சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) யில் முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் பாவனையைத் தடுக்கும் பொருட்டு, போதைப் பொருள் எதிர்ப்புப் பேரணி பாடசாலையிலிருந்து ஆரம்பித்து சாய்ந்தமருதிலுள்ள முக்கிய பிரதான வீதிகளின் ஊடாக வலம் வந்தது.
இந்நிகழ்வு, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம் இல்லியாஸ் தலைமையில், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பூரண அனுசரணையுடன் நேற்று இடம்பெற்றது.
போதைப்பொருள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணியின் போது, 'போதை மேல் போதை கொண்டால் அழிவே கூடும்', 'ஒழிப்போம் ஒழிப்போம் போதையை ஒழிப்போம்', 'புகைத்தலைத் தடுப்போம், மது பாவனையை ஒழிப்போம், ஐஸ் பாவனையைத் தடுப்போம், போதைக்கு எதிராக குரல் கொடுப்போம்', 'போதையில் மோதி பாதையை மாற்றாதே!' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளைச் சுமந்த வண்ணம் மாணவர்கள் சத்தமாக குரல் எழுப்பியும் வீதியில் வலம் வந்தனர்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 'சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்' எனும் தொனிப் பொருளில் இடம் பெற்ற இச்சிறுவர் தின நிகழ்வில், போதைப் பொருளுக்கான இந்த எதிர்ப்புப் பேரணி பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 5 மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
சகல மாணவர்களும் அதிபர் உட்பட்ட ஆசிரியர் குழாத்தினால் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டதோடு, தரம் 1 தொடக்கம் தரம் 2 மாணவர்களுக்காக பலூன் உடைத்தல், சமநிலை ஓட்டம், போத்தலில் நீர் நிரப்புதல், சங்கீதக் கதிரை / பந்து மாற்றுதல் போன்ற போட்டிகளும், தரம் 3 தொடக்கம் தரம் 4 மாணவர்களின் ஓவியக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன,
தரம் 5 மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அறிவுக் களஞ்சிய போட்டியும் இதன்போது நடைபெற்றது. அதில் சிறப்பாக தங்களது அறிவாற்றலை வெளிப்படுத்திய மாணவர்கள், போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்கள், கலை நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் உட்பட பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை அதிபரினால் நினைவுப்பொருட்கள் வழங்கியும் மாணவர்களைக் கௌரவப்படுத்தி, உற்சாகப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது முதியோர் தினமும் அனுஷ்டிக்கப்பட்டு, முதியோர்களும் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
0 comments :
Post a Comment