எல்லா முஸ்லிம் கட்சிகளும் ஒரே அணியில் இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்து எனும் கொள்கையை கொண்டுள்ள தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் நிலைப்பாடு அண்மையில் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியாவுக்கு 13ஐ அமுல்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து கடிதம் எழுதிய விடயத்தில் மெய்ப்பிக்கப்பட்டது. அப்போது அந்த கடிதத்தில் முஸ்லிம் கட்சிகள் கையெழுத்திட கூடாது என கிழக்கின் கேடயம் பல்வேறு வேலைத்திட்டங்களை கிழக்கின் பல பிரதேசங்களிலும் முன்னெடுத்தது. அதன் பிரதிபலனாக மக்களின் குரலுக்கு செவிசாய்த்து முதல் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையெழுத்திடும் அந்த அணியிலிருந்து வெளியாகியமை பாராட்டக்கூடிய விடயம் என கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
இன்று (08) அக்கரைப்பற்று தனியார் மண்டபத்தில் தமிழ் லெட்டர் வலையமைப்பின் ஏற்பாட்டில் வலையமைப்பின் பணிப்பாளர் ஏ.எல். றமீஸ் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இடம்பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு விழாவில் விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கிழக்கின் கேடயம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களின் பயனாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் அந்த கடிதத்தில் ஒப்பமிடாமல் தவிர்ந்துகொள்ள வேண்டிய நிலை உருவானது. முஸ்லிம் கட்சிகளில் இப்போது சமூக நல அரசியல் ஒழிந்து குடும்ப அரசியல் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இது சமூகத்திற்கு சிறந்ததல்ல. கடந்த காலங்களில் தமிழீழ புலிகளும் சமூகத்தை மீட்கும் கொள்கையுடன் இயக்கம் ஆரம்பித்து பின்னர் வந்த காலங்களில் தனது இனத்தை பாதுகாப்பதாக கூறி ஏனைய இன அப்பாவி உயிர்களை கொன்று இலக்கை குறுகிய வட்டத்தில் வரையறுத்து கொண்டமையால் தோல்வியை சந்தித்து அழிந்து போனது வரலாறு. இதுதான் இனிவரும் காலங்களில் முஸ்லிம் கட்சிகளுக்கும் நடக்கும். சமூக பொறுப்பு இல்லாத தலைவர்களை மக்கள் ஓரங்கட்டும் காலம் வந்துள்ளது. நியாயம், தர்மம் வெல்லும் காலம் தொலைவில் இல்லை. எங்களை இனியும் ஏமாற்றமுடியாது என மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்பதற்கு இலங்கையில் நிறைய சம்பவங்கள் அண்மை காலங்களில் நடந்து வருகின்றது என்றார்.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரெத்தினம், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸீல் உட்பட முக்கியஸ்தர்கள், கல்விமான்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment