ஓட்டமாவடி சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளன



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி பிரதேச சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளன என கவலை தெரிவித்து ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் கே.யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்;?

தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் இடம்பெற்ற 54வது சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எமது பிரதேசத்திலே காணப்படும் தேவைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மக்களின் வாழ்விலே விடியல் இல்லை. தொடர்ந்து பிரச்சினைகளையே எதிர்கொள்ளக் கூடிய நிலையிலேயே மக்களும் பிரதேசமும் தொடர்ந்து தத்தளித்துக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம்.

பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கிய மக்களை உள்ளடக்கியதாக எமது பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் காணப்படுகின்றன. எனவே எமது பிரதேச சபைக்கான நிதிகளும் ஒதுக்கீடுகளும் கிடைக்க வேண்டிய நிலையில் துர்ப்பாக்கியமாக அவை கிடைக்காத நிலையில் எம்மால் அந்த பிரதேச மக்களுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றமை மிகவும் கவலையளிக்கின்றது.

குறிப்பாக எல்லைப்புறக் கிராமங்களான வாகனேரி, வடமுனை போன்ற வட்டாரங்களில் காணப்படும் பல கிராமங்கள் இன்றும் பல குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. வீதிகள் செப்பனிடப்படவில்லை, பொது மக்களின் குடி நீர்த் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. அத்துடன் மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள் தொடர்பான பிரச்சினைகளும் அங்கே பாரியளவில் காணப்படுகின்றது.

குறிப்பாக காட்டு யானைகளால் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதும் அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதும் உயிர்கள் பறிக்கப்படுவதும் தொடர்கின்றது. இன்று நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியை அறிகின்றோம். அதிலும் குறிப்பாக எல்லைப்புறக் கிராமங்களிலே வாழ்கின்ற மக்களே அதிகம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.

அதிலும் ஏழை விவசாயிகளின் விடயம் வருத்தமளிக்கின்றது. எனவே இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு எல்லைப்புற, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடியதான மக்களின் உயிர், உடமைகளைப் பாதுகாக்கக் கூடியதான யானை வேலிகள் அமைக்கப்படாத நிலைமை மிகவும் கவலைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது.

இது இன்று நேற்றைய பிரச்சினயல்ல. மிக நீண்ட காலப்பிரச்சினை இருப்பினும் அது இதுவரை நிறைவு செய்யப்படாமை எமக்கு வெட்கமான செயலாகக் காணப்படுகின்றது. எமது நிருவாக மட்டத்திலும் அரச மட்டத்திலும் இதே நிலையும் அரசு தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலையும் காணப்படுகின்றது.

குறிப்பாக இலங்கையில் காட்டு யானைளுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை, முக்கியத்துவம் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்படுவதில்லை. நாம் நேரடியாக அவதானித்த விடயம் யானை ஒன்று ஏதாவது காரணத்தால் இறந்தால் அது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் அங்கே ஊடகங்களும் அதிகாரிகளும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரும் ஒன்றின் பின் ஒன்றாக வருவதும் யானை தொடர்பில் ஆராய்ச்சி செய்வதும் விசாரணை செய்வதும் தொடர்கின்றது.

இதே முயற்சியும் ஊக்கமும் இந்த நாட்டின் பிரஜை யானை தாக்கி இறக்கின்ற போதோ அல்லது பாதுப்புறுகின்ற போதோ காட்டப்படுவதில்லை. எனவே காட்டு யானைகளின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுக்காக்க யானை வேலிகள் அமைக்கப்பட வேண்டும். அத்தோடு, யானைத் தாக்குதலால் பாதிக்கப்படும் மக்களுக்கான உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

உதவி வழங்கும் நடைமுறை இருப்பினும் எமது பிரதேசங்களில் அவை நடைமுறையில் இல்லையென்பது மிகக்கவலைக்குரிய விடயமாகும். அடுத்தது விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இயற்கை, வானத்தை நம்பி, கடன்பட்டு அதனால் நஷ்டமடைந்துள்ள ஒரு விவசாயி யானைகளின் அட்டகாசத்தினால் அதனால் ஏற்படும் அசௌகரியத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.

அவர்களுக்கான நஷ்;ஈடுகளை வழங்க பொறிமுறையொன்று அவசியனாகின்றது. அவர்களை வளப்படுத்திக் கொள்வதற்கான நிவாரணங்கள் கிடைக்கப்பெறவில்லை. இவ்வாறு தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். எல்லைப்புறங்களிலே விவசாயத்தை நம்பி வாழ்கின்ற மக்கள் தொடர்ச்சியாக ஏழ்மை நிலையிலே வாழ வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

எல்லைப்புறத்தில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொள்ள முயற்சி எடுக்கின்ற போது இயற்கையினாலும் இன்னோரன்ன காரணங்களாலும் குறிப்பாக யானையின் தாக்குதல் காரணமாகவும் பாதிப்புக்கள் ஏற்படுகின்ற போது அம்மக்களுக்கான இழப்பீடுகள் கிடைக்காமை மிகவும் கவலையளிக்கின்றது. அத்துடன், அப்பிரதேசத்தை நிருவாகிக்கின்ற நிருவாக உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளும் எமக்கு கவலையளிக்கின்றது.

மக்களுக்கு ஏதாவது அனர்த்தம் ஏற்படுகின்ற போது அல்லது யானை தாக்குதல் போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால், உடனடியாக அந்த பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தங்களை வந்து பார்ப்பதில்லை எனவும் தங்களின் குறைநிறைகளைக் கேட்பதில்லை என்றும் பராபட்சமாக வழி நடாத்துவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பல சந்தர்ப்பங்களை நாம் நேரடியாகவே பார்த்துள்ளோம். கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளருடைய பிரதேசத்திலே அதிகமான விடயங்களை நாம் அவதானித்துள்ளோம். கடந்த வருடம் பொத்தானையில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது. அப்போது எனது ஊடக நண்பரூடாக செய்தி கிடைக்கப்பெற்றது.

அங்கே ஒரு நபர் யானை தாக்கி இறந்து விட்டதாகவும் அந்த நபரின் அருகில் அவரது குடும்பத்தார் மாத்திரம் இருப்பதாகவும் அவர்களை மீட்கவில்லை என்றால் அந்த குடும்பற்றாரையும் யானை தாக்கி கொன்று விடும். தற்போது நாங்கள் சென்று மீட்டால் ஒரு பிரேதம் காலையில் மீட்போம் என்றிருந்தால் பல பிரேதங்களாகக் கூடிய இக்கட்டான நிலையில் இருப்பதாக அவரது உறவினரூடாகக் கிடைக்கப்பெற்ற செய்தியை ஊடக நண்பர் எமக்கு அறிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்திலே அந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான உயரதிகாரியைத் தொடர்பு கொண்டு இவ்விடயத்தை அறிவிக்கின்ற போது காட்டுக்குள் போய்க்கிடந்தால் யானை அடிக்கத்தானே செய்யும் என்று அந்த மக்களை இழிபடுத்தும் வகையிலும் அந்த இக்கட்டான நிலையினை உதாசீதனப்படுத்தும் வகையிலும் அந்த உயரதிகாரியின் பதில் அமைந்திருந்ததாக அந்த ஊடக நண்பர் மிகுந்த கவலையுடன் தெரிவித்தார்.

அத்தோடு இம்மாத ஆரம்பத்திலே குளத்துமடுவில் மக்கள் குடியிருப்புக்களையும் வாழ்வாதாரங்களையும் யானை தாக்கி நாசப்படுத்தி உண்ணக்கூட உணவின்றி சேதப்படுத்திச் சென்றிருந்த நிலையிலே அம்மக்கள் மூன்று நாட்களுக்கும் மேலாக அந்த அதிகாரியை அந்த மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்ததாக அவர்கள் என்னிடம் முறையிட்டார்கள்.

அந்த இடத்திற்கு நாம் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தோம். ஆனால் அம்மக்கள் தெரிவிக்கின்றார்கள் நாம் பாதிக்கப்படுகின்ற வேளையிலே அம்மக்களுக்கு சேவை செய்ய மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் தங்களுக்கான சேவையை சரிவரச் செய்வதில்லை என்று அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாறான அதிகாரிகளின் அதிகாரத்துஸ்பிரயோகம் இந்த எல்லைக் கிராமங்களிலே அதிகமாக இடம்பெறுவதாகவே குறிப்பிட வேண்டும். எல்லைப்புற கிராமங்களில் வாழும் மக்களுக்கான ஒரு வழிகாட்டி ஒரு ஆறுதல் உரிய நடவடிக்கை என தாமதமாகின்ற நிலை தொடர்கின்றது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :