கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்பான ”ஸஹிரியன் பழைய மாணவர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் மெற்ரோபொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன்-02 கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் இன்று (21) வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.
ஸாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து 29 அணிகள் பங்கு கொள்ளும் 07 ஓவர்கள் கொண்ட குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்ப நிகழ்வுகள் கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது. இவ்வாரம்ப நிகழ்விற்கு, பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், பிரதான அனுசரணை வழங்கும் மெற்றோபொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டார்.
மேலும் கெளரவ அதிதியாக கல்முனை கல்விவலய உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான என்.எம்.மலிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோரும் விசேட அதிதியாக பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எஸ்.முஹம்மத், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், அனுசரணையாளர்கள் உட்பட ஏற்பாட்டுக் குழுவினர் கலந்து கொண்டனர். இன்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் திங்கட்கிழமை 24ம் திகதி வரை இறுதிப்போட்டியுடன் மெற்ரோபொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன்-02 நிறைவடையவுள்ளது.
மெற்ரோபொலிடன் ஸஹ்ரியன் பிரிமியர் லீக் சீசன்-02 போட்டியில் சம்பியன்களாகத் தெரிவு செய்யப்படும் அணிக்கு 25,000 ரூபா பணப்பரிசும் சாம்பியன் கிண்ணமும், இரண்டாமிடத்தைப்பெறும் அணிக்கு 15,000 ரூபா பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment