தேர்தல்களை களியாட்டமாகக் கருதாது கடமை,பொறுப்பு, கட்டுப்பாடு உள்ளிட்ட சமூகநலன்சார் நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் புதிய சிந்தனைக்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருகிறது. இதற்கான சாத்திய வழிகள், பல துருவங்களில் ஆராயப்பட்டுள்ளன. சட்டவரைவாளர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுடனும் இது பற்றிய களச்சாத்தியங்களை தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது.
தேர்தல் பிரச்சாரச் செலவு, பிரச்சார நிதி சீர்திருத்த சட்டமூலத்தை கொண்டுவந்து, இந்நோக்குகளை வெல்ல தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகிறது. இதனால், இவ்வாறான ஒரு சட்டத்தின் அவசியத்தை அரசியல் பிரதிநிதிகளுக்கு உணர்த்தியுள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் புஞ்சி ஹேவா. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவசரமாக இதைச் சட்டமாக்குமாறு ஆலோசனையும் கூறியுள்ளார். எல்லையற்ற நிதி வீண்விரயங்களை தவிர்ப்பது, மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புக்கூறலை கட்டாயமாக்கல், கடமை தவறியோரின் பிரதிநிதித்துவங்களை திரும்பப் பெறல், தேர்தல் விஞ்ஞாபனங்களை செயலுருவில் நிரூபித்தல், நிரூபிக்க தவறின் சட்டநடவடிக்கைக்கு அவரை உட்படுத்தல் மற்றும் இளைஞர்கள் இன்னும் பெண்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தல் உள்ளிட்டவை இந்தப் புதிய பரிந்துரையில் சேர்க்கப்பட்டுள்ளன.
நல்லதொரு நோக்கிற்கு நாட்டை நகர்த்தும் வழிகள் பற்றி இவ்வளவு காலமும் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை நடைமுறைக்கு வரவில்லை. வந்திருந்தால், இவ்வாறான சட்டங்கள் அவசியப்பட்டிருக்காது. வெறுப்பூட்டும் பேச்சுக்கள், இனங்களுக்கு எதிரான விழிப்பூட்டும் செயற்பாடுகளைத் தடுக்க இதற்கு முன்னர் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவற்றை எவரும் தவிர்ந்ததாக இல்லை. தேர்தல் பிரச்சாரங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளோ, விஞ்ஞாபனங்களோ எவரையும் வாழவைக்கவுமில்லை. ஆனால், இதற்காக அமைக்கப்பட்ட மேடைகள், ஊர்வலங்கள், சந்திப்புக்களுக்கு எத்தனை இலட்சம் ரூபாக்கள் வாரியிறைக்கப்பட்டன. இவற்றை கருத்திலெடுத்த தேர்தல் ஆணைக்குழு, இப்புதிய சிந்தனைக்கு களம் காண விழைகிறது. பிரதிநிதியொருவர், கடமை தவறியதாகவோ அல்லது பொறுப்பு மீறியதாகவோ கருதப்படின் எஞ்சிய அவரது பதவிக்காலம் வறிதாக்கப்படவுள்ளது. இதனால், எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள நேரிடுகிறது மக்கள் பிரதிநிதிக்கு. சமூகங்களுக்கு நப்பாசையூட்டும் அல்லது இனங்களை இடைவெளியாக்கும் அல்லது புரிந்துணர்வை பாதிக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களும் தடைசெய்யப்பட உள்ளன. இதனால், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள், ஏமாற்றும் பிரச்சாரங்களை கைவிட வேண்டி வரும். ஆனால், ஒரு சமூகத்தின் உண்மையான உரிமை முழக்கங்களை பாதிப்பதாக இப்புதிய சட்டம் அமையுமா? என்ற அங்கலாய்ப்புக்களும் இருக்கவே செய்கின்றன.
எனவே, இவ்விடயத்தில் சிறுபான்மை சமூகங்களின் தலைமைகள் தீர்க்க சிந்தனையுடன் செயலாற்றல் அவசியப்படுகிறது. தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற விஷேட ஆணைக்குழுவுடன் கலந்தாலோசிக்க இந்த தலைமைகள் தயாராக வேண்டும். "எடுப்பது பிச்சை மிதப்பது பல்லாக்கில்" என்ற நிலைப்பாடுகளிலிருந்து விடுபட நேரிட்டுள்ள சூழ்நிலைகளே இவை. இவ்விடயத்தில், சட்டத்தின் உண்மையான நோக்கு வென்றால் போதுமானது.
பாராளுமன்ற பதவிகளை வெல்வதற்காக அல்லது அதிகார இலக்குகளை அடைவதற்காக அவிழ்க்கப்படும் பொய் முடிச்சுக்கள், உணர்ச்சிக் கோஷங்கள் எல்லாம் இப்புதிய சட்டத்தால் மூலையில் வைக்கப்படவுள்ளன. ஊருக்கொரு எம்.பி அல்லது இனத்துக்கொரு பிரதிநிதியென்ற பிரச்சாரங்கள், பாகுபாடுகளெல்லாம் மேடையேறலாம். அவ்வாறு மேடையேற்றப்படுவதால் ஏற்படும் விளைவுகளுக்காக இச்சட்டத்தின்முன் பதிலளிக்க நேரிடப்போகிறது. இதனால்தான், பொறுப்புக்கூறல் என்ற விடயம் இப்பரிந்துரைக்குள் புகுத்தப்பட்டுள்ளது. எனவே, இச்சட்டத்தால் எல்லோரும் பொறுப்புடன் நடந்து, பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக மாற வேண்டி ஏற்பட்டுள்ளது. நல்லதொரு நோக்கிற்கு நாமும் ஒத்துழைப்போம்.
0 comments :
Post a Comment