கல்முன மாநகர சபையின் 55 ஆவது பொதுச் சபை அமர்வு கடந்த புதன்கிழமை (26) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சாய்ந்தமருது பொலிவேரியன் வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை அமைப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரணையை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் சமர்ப்பித்திருந்தார். முதல்வரின் அறிவுறுத்தல்களுடன் மையவாடி அமைப்பதற்கான பிரேரணை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
அத்துடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் விலங்கறுமனை ஒன்றை அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டிருக்கின்ற காணியை கல்முனை மாநகர சபைக்கு விடுவித்துத் தருமாறு பிரதேச செயலாளரைக் கோரும் தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் காலம்சென்ற உறுப்பினரான அமரர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அவர்களின் மறைவுக்கான அனுதாபப் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணையை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் சமர்ப்பித்து ஆரம்ப உரை நிகழ்த்தினார்.
இந்த அனுதாபப் பிரேரணை மீது உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ஏ.ஆர்.அமீர், சி.எம்.முபீத், பொன் செல்வநாயகம், சட்டத்தரணி ரொஷான் அக்தர், சந்திரசேகரம் இராஜன், சுபைல் அஸீஸ் ஆகியோரும் உரையாற்றியதுடன் முதல்வர் பிரேரணையை நிறைவுறுத்தி உரையாற்றினார்.
மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முயற்சிகளுக்கு வியாபார உரிமம் வழங்குவதற்கான கட்டணத்தில் சலுகையளிப்பதற்கான பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான பிரேரணையை கௌரவ உறுப்பினர் சந்திரசேகரம் இராஜன் சமர்ப்பித்திருந்தார்.
தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் முன்னெடுக்கப்படும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான பிரேரணையை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், சந்திரசேகரம் இராஜன் ஆகியோர் இணைந்து கொண்டு வந்திருந்தனர். இதன்போது கௌரவ உறுப்பினர் எம்.குபேரன் அவர்களும் பிரேரணையை ஆதரித்து உரையாற்றினார்.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முஹம்மது அலியார் கலீலுர் ரஹ்மான் அவர்கள் தனது கன்னியரையை நிகழ்த்தினார்.
அதேவேளை, கௌரவ உறுப்பினராக இருந்து அமரத்துவமடைந்த புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அங்கத்துவம் வகித்த மாநகர சபையின் பொது வசதிகள் நிலையியற் குழு அங்கத்தவர் வெற்றிடத்திற்கு உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், கடந்த 54 ஆவது சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக மருதமுனை மேட்டுவட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்திட்டங்களில் வசிக்கும் மக்களின் நலன்கருதி அங்கு மையவாடி ஒன்றை அமைப்பதற்கென 03 ஏக்கர் காணியை உடனடியாக ஒதுக்கீடு செய்தமைக்காக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி அவர்களுக்கு மக்கள் சார்பில் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
இவற்றுடன் மற்றும் சில விடயங்களும் இந்த அமர்வில் ஆராயப்பட்டன.
அனுதாபப் பிரேரணை நிகழ்வை அவதானிப்பதற்காக அமரர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அவர்களின் புதல்வர் உள்ளிட்ட உறவினர்கள் கௌரவ முதல்வரின் அழைப்பின் பேரில் சமூகமளித்திருந்தனர்.
அத்துடன் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் அவர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலரும் சமூகமளித்திருந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் சார்பிலும் பிரதிநிதிகள் சிலர் தமது விடயதானத்தை அவதானிப்பதற்காக வருகை தந்திருந்தனர்.
0 comments :
Post a Comment