கடந்த 2021.12.15 ஆம் திகதி கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட பணிப்புரைக்கு அமைய 06, 07,10,11 ஆகிய தரங்களுக்கான இஸ்லாம் பாட புத்தங்கங்கள் விநியோகம் நிறுத்தப்பட்டதோடு ஏற்கனவே மாணவர்கள் கற்றுக்கொண்டிருந்த குறித்த தரங்களுக்கான புத்தகங்களும் மாணவர்களிடம் இருந்து மீளப்பெறப்பட்டது. திருத்தங்களின் பின்னர் மீண்டும் மாணவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தும் இன்னும் இழுத்தடிப்பு செய்வது சாதாரண தர மாணவர்களை நேரடியாக பாதித்துள்ளது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.
நீதிக்கான மய்யத்தின் தலைமையகத்தில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமையினால் பாடசாலை மாணவர்களின் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நீதிக்கான மய்யம் மனித உரிமை ஆணைக்குழு கொழும்பு தலைமையகத்தில் முறைப்பாடொன்றினை இது தொடர்பில் செய்துள்ளது. குறித்த இச்செயற்பாடு இடம்பெற்று இதுவரை சுமார் பத்து மாதங்கள் கடந்தும், ஆணையாளர் வாக்குறுதி அளித்ததற்கிணங்க இதுவரையில் புதிய இஸ்லாம் பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் பாரிய சவால்களை எதிர்நோக்குவதோடு இன்னும் சில மாதங்களில் நடைபெறப்போகும் சாதாரண தரப் பரீட்சை எழுதுவதிலும் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த தரங்களுக்கான இஸ்லாம் பாட புத்தக பதிப்பாசிரியர் குழு, எழுத்தாளர்கள் குழு, கண்காணிப்பு குழு என எந்தவொரு குழுவிடமும் எந்த அறிவிப்போ, கருத்துக்களோ, ஆலோசனையோ பெறப்படாமல் திடீரென இப்பணிப்புரை கல்வி வெளியீட்டு ஆணையாளரினால் வழங்கப்பட்டுள்ளது. வேறு நோக்கங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட இப்பணிப்புரையானது சட்ட விரோதமானது. இவ்விடயமானது முஸ்லிம் மாணவர்களின் சமத்துவ உரிமை, மத சுதந்திரத்தை மீறுவதாக அமைந்துள்ளது. மேலும் மேற்படி முறைப்பாட்டில் நீதிக்கான மய்யம் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையினை மீளப்பெற ஆலோசனை வழங்குமாறும் புத்தங்கங்களை உடனடியாக மீள விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமை ஆணையகத்திடம் கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் திருமலை மாவட்ட இம்ரான் மஹ்ரூப் மற்றும் அனுராதபுர மாவட்ட இசாக் ரஹ்மான் ஆகிய எம்.பிக்களே வாய்திறந்துள்ளனர். ஏனைய முஸ்லிம் எம்பிக்களோ அல்லது முஸ்லிம் தலைவர்களோ வாய்திறக்க வில்லை. காரணமாக ஆளாளுக்கு ஒவ்வொரு கதை கூறுகிறார்கள். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. இதுவிடயமாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வென்றும் என்றார்.
இந்த ஊடக சந்திப்பில் நீதிக்கான மய்யத்தின் பிரதித்தலைவர் யூ.கே.எம். றிம்ஸான், செயலாளர் கலாநிதி றியாத் ஏ மஜீத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment