செட்டியூர் சிந்தனை செல்வன் மயில்வாகனம் . அவரது 84வது ஜனன தினம் இன்று.



காரைதீவு நிருபர் சகா-
ட்டக்களப்புத் தமிழகத்தில் சீர் பெற்ற செட்டிபாளையம் பதி புலமையின் விளைநிலம் என்பது மறுக்க முடியாத உண்மை. இப் பதியில் இரணிய சம்கார அம்மானை எழுதிய மாறன் விதானை சமகாலப் புலமை நண்பர்களான புலவர் இ.வ. கணபதிப்பிள்ளை, வரகவி சின்னவப் புலவர் மற்றும் வாய்மொழிப் புலமை பெற்ற கணபதியார் (துறைக்காரர்), அவரது மகன் கவிஞர் மயில்வாகனம் ஆகியோர் வாழ்ந்தார்களென்பது எமக்கெல்லாம் பெருமை.

வார்த்தைகளுக்கு வகிடெடுத்து கவிகளாய் அழகு பார்த்தவர் செட்டியூர் சிந்தனைச் செல்வன் என்ற புனை பெயர் கொண்ட கவிஞ்ஞர் க. மயில்வாகனம், அவர் கவிதையோடு மட்டுமன்றி நாடகம், நாட்டுக் கூத்து, நாட்டிய நாடகம், வசந்தன், கும்மி, கோலாட்டம் போன்ற ஒட்டு மொத்தக் கலைகளின் தலைவன். கலைத்தாயின் ஏக புதல்வன். கவிஞ்ஞனாக, பாடகனாக, இசையமைப்பாளராக, இயக்குனராக, நடிகராக எத்தனை பாத்திரங்கள். 1970 களில் இருந்து செட்டிபாளையம் என்னும் பெயருக்கு கலைகளால் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் முத்திரை பதித்தவர் செட்டியூர் சிந்தனைச் செல்வன் என்ற கவிஞர் க.மயில்வாகனம் என்பது நிதர்சனமான உண்மை

நான் ஒரு கலைஞனாக சமூக பற்றுடையவனாக இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக பரிணமிப்பதில் எனக்கு நல்லறிவூட்டிய ஆசிரிய பெருந்தகைகளுள் மதிப்புக்குரிய ஆசான் கவிஞர் மயில்வாகனம் ஐயா அவர்களது வழிநடத்தல் தனித்துவமானது. மட்/செட்டிபாளையம் பாடசாலையில் அவர்பணிபுரிந்த காலம் (1971-1983) வசந்தம் வீசிய காலம் கல்வியும் கலையும் சமாந்தரமாக வளர்ந்த காலம் கலையூடான ஈடுபாடு மனிதனை கல்வியில் பிரகாசிக்க வைக்கும் என்பற்கு நானே எனக்கு உதாரணம்.

எதிலும் கலையை காண்பவனே நிதர்சனமான கலைஞன்
இவரது படைப்புக்கள் கவிதை, பாடல், நாடக இயக்கம், நாட்டுக்கூத்து என விரிந்தவெளி கொண்டவை.

அக்கால மாணவப் பருவத்தில் என்னை பல்வேறு பாத்திரங்கள் நடிக்கவைத்து அழகுபார்த்ததவர். மாணவர் மன்றங்கள், வாணி விழா நிகழ்வுகள் பாடசாலைகளுக்கிடையேயான போட்டி நிகழ்வுகள் என்னைபோன்ற பலரருக்கு படிக்கல்லாய் அமைந்தது.

பாடசாலை குடும்பமானது இவரோடு செந்தில் ஐயா,சபா சேர் முத்துலிங்கம் சேர், பிச்சைப்பிள்ளை சேர், கந்தப்பெருமாளய்யா, ஆறுமுகம் ஐயா பவளம் ரீச்சர் போன்றோர்களும் தனியாகவும் கூட்டாகவும் படைப்புக்களை பிரசவித்து தேசிய மட்டம் வரை பாடசாலையை முன்கொண்டு சென்று வரலாற்றில் பல பதிவேற்றினர்.

இவ்வாறு நீண்ட கலைப்பயணம் பாடசாலைக்கப்பால் சமூக சீரழிவுகளையும் ,சமூக அடக்குமுறைகள்,கல்வியின் முக்கியத்துவம், கணவன் மனைவியுறவு, தொழில் முன்னேற்றம் கிராமத்து ரசனைகளையும் வாழ்வாதார மூலங்களையும் கருப்பொருளாக கையகப்படுத்தின தமிழ் சுடர் நளின கலாமன்றம் மேற்கூறப்பட்டோராலும் கவி விநாயகமூர்த்தி மற்றும் பல இளம் கலைஞர்களின் அயரா முயற்சியாலும் அரச விதிமுறைகளை பின்பற்றி 1973களில் உதயமானது அதன் தலைவராக கவிஞர் மயில்வாகனம் இம்மன்றத்தை வழிநடத்தினார். பிற்காலத்தில் எமது கிராமம் பல சாதனைகளை குவிப்பதற்கும், புதிய பல்துறை கலைஞர்கள் உருவாகுவதற்கும் களமமைத்ததும் இம்மன்றமே.

கவிஞரின் வீடு கலைக்கூடமானது தினம் பிந்நேரங்களில் ஆற்றுகைக்கு முன்னரான வழுவகற்றும் ஒத்திகைகள் வளவு முழுவதும் ஆங்காங்கே வெவ்வேறு தளங்களில் இடம்பெறும்.

இவ் அரங்கேற்றங்கள் பிரதேச, மாவட்ட மட்ட கலாமன்ற நிகழ்வுகள் எமது கிராம அயற்கிராம கோயில் திருவிழாக்களின்
நிகழ்ச்சிகளாக நடைபெறும் எனது மாமி கவிஞரின் மனைவி புட்டும் தேங்காப்பும் சீனீயும் தந்து விருந்தோம்ல் செய்வது தனிரகம். நான் அண்ணன் கனகரெத்தினம் எனது சகோதரங்கள் இப்படி பலர் அங்கு மையம் கொள்வார்கள் விடுமுறை நாட்களில் வாகனங்கள் வரிசையாக நிற்கும் பலவூர் திருவிழாக்கள் இதுபோல் போட்டி நிகழ்வுகளுக்கு எமை ஏற்றிச் சென்று ஆற்றுகை செய்வதற்காக மாலைவேளையில் எம்மை வரவேற்க சனம் திரளும் அது மனதை விட்டகலா பசுமை நினைவு.

குறிப்பாக கவிஞர் மயில்வாகனம் ஆற்றுகை செய்த பொன்னம்பல போடியார் சோடியன் குடுமி சும்மாடுமா எனும் நவீன நாட்டுக்கூத்தில் எனது சகோதரர் கனகரெத்தினம் அவர்களை பார்த்து புவனேஸ்வரி அவர்கள் பாடிய

"வெற்றிலை தோட்டத்திற்கு தினம் விடிந்தெழும்பி போங்கவென்று எத்தனை தரம் சொல்லிவிட்டேன் நீங்க என்னத்த பண்ணி கிழீக்கிறீங்க..

அதற்கு கனகரெத்தினம் அவர்கள்

"என்னடி அம்மா சின்னப்புள்ள நீயும் என்னென்னமோ செய்யீறீயே சன்னதத்த கிழப்பாதடி இப்ப சரசம் பண்ண நேரமில்ல..

இவ்வாறு கணவன் மனைவி அன்னியொன்னிய உரையாடல்களை அங்கதசுவையுடன் வெளிக்காட்டுகின்றார். இதே போல் சோழியன் குடும்பி நவீன நாடகத்தில் பெண்கள் முழங்காலுக்கு மேல்ஆடை அணிவதற்கான விழிப்புணர்வை குடும்பதில் இருந்தே ஆம்பிக்கின்றார் அதாவது

"என் மகளே சிறு கண்மணியே
ராணியே
செல்வராணியே..
உன்னுடைய கோலத்தால் உலகம் சிரிக்கிதே ராணியே
செல்வராணியே

இவ்வாறாக கலைப்பணியோடு நின்று விடாது சமூகத்தை நேசிக்கும் நல்மனிதராக நல்லபல சமூகபணிகளை இவ்வூருக்கு செய்து மக்களோடு மக்களாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மக்கள் பிரச்சினைகளை தனது பிரச்சினையாக முன்னிலைப்படுத்தி ஊர்போற்ற வாழ்ந்த செட்டியூர் சிந்தனை செல்வன் மயில்வாகனம் பற்றி அவரது 84வது ஜனன தினத்தில் பதிவிடுவதில் பெருமை கொள்கிறேன்.


மூ.கோபாலரெத்தினம்
செயலாளர்
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
கிழக்கு மாகாணம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :