இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்கான அறிவியல் பங்களிப்பை வழங்குவது முஸ்லிம் புத்திஜீவிகளின் அடிப்படைப் பொறுப்பாகும் - பீடாதிபதி பேராசிரியர். மஸாஹிர்






இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடம் கடந்த 28.09.2022 அன்று நடாத்திய 9ஆவது சர்வதேச ஆய்வு மாநாட்டில் மாநாட்டின் தலைவரும் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர், கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

ஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 9ஆவது சர்வதேச மாநாட்டின் தலைவர் என்றவகையில் நான் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

பல்கலைக்கழகங்களின் பிரதான செயற்பாடுகளுள் அறிவை உற்பத்தி செய்து, பரப்புதல் என்பது முக்கியமான ஒன்றாகும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அந்த அடிப்படையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடம் வருடாந்தம் சர்வதேச ஆய்வரங்குகளை ஏற்பாடு செய்து, நடாத்தி வருகின்றது. அந்தவகையில் இது 9ஆவது பல்நாட்டு ஆய்வரங்காகும். இம்முறை இம்மாநாடு 'அறபு, இஸ்லாமிய கற்கைகள் ஊடாக சமூக-பொருளாதார அபிவிருத்தி' எனும் கருப்பொருளில் இடம்பெறுகின்றது.

தற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றது. கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து உலகம் சிறிது சிறிதாக மீட்சியடைந்து கொண்டுவரும் இந்நிலையில் இப்பொருளாதார நெருக்கடியானது மேலும் பல நெருக்கடி மிக்க நிலமைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது. பெருந் தொற்றினால் ஏற்கனவே பலவீனமடைந்துள்ள உலகப் பொருளாதாரமானது பல அதிர்ச்சியான தாக்குதல்களால் மேலும் பலவீனப்பட்டு வருகின்றது. எதிர்பார்த்ததை விட உலகளவில் உருவாகியுள்ள உயர் பணவீக்கம், உக்ரைன் போர், உணவு மற்றும் பண்டங்களின் விலையேற்றம், நிலவியல்சார்ந்த அரசியல், நிச்சமற்ற பொருளாதார நிலமைகள், வறுமை மற்றும் பட்டினி ஆபத்து போன்றன இதற்கான அடிப்படைக் காரணிகளாக அடையாளப்படுத்தலாம். இந்தக் காரணிகள் உலகப் பொருளாதாரத்தை வெறும் 3.1 வீத வளர்ச்சியை மாத்திரம் 2022 மற்றும் 2023 காலப்பகுதியில் எட்டலாம் என மீள்கணிப்புக்குள்ளாக்கியுள்ளன. இது 2022 ஜனவரியில் எதிர்வுகூறப்பட்டதிலிருந்து முறையே 0.9 மற்றும் 0.4 வீதம் குறைவானதாகும்.

இதேவேளை எமது தாய்நாடான இலங்கைத் திருநாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. 1948இல் இலங்கை சுதந்திரமடைந்த போது ஆசியாவில் பலம்வாய்ந்த பொருளாதார மையங்களுள் ஒன்றாக அது இருந்தது. ஆனால் அதன் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையையே கடந்து வந்துள்ளது.

இலங்கையில் காணப்படுகின்ற தற்போதைய இக்கட்டான பொருளாதார நிலைமை, பல வருடங்களாக தொடர்ந்து வந்துள்ள திறமையற்ற முகாமைத்துவம், ஊழல், தூரநோக்கற்ற கொள்கையாக்கம், நல்லாட்சிக்கான மூலக்கூறுகளை இழந்தமை போன்றனவற்றின் விளைவாகும். இலங்கை மத்திய வங்கியில் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தின் பற்றாக்குறை மற்றும் சர்வதேச மூலதனச் சந்தையில் நுழைய முடியாது போனமை என்பன வரலாற்றில் என்றுமே காணாத கடன்சுமைக்கு வழிவகுத்துள்ளது. சரியாக முகாமைப்படுத்தப்படாத கடன்கள், வரிவிலக்கு என்பன வரவுசெலவுத்திட்டத்தில் இருக்கின்ற துண்டுவிழும் தொகையை மேலும் விரிவுபடுத்தியுள்ளன. இரசாயன உர இறக்குமதித் தடை மற்றும் திடீரென இலங்கை ரூபாவை மிதக்கவிட்டமை போன்றன இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாயின. இந்நாட்டின் பிரதான வருமான மூலங்களான உல்லாசப் பயணத்துறையும் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதியும் அண்மைக்காலமாக 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், அவற்றைத் தொடர்ந்து 2020இல் ஏற்பட்ட கோவிட்-19 போன்ற உள்ளக மற்றும் வெளியகக் காரணங்களினால் பாதிப்படைந்துள்ளன. தற்போது இந்தப் பொருளாதார நெருக்கடி ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி போன்றவற்றில் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த அடிப்படையில் குறிப்பாக முஸ்லிம் கல்விமான்கள் பொதுவாக முஸ்லிம் சமூகம் இந்த இக்கட்டான நிலையின் போது அவர்களின் பொறுப்பு அல்லது பங்களிப்பு என்ன? இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்கான அறிவியல் பங்களிப்பை வழங்குவது முஸ்லிம் புத்திஜீவிகளின் அடிப்படைப் பொறுப்பாகும். இதனடிப்படையில் முஸ்லிம் அறிஞர்களும் ஆய்வாளர்களும் இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான மாற்று வழிகளை முன்வைக்கலாம். அவர்கள் பொருளாதாரம் ஒரு சிலரிடம் மாத்திரம் சுழன்று கொண்டிருக்காமல் நீதியான முறையில் மக்கள் மத்தியில் அதனைச் சுழற்சிக்குட்படுத்துவதற்கான வழிமுறைகளை கருத்துரைக்கலாம். வட்டியற்ற வங்கி முறை பற்றிய ஆழமான மற்றும் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். சமூகத்தில் வலுவிழந்துள்ளவர்களை வலுவூட்டி, அவர்களை பொருளாதார ரீதியாக மேன்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான வழிமுறையாக 'ஸகாத்தை' அறிமுகப்படுத்தலாம். சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் வளஉற்பத்தியை மேற்கொண்டு, அதனை எவ்வாறு உச்ச பயனுள்ளதாக அமைக்க முடியும் என விதைந்துரைக்கலாம். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் அறபிகள் மற்றும் முஸ்லிம் உல்லாசப்பயணிகளை கவர்வதற்கான வழிமுறைகளைக் காட்டிக் கொடுக்கலாம். இஸ்லாத்தின் பொருளாதார ஆக்க சாதனங்களான ஸகாத், ஸதகா, வக்ஃப், வஸிய்யா, ஹிபா மற்றும் வராஸா என்பவற்றை உச்சபயன்பாடு தரத்தக்க வகையில் பயன்படுத்துவதற்கான முன்மொழிவுகளை முன்வைக்க முடியும்.

மேலே கூறப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டே இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 9ஆவது சர்வதேச மாநாட்டின் கருப்பொருள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கருப்பொருள் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் பலரைக் கவர்ந்துள்ளது. அதனால் உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்கள் 74 ஆய்வுக் கட்டுரைகளை பல்வேறு விடயதானங்களை உள்ளடக்கி, தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் அறபு மொழிகளில் அனுப்பி வைத்திருந்தனர். அவற்றுள் 49 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதற்குப் பொருத்தமானவை என உள்ளக மற்றும் வெளியக மதிப்பாய்வாளர்களால் விதந்துரைக்கப்பட்டன. இன்றைய பொருளாதார நிலமையைக் கருத்திற் கொண்டு, ஏற்பாட்டுக் குழு இம்முறை இவ்வாய்வரங்கை நிகழ்நிலை முறைமையில் இடம்பெறுகின்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :