தமது பொறுப்பிலிருந்த பொருளாதாரத்தை சரிந்துபோகவிட்ட ஒருவருக்கு தொடர்ந்தும் பொதுமக்களுடைய பணத்தைச் செலவிட அனுமதிக்கமுடியாது என்று லக்ஸ்மன் கிரியெல்ல கூறிய கருத்தும் மறுக்கமுடியாதது.
உண்மையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்படவோ அல்லது அவர்கள் பொது நிதியில் பராமரிக்கப்படவோ தேவையில்லை! அவர்கள் மீது அச்சுறுத்தல்கள் ஏதும் இருந்தால் அதன் மதிப்பீட்டு அடிப்படையில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படலாம்.
கடந்த பல தசாப்தங்களில் இந்நாட்டின் எந்த அரசியல்வாதியும் ஏழையாக இறந்ததில்லை. முன்னாள் ஜனாதிபதிகள் தம்மைத்தாமே நன்கு கவனித்துக் கொள்ள முடியும்.
பாரதூரமான குற்றம் ஒன்றை பாவம் என்று மட்டும் சாதாரணமாக எடுத்துக்கொண்டது கிரியெல்ல அவர்களின் தவறாகத் தெரிகிறது. நாட்டின் பொருளாதாரத்தை அழித்து, மக்களின் மீது சொல்லொணா வேதனையை சுமத்தியது சந்தேகத்திற்கு இடமின்றிய பாவச்செயலொன்றாகும். அதன் குற்றப்பரிமாணம் என்பது பூசிமறைத்துவிடக் கூடிய ஒன்றல்ல அது ஒரு பயங்கரமான பொருளாதார அழிப்பு சார்ந்த குற்றமாகும். இத்தகைய குற்றங்களைச் செய்பவர்கள் கோவில்கள் அல்லது பிற வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று பாவமன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம். அதேநேரம் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது கட்டாயமானதாகும்.
அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வார்கள் என்பதைனையே, கிரியெல்ல அவர்களின் கருத்து பிரதிபலிக்கிறது. சில எதிரிகளை சிறையில் அடைக்க அரசியல்வாதிகள் ஒருபோதும் பூரண முயற்சி எடுக்கமாட்டார்கள்;. அவ்வாறு முயற்சிகள் எடுத்தாலும், அவை வெறும் நாடகங்களாகத்தான் இருக்கும்.
தற்போதைய எதிர்க்கட்சியிலுள்ள பாரளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்துக்கொண்டிருந்த 'யஹபாலன' அரசாங்கம், வேறு முக்கிய வேலையாக இருப்பதாக பாசாங்கு செய்துகொண்டு, தமது எதிரிகளுக்கு தப்பித்துச்செல்ல வழி அமைத்துக் கொடுத்தார்கள் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!
அதன் தலைவர்களுக்கு இக்கொள்கை பயனளித்தது. அதன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஆட்சியின் இறுதிக்காலங்களில், ராஜபக்சக்களுடன் இணைந்துகொண்டதன்மூலம், அடுத்தமுறை தாம் அரசியலில் ஓரங்கட்டப்பட்டுவிடக்கூடாது என்பதை உறுதிசெய்துகொண்டார்: பின்னர், யஹபாலன அரசால் சிறையிலடைக்கப்போவதாக சூளுரைக்கப்பட்டு பின்னர் பாதுகாக்கப்பட்ட ராஜபக்சக்கள், தமது பலத்தை உபயோகிப்பதன்மூலம் பிரதமாயிருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஜனாதிபதியாக ஆக்கிகொண்டனர்.
அதன் பின்னர், ஒப்பந்தப்படி, ராஜபக்சக்கள் பதவிக்கு வந்ததும், கருவூலப் பத்திர மோசடிகளை விசாரிக்க முயலவில்லை. மற்றும், இந்த மோசடிகளில் சம்பந்தப்பட்ட அனைத்து வஞ்சகர்களும் ஒவ்வொருவராக விடுதலை ஆகிச் சென்றாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
பொதுச் சொத்துக்களைத் திருடுபவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வார்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் யஹபாலன அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் பின்னர் யஹபாலன அரசைச் சேர்ந்த வஞ்சகர்களை நீதிக்கு முன் கொண்டு வருவார்கள் என நம்பி ராஜபக்சர்களுக்கும் வாக்களித்தார்கள். இப்போது, அதேமக்கள் , இருதரப்பினர்களாலும் ஏமாற்றப்பட்டு, நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் அடையும் வேதனை என்பது, மோசடி செய்பவர்களுக்கு வாக்களித்த பாவத்திற்கு கிடைத்த தெய்வீக தண்டனையாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும், ஜனாதிபதியாக தாம் செய்த தவறுகளுக்கு, கோட்டாபய அனுபவிக்கும் அவமானங்கள் அத்தனையும் நியாயமானவை. ஆனால் நாட்டை சீரழித்த விடயத்தில் அவரை மட்டும் தனிமைப்படுத்த முடியாது.
பொருளாதார முறைகேடு, வரையறை இல்லாமல் கடன் வாங்குதல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல், ஊழல்செய்தல், தேவையற்ற செலவுகள் செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களால் கோட்டாபயவிற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் அனைவரும் இகழப்படுபவர்கள்தான். பொருளாதாரத்தை தலைகுப்புற வீழ்த்திவிட்டதாகக் கருதப்படும் அடைக்கமுடியாத கடன் என்பது சமீபத்தில் தோன்றிய ஒன்றல்ல. பல்வேறு தசாப்தங்களாக, எல்லா ஜனாதிபதிகளின் ஆட்சிகளின்போதும் நாட்டின் பொருளாதாரம் என்பது கடன் அழுத்தங்களை அனுபவித்துக்கொண்டு வந்திருந்தும், அதற்கு எதிராக அவர்கள் எடுத்த முயற்சிகள் புறக்கணிக்கத் தக்கனவாவே அமைந்திருந்தன. ஒரு சிலரைத் தவிர, தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும், தத்தமது செயலுக்கு ஏற்றவாறு, பொருளாதார அழிவுக்குப் பங்களித்தனர்.
தம்மைத்தாமே புனிதமானவர்களாகக் கருதும் SJB எம்.பி.க்களில் பெரும்பாலானோர் தாம் அங்கம் வகித்த யஹபாலன அரசாங்கம் பெருமளவு கடன் வாங்கி, அதன் மூலம் நாட்டின் கடன் சுமையை மோசமாக்கியபோது, ஊழல்கள் அதிகரிப்பதையும், தேசிய பாதுகாப்பு புறக்கணிக்கப்படுவதையும் சும்மா பார்த்துக்கொண்டே இருந்தனர். கருவூலப் பத்திர மோசடி செய்பவர்களையும் பிற வஞ்சகர்களையும் பாதுகாப்பதில் அவர்கள் வெட்கப்படாமல் ஈடுபட்டனர்.
ஊழல், தவறான பொருளாதார நிர்வாகம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்காக ராஜபக்சக்களை வசைபாடுவது JVP தான். இருப்பினும், 2005 இல் JVP இன் உதவியில்லாமல் , மஹிந்தராஜபக்ச ஜனாதிபதி தேர்தலை வென்றிருக்க முடியாது. 1980களின் பிற்பகுதியில், அவர்களின் இரண்டாவது எழுச்சி பொருளாதாரத்தை முடக்கியதுடன் பல பில்லியன் ரூபாய்களுக்கு அரச சொத்துக்களை அழிக்கவும் வழிவகுத்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலிகளை ஆதரித்தபோது, அவர்களின் பயங்கரவாதம் நாட்டின் பொருளாதாரத்தை பாதித்ததுடன் ஆயிரக்கணக்கான உயிர்களையும் அழித்தது.
SLFP தனித்தும் UNP, SLPP ஆகியவற்றுடன் இணைந்தும் நாட்டின் அழிவுக்கு பெரும் பங்களிப்பைச் செய்தது.
UNP பற்றி எதைச் சொல்வது? அது இப்போது வெட்கமின்றி ராஜபக்சக்களுடன் ஏறி பயணம் செய்கிறது. கோபப்படும் நாட்டு மக்கள், அனைத்து 225 எம்.பி.க்களும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கோருவது இயற்கையே.
நாட்டிற்கு செய்த அநியாயங்கள் உள்ளாக கோட்டாபய மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன், கோட்டாபயவை குற்றம் சாட்டுவதன் மூலம் ஏனைய குற்றவாளிகளையும் தப்பிச் செல்ல அனுமதிக்க முடியாது.
நன்றி: The Island (22.10.2022)
மொழிபெயர்ப்பாளர்: இஸ்மாயீல் ஜமால்தீன் (பொறியியலாளர்)
0 comments :
Post a Comment