மக்களுக்கு உதவுவதைவிட மக்களிடம் இருந்து உறிஞ்சி தம்மை வளப்படுத்திக் கொள்ளும் அரசு நம் நாட்டில் இருப்பது குறித்து அனைவரும், வெட்கமும் வேதனையும் அடைய வேண்டியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் என்பது பொதுமக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அக்கறை செலுத்தி பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கம் பல்வேறு புதிய வரிகளை அமுல்படுத்தி பொதுமக்களை உறிஞ்சத் தயாராகி வருகின்றது.
அரசாங்கம் கஷ்ட்டத்தில் இருக்கும் போது பொதுமக்கள் வரிகளை செலுத்தி அரசாங்கத்துக்கு உதவ வேண்டியது முக்கியம் தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இந்த அரசாங்கம் தங்களது கட்சி சார்ந்தவர்கள் சுகபோகம் அனுபவிப்பதற்கான எற்பாடு தொடர்ந்து முன்னெடுத்து அதனால் ஏற்படும் செலவுகளை ஈடு செய்ய பல்வேறு வரிகளை பொதுமக்கள் மீது சுமத்த முனைவது எற்றுக் கொள்ள முடியாதது.
எப்போதோ கலைக்கப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து தேர்தல் நடத்தப்படும் வரை விசேட ஆணையாளர்களின் கீழ் இவற்றைக் கொண்டு வந்திருந்தால் மாதாந்தம் பல நூறு மில்லியன் ரூபாய்களை மீதப்படுத்த முடியும். தமது கட்சி ஆதரவாளர்கள் மாதாந்தம் கொடுப்பனவுகள் பெற வேண்டும். வரப்பிரசாதங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவற்றை கலைக்காமல் நீடித்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயமானது எனக் கேட்க விரும்புகின்றேன்.
நாடு இப்போது இருக்கும் சூழ்நிலையில் பெரிய அமைச்சரவையும், பெரிய எண்ணிக்கையிலான பிரதி அமைச்சர்களும் தேவையில்லை. எனினும் அரசாங்கம் தமது கட்சிக்காரர்களைத் திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக பெரிய அமைச்சரவையையும், அதிக பிரதி அமைச்சர்களையும் நியமித்துள்ளது. இதற்காக மாதாந்தம் சுமார் 100 மில்லியன் ரூபாய்களை செலவிடுகின்றது.
ஒப்பந்த அடிப்படையில் உத்தியோகத்தர்களை நியமிக்கக் கூடாது என்று கூறும் அரசாங்கம் ஓய்வுபெற்ற தமக்கு நெருங்கியவர்களை அமைச்சு செயலாளர்களாவும், திணைக்களத் தலைவர்களாகவும் ஒப்பந்த அடிப்படையில் நியமித்து மேலதிக செலவுகளைச் செய்து வருகின்றது.
இந்த செலவுகளை ஈடுசெய்வதற்காகவே அரசு புதிய புதிய வரிகளை மக்கள் மீது அமுல் படுத்துகின்றது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் தங்களது சுகபோகத்திற்காக மக்களைச் சுரண்டும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. இதனை பொதுமக்களும், அரச உத்தியோகத்தர்களும் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments :
Post a Comment