தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர்களான எம்.சி.எம். அஸ்வர், ஏ.எம். நஹ்பிஸ், எஸ்.எல்.எம். சஜீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொது நூலகர்கள், பாடசாலைகளின் நூலகர்கள், கல்வியற் கல்லூரி நூலகர்கள், தொழில்நுட்ப கல்லூரி நூலகர், இலங்கை உயர் தொழிநுட்பவியற் கல்லூரி நூலகர், வலையக் கல்விப் பணிமனைகளைச் சேர்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் குறித்த செயற்றிட்டத்தின் முக்கியத்துவம் குறித்துச் சிலாகித்துப் பேசினர். இதன்படி நூலக மற்றும் தகவல் வலையமைப்புத் திட்டத்தின் இணைப்பாளர் கலாநிதி எம்.எம். மஷ்ரூபா இணைய வலையமைப்பினூடாக தென்கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து வகையான நூலகர்களையும் ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதன் அவசியம் பற்றிக் குறிப்பிட்டார். இதன் மூலம் இப்பிரதேசத்திலுள்ள நூலகர்களை வலுவூட்டுவதுடன் சிறந்த சேவையினை வாசகர்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயித்தீன் தனது உரையின் போது, உத்தேச நூலகத் தகவல் வலையமைப்பின் ஊடாக இப்பிரதேச நூலகங்களின் சேவை வழங்கல் திறனை மேம்படுத்தி, பிரதேசத்துக்குரிய ஆவணக் காப்பகங்களை குறித்த நூலகங்களினூடாக ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய பல்கலைக்கழக உபவேந்தர், சமகாலத்தில் நூலகங்களுக்கிடையேயான தகவல் வலையமைப்பு என்ற விடயம் மிகவும் அவசியமானது என்றும் இதன் மூலம் இப்பல்கலைக்கழகத்துக்கும் பல்கலைக்கழகத்தினைச் சுற்றியுள்ள சமூகத்துக்கும் இடையே உள்ள இடைவெளி குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். பல்கலைக்கழகம் தனது சமூகப் பங்களிப்பினை நிறைவேற்றிக்கொள்வதற்கு இச்செயற்றிட்டம் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் இத்திட்டம் மிகவும் திறம்பட இயங்குவதற்கு தன்னாலான முழு ஒத்துழைப்பினையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்வின் முடிவில் குறித்த நூலக மற்றும் தகவல் வலயமைப்புச் செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இக்குழுவில் நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து அங்கத்தவர்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, நூலக மற்றும் தகவல் வலையமைப்பின் குறிக்கோள்கள், எதிர்பார்க்கப்படும் அடைவுகள், இலக்குக் குழுக்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் குறித்த திட்டத்தின் நிலைபேறான தன்மை போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன.
0 comments :
Post a Comment