சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சிறுவர் தின விழா கடந்த சனிக்கிழமை (01) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இவ் விழாவானது, “அனைத்து சிறார்களுக்கும் சிறந்த எதிர்காலம்” என்ற தொனிப்பொருளில் இவ்வருடம் இடம்பெறும் சர்வதேச சிறுவர் தினத்தை வருங்கால சிறுவர் சந்ததியினருக்கு சமூக நல்லிணக்கத்தை கற்றுக் கொடுக்கும், முகமாக நான்கு சமூகங்களையூம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், வேறுபட்ட பாடசாலைகளை ஒன்றினைத்து பல நிகழ்வுகளை உள்ளடக்கியதாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது அம்பாரை மாவட்டத்தில் நீண்டகாலமாக பல சமூக சேவைகளை மிகவும் காத்திரமாக செய்து வருகின்ற அரச சார்பற்ற நிறுவனமான கப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் மற்றும் உத்தியோத்தர்களின் தலைமையில் நடைபெற்றது. இச் சிறுவர்தின நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.அமீர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக சம்மாந்துறை தேசிய பாடசாலையின் அதிபர் என்.எம் நாசீர் அலி, விஷேட அதிதிகளாக சம்மாந்துறைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத், கப்ஸோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர். அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் நான்கு இனங்களையூம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் “மீன்பாடும் மட்டக்களப்பு” எனும் புனைப் பெயருடன் தமிழ் மாணவர்களும், அம்பாறை காவன்திஸ்ச மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்களும், சம்மாந்துறை சொறிக்கல்முனை Holly Cross பாடசாலையில் இருந்து கிறிஸ்தவ மாணவர்களும் மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை முஸ்லிம் மாணவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதற்கமைவாக, அந் நான்கு பாடசாலைகளுக்கிடையிலான கிறிக்கட் போட்டி உட்பட யானைக்கு கண்வைத்தல், சாக்கு ஓட்டம், பந்து பரிமாரல் , வலயம் வீசுதல் , நீர் ஊற்றல், கயிறு இழுத்தல்மற்றும் சங்கீதக் கதிரை போன்ற விளையாட்டு நிகழ்வூகளும் இடம்பெற்றதுடன் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் இந்நிகழ்வுகளில் பங்குபற்றினர்.
இந்நிகழ்வின் விஷேட அம்சமாக ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக்கோப்பைகளும், பங்கு பற்றிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment