும் சர்வதேச உதவிகளுக்கான வாசல்களை திறக்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :