சாய்ந்தமருது பொலிவேரியன் வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் 55ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு புதன்கிழமை (26) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றபோது சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினரான ஏ.ஆர்.எம்.அஸீம் அவர்கள் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.
இதன்போது கருத்துரைகையில் அவர் கூறியதாவது;
பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்த மக்களுக்காக கரைவாகுப்பற்று வயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இவ்வீட்டுத் திட்டத்தில் சுமார் 600 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இப்பகுதியில் இதுவரை மையவாடி ஒன்று அமைக்கப்படாத காரணத்தினால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மையவாடிகளுக்கு ஜனாஸாக்களை கொண்டு சென்று, அடக்கம் செய்வதில் இம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் இப்பகுதிக்கென தனியான மையவாடியொன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற அவசியம் உணரப்பட்டிருக்கிறது. அங்கு வாழ்கின்ற மக்கள் இதனை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக 02 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி, ஒதுக்கித் தருவதற்கு எமது பிரதேச செயலகம் தயாராக இருக்கிறது. ஆகையினால் எமது மாநகர சபை இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து மாநகர முதல்வரின் அறிவுறுத்தல்களுடன் மையவாடி அமைப்பதற்கான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் விலங்கறுமனை ஒன்றை அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டிருக்கின்ற காணியை கல்முனை மாநகர சபைக்கு விடுவித்துத் தருமாறு பிரதேச செயலாளரைக் கோரும் தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டது.
இவை தவிர மற்றும் பல முக்கிய விடயங்கள் குறித்தும் இந்த அமர்வில் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முஹம்மது அலியார் கலீலுர் ரஹ்மான் இதன்போது தனது கன்னியரையை நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment