கல்முனை அல்ஹாமியா அரபுக் கல்லூரி அதிபர் மற்றும் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கமைவாக இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்கு சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமெளட் என்.அல்கஹ்தானி அவர்களை பிரதம அதிதியாக கலந்து கொள்ளச் செய்வதற்கான அழைப்பை விடுப்பதற்காக கல்முனை மாநகர பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் அவர்கள் தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (20) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் அவர்களுடன் சவூதி தூதுவர் மிகவும் நட்புறவுடன் கலந்துரையாடியதுடன் கல்முனை அல்ஹாமியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கான விருப்பதையும் வெளியிட்டார்.
அத்துடன் இக்கல்லூரியின் உட்கட்டமைப்பு தேவைகள் பற்றி கேட்டறிந்து கொண்ட தூதுவர் இவ்விஜயத்தின்போது அவற்றை நேரடியாக கண்டறிந்து தமது தூதாகத்தின் ஊடாக நிறைவேற்றித் தருவதற்கு உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இக்கல்லூரியின் விசேட திட்டங்களுக்கு உதவுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்திய தூதுவர், இந்த அரபுக் கல்லூரியின்
கல்வித்துறையை இன்னும் மேம்படுத்த வேண்டும் எனவும் இக்கல்லூரியில் இருந்து வெளியாகும் மாணவர்களுக்கு சவூதி அரேபியாவில் தகுந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக்
கொடுப்பதற்கு உதவுவதாகவும் தூதுவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள அறுகம்பை, பாசிக்குடா போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு விஜயம் செய்து, இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு விருப்பம் கொண்டிருப்பதாகவும் சவூதி அரேபிய தூதுவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகத்தின் ஊடாக முடியுமான உதவிகளை பெற்றுக் கொடுப்படுத்தற்கு முயற்சிகளை மேற்கொள்ள விருப்பதாகவும் அவர், பிரதி மேயர் ரஹ்மத் மன்சூரிடம் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபிய - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால நட்புறவு இன்னும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என குறிப்பிட்ட தூதுவர், இலங்கையின் அபிவிருத்திக்கும் கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றத்திற்கும் முடியுமான உதவிகளை செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலுக்கு போதிய நேரம் ஒதுக்கீடு செய்து சிநேகபூர்வமாக கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கு வாய்ப்பளித்தமைக்கும் கல்முனை அல்ஹாமியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தமைக்காகவும் சவூதி அரேபிய தூதுவருக்கு பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் இதன்போது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
0 comments :
Post a Comment