ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் சிறந்த பிரஜைகளை உருவாக்கும் பொறுப்புக்களை தோளில் சுமப்பதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர்அஹமட் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்தில் கூறியிருப்பதாவது,
குருகடாட்ஷம் காலத்தால் மதிக்கப்படக் கூடிய மிகப்பெரிய பொக்கிஷம். இவர்களின் அயராத அர்ப்பணிப்புக்கள் மற்றும் ஓயாத உழைப்புக்கள்தான் எம்பிள்ளைகளை நல்ல பிரஜைகளாக்குகின்றன.
சிறு வயது முதல் வாலிப வயது வரை மாணவர்களை பக்குவப்படுத்துவது அவ்வளவு சாமான்யமான விடயமில்லை. செய்யும் தொழிலின் திருப்திக்காகவும், எதிர்கால சமூகத்தின் நன்மைக்காகவுமே இத்தகைய அர்ப்பணிப்புக்களை ஆசிரியர்கள் செய்கின்றனர்.இந்த ஆசிரியர்களை நம்பியே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் ஒப்படைக்கின்றனர். அந்தளவுக்கு இத்தொழில் அமானிதமாக கருதப்படுகிறது.இந்த அமானிதங்களை நல்ல பெறுமானமாக்கும் சமூகத்தின் பாரிய உழைப்பாளிகள்தான் ஆசிரியர்கள்.
எனவே, இத்தினத்தில் எமக்கு கற்றுத்தந்தோரை கனம்பண்ணும் கடமை நமக்கு உள்ளதாகவே நான் கருதுகிறேன். கல்வியை ஊட்டி, கடமையை நோக்கி எதிர்காலத்துக்கு நகர்த்தும் ஆசிரியர்களின் போதனைகள் ஒரு போதும் வீண்போகாது.மாணவர்கள் இவ்விடயத்தில் மிக்க மரியாதையுடன் நடப்பதுதான் ஆசியர்களின் உள்ளங்களை குளிர வைக்கும்.ஆசானின் திருப்தியைப் பெறாத எவரும் வாழ்க்கையில் உயர முடியாது. எமக்கு முன்னால் சென்ற பல சரித்திரங்கள் இதை நிரூபித்துள்ளன. இதனால்தான், ஆசான்களை கௌரவிப்பதற்கென்றே ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தின் காவலர்களாக வளரவுள்ள மற்றும் வரவுள்ள நமது மாணவர்களை நெறிப்படுத்தும் ஆசிரியர்கள் மாணவர்களின் எந்த விடயங்களிலும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது.
0 comments :
Post a Comment