தலைநகர் போன்ற பிரதேசங்களில் உள்ளவர்களை போன்று கிழக்கு பிரதேச இளைஞர்கள் ஆங்கிலத்தை நன்றாக கற்றுக்கொள்வதன் மூலமும், திறமைகளை சரியான வகையில் விருத்தி செய்து கொள்வதன் மூலமும் எதிர்கால சவால்களை ஒழுங்காக சந்திக்க முடியும். பட்டங்களை முடித்திருந்தும் ஆங்கிலத்தில் புலமையில்லை என்றால் இன்றை காலகட்டத்தில் அது பிரயோசனமற்று போகிவிடும் என கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும், மெட்ரோ பொலிட்டன் கல்லூரி தவிசாளருமான கலாநிதி சிராஸ் மிராசாஹிப் தெரிவித்தார்.
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய பாடசாலை முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச ஆசிரியர் தின விழா இன்று (06) பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், ஆங்கில கல்வியை சிறப்பாக நேரிய முறையில் கற்பதனூடாக தொழில் வாய்ப்புக்களை பெறுவது மட்டுமின்றி சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க முடியும். ஆசிரியர்கள் அப்படியான கல்விசூழ்நிலையை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அண்மையில் எனது கல்லூரிக்கு ஆட்சேர்ப்பு செய்ய நான் நேர்முகத்தேர்வொன்றை நடத்தியபோது கிழக்கு பிராந்திய பட்டதாரிகளின் ஆங்கில புலமையை அறிந்து கொண்டேன். சர்வதேச தொழிற்சந்தைக்கும், இலங்கையின் உள்ளக மேம்பாட்டுக்கும் ஒழுக்கமும், கல்வியறிவும், ஆங்கில புலமையும் அவசியம் என்றார்.
இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.என். அப்துல் மலீக், ஆசிரிய ஆலோசகர் ஏ.சஹரூன், கிராம நிலதாரி ஏ.எல்.நாஸர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சங்க உறுப்பினர்கள், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மெட்ரோ பொலிட்டன் கல்லூரி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment