மருத்துவத்துறை விஞ்ஞானியாக வரவேண்டும் என்பதே எனது இலட்சியம்.-துவாரகேஷ்



மருத்துவத்துறை விஞ்ஞானியாக வரவேண்டும் என்பதே எனது இலட்சியம்அகில இலங்கை ரீதியில் உயிரியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவன் துவாரகேஷ் கூறுகிறார்.

ர்வதேச பல்கலைக்கழகத்தில் பயின்று பல ஆராய்ச்சிகள் செய்து மருத்துவத்துறை விஞ்ஞானியாக வரவேண்டும் என்பது எனது இலட்சியம்.

என்று அகில இலங்கை ரீதியில் உயிரியல் துறையில் முதலாம் இடம் பெற்ற மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் தெரிவித்தார்.

இவ்வாரம் வெளியான 2021 உயர்தர பரீட்சை முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியில் உயிரியல் துறையில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காரைதீவிவைச் சேர்ந்த மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் அவர்களின் செவ்வி இது.

கிழக்கு மாகாண வரலாற்றில் அகில இலங்கை ரீதியில் கிழக்கு மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றது இதுவே முதல் தடவை .

அதுவும், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணில் தோன்றிய துவாரகேஷ் மட்டக்களப்பு புனிதமிக்கேல் கல்லூரியில் பயின்று இந்த சாதனையை பதிவு செய்திருக்கிறார் .

அவரது தந்தையார் தோல் வைத்திய நிபுணர் தமிழ்வண்ணன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றுகிறார். அவரது தாயார் பகீரதி வைத்திய அதிகாரி அவரும் அங்கு பணியாற்றுகின்றார்.

இவருக்கு இரண்டு சகோதரிகள் .ஒருவர் உயர்தரம் பயில்கின்றார்.மற்றயவர் தரம் பத்தில் பயில்கிறார். இருவரும் மட்டக்களப்பு சிசிலியா மகளிர் கல்லூரியில் பயில்கின்றனர்.
காரைதீவில் பிறந்து மண்டூரில் கரம்பிடித்த
பண்டிதர் நல்லரத்தினம் அவர்களின் பேரன் துவாரகேஷ் ஆவார் .

அவர்கள் தற்போது மட்டக்களப்பிலே வாழ்ந்து வருகின்றார்கள்.

கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் அவர்களை பேட்டி கண்ட பொழுது அவர் கூறுகையில்..

கேள்வி. அகில இலங்கை ரீதியில் நீங்கள் முதலிடம் வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தீர்களா?
பதில். தேசிய மட்டத்தில் வருவேன் என்று தெரியும். இருந்தாலும் அகில இலங்கை ரீதியில் முதலிடம் என்பது நான் எதிர்பார்க்கவில்லை. முதன் முதலில் பரீட்சை முடிவை பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. எடுத்தவுடன் அம்மாவிடம் கூறினேன்.

கேள்வி. தங்களின் ஆரம்பக்கல்வி பற்றி கூறுங்கள்..

பதில். நான் ஆரம்ப கல்வியை கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் இரண்டு வருடங்கள் படித்துதுவிட்டு புனித மைக்கேல் கல்லூரிக்கு வந்து விட்டேன். தந்தையும் தாயும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் என்பதால் மட்டக்களப்புக்கு வர வேண்டிய சூழல்.

கேள்வி. நீங்கள் பெரும் சாதனை படைத்திருக்கின்றீர்கள். புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகள் பெற்று மாவட்டத்திலே அன்று சாதனை படைத்தீர்கள்.இன்று மருத்துவத்துறையில் முதல் மாணவராக தேர்வாகிஉள்ளீர்கள். இந்த சந்தோஷமான நேரத்தில் யாருக்காவது நன்றி செலுத்த விரும்புகிறீர்களா?

பதில். ஆம் முதலிலேயே என்னைப் படைத்த இறைவனுக்கும் அடுத்து அன்பையும் ஆதரவையும் தந்த பெற்றோர்களுக்கும் சகோதரர்களுக்கும் அடுத்து பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி. கொரோனா கால கட்டத்தில் சிரமத்தின் மத்தியில் இந்த படிப்பினை மேற்கொண்டு இருக்கின்றீர்கள். அது எப்படி இருந்தது?

பதில். கொரோனாக்காலத்தில் முதலாம் வருடத்தில் ஒரு தவணையும் இரண்டாம் பருவத்திலே ஒரு தவணையும் தான் பாடசாலைக்கு செல்ல முடிந்தது .ஏனைய நேரங்களில் நிகழ்நிலை வகுப்புகளிலும் கலந்து கொள்ள கூடியதாக இருந்தது.அப்போது நான் பாடசாலைக்கு 95 வீத வரவை பதிவு செய்தேன். சந்தோஷமாக இருந்தது .

கேள்வி . உங்களுக்கு அடுத்ததாக வருகின்ற மாணவர் சமுதாயத்திற்கு சொல்லக்கூடிய ஆலோசனை ஏதாவது இருக்கின்றதா ?
பதில். ஆம் கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம். கண்மூடித்தனமாக விடிய விடிய படிக்க வேண்டும் என்று படிக்க வேண்டாம் .ஆழமாக திட்டமிட்டு ஸ்மார்ட் முறையில் படிக்க வேண்டும். கஷ்டப்பட்டு படிக்க படிக்க வேண்டும் என்பதற்காக உடலை வருத்த வேண்டும் என்பது இல்லை .உரிய முறையில் தேவையான பயிற்சி செய்து கேள்விகளை அதிகம் செய்து இந்த படிப்பை மேற்கொள்ள வேண்டும் .

கேள்வி ..டியூசனை மட்டும் நம்பி உங்களது படிப்பு இருந்ததா ?

பதில். அப்படி இல்லை ரியூசனை மட்டும் நம்ப முடியாது. நாங்கள் பாடசாலையிலும் நிகழ்நிலை வகுப்புகளிலும் கூடுதலான நேரத்தை செலவிட்டைன். எனது படிப்பு இரவு 10:30 மணி வரைக்கும் இருக்கும். காலையிலே நான்கு முப்பது முதல் ஐந்து மணி வரை நிச்சயமாக எழுந்து கொள்வேன்.

கேள்வி. படிப்பு நேரத்தில் கைபேசி மற்றும் தொலைக்காட்சி
பாவனை எவ்வாறு இருந்தது?

பதில்.கைபேசி எமது படிப்புக்கு அத்தியாவசியமாக இருந்தது .அதற்கு மாத்திரம் அதனை பயன்படுத்தினேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பெரிதாக பார்ப்பதில்லை .

கேள்வி. நீங்கள் பொது விவேக பரீட்சையிலே 90 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளீர்கள்.
பதில். ஆம் பொது விடயங்களில் எனக்கு பொதுவாக நாட்டம் இருந்தது. கல்வி ஒன்றுதான் எம்மை கௌரவத்தோடு வாழவைக்கும்.

சாதனை மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் அவர்களை அவர் கற்ற பாடசாலை முதல் பல தரப்பினரும் வீடு தேடிச் சென்று வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து முதல் முதலாக அரசியல் பிரமுகர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று முன்தினம் மட்டக்களப்புக்கு சென்று அவரது வீட்டில் பாராட்டி கௌரவித்தது.
கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான சந்திரசேகரன் ராஜன் வடிவுக்கரசு சந்திரன் கதிரமலை செல்வராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று அவரைப்பாராட்டி கௌரவித்தனர். அவர்களுடன் காரைதீவை சேர்ந்த கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜாவும் சமுமளித்திருந்தார்.

உறுப்பினர் ராஜன் அங்கு பாராட்டி பேசுகையில்...
இது ஒரு இமாலய சாதனை .வரலாற்று பதிவு .அம்பாறை மாவட்டத்திற்கு குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த முன்னொரு போது மில்லாத மாபெரும் கல்வி சாதனை இது. துவாரகேசை பாராட்டுவதில் நாங்கள் அனைவரும் மிக மிக மகிழ்ச்சி அடைகின்றோம்.. என்றார்.

கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா கூறுகையில்..
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மண்ணில் தோன்றிய தமிழ்வண்ணன் துவாரகேஷ் உலகத்தை மீண்டும் காரைதீவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்றார். அவரது உன்னதமான சாதனையால் முழு தமிழ் பேசும் சமுகமும் பெருமையடைகிறது. காரைதீவைச் சேர்ந்த நல்லரெத்தினம் பண்டிதரின் மகன் தோல் வைத்திய நிபுணர் டாக்டர் தமிழ்வண்ணன் , துவாரகேஷ்ஷின் தந்தை. காரைதீவிவை சேர்ந்த பொறியியலாளர் திருச்செந்தில்வேலின் மகள் வைத்திய அதிகாரி டாக்டர் பகீரதி, துவாரகேஷின் தாய்.
இவரது அதிஉயர் சாதனையால் கிழக்கில் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மீண்டும் கல்வியியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். என்றார்.

செவ்வி . வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :