சஷ்டி என்றால் ஆறு! உயிர் உணர்ச்சிக்குரிய ஆறு நாள் விரதம். கந்தனின் கந்தசஷ்டி விரதம்!



ந்தசஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.

சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.

அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 30 தேதி வரை 6 நாள் ஸ்கந்த சஷ்டி திருவிழா எல்லா முருகன் கோவில்களிலும் நடைபெறுகிறது.

சஷ்டி திதி அக்டோபர் 30 ஆம் தேதி காலை தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி காலை முடிவடைகிறது.

கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் வாழ்வில் நன்மைகள் கைகூடும். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் நோன்பிருந்து கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும். நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும், எல்லாம் நொடியில் நீங்கி, எதிரிகள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும்.
இதனை உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் என்பார்கள். அதனால் உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
 
அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்கி சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவை கொஞ்சமாக உட்கொண்டு முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டும். மதியம் ஒரே ஒரு முறை மட்டும் பச்சரிசி உணவுடன் தயிர் கொஞ்சம் சேர்த்து உண்ண வேண்டும். காலை, இரவு நேரத்தில் பால், பழங்கள் மட்டும் கொஞ்சம் சாப்பிடலாம். ஆனால், வயதானவர்கள், நோய் உள்ளவர்கள் விரதத்தின் போது உடல் நிலைக்கு தகுந்தபடி நடந்து கொள்ள விதிவிலக்குகள் உண்டு.
பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர்.

"அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.'"

தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந்தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.

இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து, காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்வது வழக்கம்.

பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.

சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

"பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்…………முருகா!"

மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம்.
கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.

இத்தகைய மகிமை மிக்க விரதத்தை அனுஷ்டித்து வாழ்வில் உய்வோமாக..

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :