இனப்படுகொலையானது ஒரு பன்னாட்டு குற்றமாகும்! பேரினவாத செயற்பாட்டால் தென்தமிழீழம் சுருங்கி வருகிறது! ஐநா கவன ஈர்ப்பு போராட்டத்தில் கல்முனை கணேஷ் காட்டம்.



வி.ரி. சகாதேவராஜா-
1948 டிசம்பர் 09 இல் உருவான ஐநா சபையின் 260 ஆவது இலக்க தீர்மானத்தின் படி இனப்படுகொலையானது ஒரு பன்னாட்டு குற்றமாகும். ஆனால் இதனை தொடர்ச்சியாக இலங்கை பேரினவாதம் முன்னெடுத்து வருகின்றது. இதனால் தென் தமிழீழம் சுருங்கி வருகின்றது. தமிழர் மீதான படுகொலைகளுக்கு நீதி வேண்டும் .

இவ்வாறு ஐநா கவன ஈர்ப்பு போராட்டத்தில் நேற்று உரையாற்றிய மாணவ மீட்பு தலைவரும் மனித உரிமை சமூக செயற்பாட்டாளருமான செல்வராஜா கணேஷ் தெரிவித்தார்.
அனைத்து உலக மனித உரிமை ஸ்தாபனம் மற்றும் இனப் படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு இணைந்து ஐநா கூட்டத்தொடர் நடக்கும் மண்டபத்துக்கு முன்பாக திரு.முருகதாஸ் தலைமையிலே நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது .

அப் போராட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற பிரமுகர்கள் உரையாற்றினார்கள். அங்கு மனித செயற்பாட்டாளர் கணேஷ் மேலும் உரையாற்றுகையில்..

இனப்படுகொலை என்பது தேசிய இனம் ஒன்றின் வாழ்வை தாங்கி நிற்கும் முக்கியமான மூலாதாரமாகும் .அந்த இனம் தாமாக துடைத்தெறிந்து போவதை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று அறிஞர் லெஸ்னின் வரைவிலக்கணம் கூறுகின்றார். அது ஒரு மனிதஉயிரோடு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல . மாறாக அரசியல் பொருளாதார கலாச்சாரம் சார்ந்ததாகும்.
இலங்கையில் கடந்த 60க்கும் மேற்பட்ட வருடங்களாக இந்த இன அழிப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றது 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது ஆனால் 1950 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாதம் இந்த சிங்கள ஆக்கிரமிப்பை தென்தமிழீழத்தில் முதலாவதாக மேற்கொண்டது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலேயே குடியேற்ற திட்டத்தை ஆரம்பத்தில் மேற்கொண்டது .அங்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் காணிகள் சூறையாடப்பட்டது. புதிதாக ஐம்பது குடியேற்ற கிராமங்கள் ஸ்தாபிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக சிறுபான்மைக்கு எதிராக அந்த நடவடிக்கை முதல் முதலிலேயே அரங்கேறியது.

1911 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட சனத்தொகை எடுத்துக் கொண்டால் ஏழு சத வீதமாக இருந்த சிங்களவர் இன்று 39 விதமாக அதிகரித்து இருக்கின்றது .அன்று 24 வீதமாக இருந்த தமிழர்கள் இன்று 18 வீதமாக குறைந்து இருக்கின்றார்கள்.

1956 ஆம் ஆண்டு எமது தமிழ் மொழியை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று மொழிப்பிரச்சனை கொண்டு வரப்பட்டது.
வடக்கு கிழக்கில் பல ஆயிரம் படுகொலைகள் இடம் பெற்றன . யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது. முல்லைத்தீவு திருகோணமலை மாவட்ட எல்லை கிராமங்களில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. வடகிழக்கு தமிழர் தாயகம் மண் இல்லாத ஒழிக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டார்கள்.
2009இல் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள். இதுவரைக்கும் அதற்கு நீதி இல்லை. அதற்கு நீதி வேண்டும் என்று தங்களது பிள்ளைகளை திருப்பித் தர வேண்டும் என்று வடபுலத்திலே தாய்மார்கள் 2000 நாட்களாக போராடி வருகிறார்கள். இதுவரைக்கும் எந்த தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. சிங்கள பேரினவாதம் எமக்கு தீர்வு தரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சர்வதேசம் ஒன்று தான் எமக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும். ஆர்மேனியா கிழக்கு திமோர் மியான்மார் போன்ற பகுதிகளிலே இப்படியான அடக்குமுறை இடம்பெற்றது.

அந்த வகையிலே அவர்கள் தொடர்ச்சியாக போராட வேண்டிய ஒரு காலமாக இருந்தது. இந்த நிலைப்பாடு இலங்கையிலும் சிறுபான்மை மக்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பேச்சுவார்த்தைகள் அன்றும் இன்றும் கிழித்து எறியப்பட்டன. அதை தடுத்து அடக்கி ஒதுக்கியதே வரலாறு.

எமது தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒரே நோக்கம் எமக்காக ஒரு தேசம் சுய நிர்ணய ஆட்சி என்பதாகும். அதற்காக நாம் ஒற்றுமையாக கல்வியறிவால் இணைந்து போராட வேண்டி இருக்கின்றது. உலகில் தமிழர் தேசத்தை நியாயமான தேசமாக மிளிரச் செய்ய வேண்டும். நீதிக்கான வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் ஒன்றுபடுவோம். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :