நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அரசாங்கம் தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அதற்கமைவாக உணவு பாதுகாப்பு ஊட்டச்சத்து மையங்களை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்களும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையிலும் அவ்வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினால் சகல வசதிகளையும் கொண்ட மாதிரி உணவகமொன்று (Cafe Green) அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையானதும் சுகாதாரமானதுமான உணவை நியாய விலையில் சகலருக்கும் வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நீண்டகாலத் தேவையாக இருந்த சிற்றுண்டிச்சாலையை ஏற்படுத்தித் தருமாறு அங்குள்ள உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் வைத்திய அத்தியட்சகரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட வைத்திய அத்தியட்சகர் ரீ.ஆர்.எஸ்.ரீ.ஆர்.றஜாப் துரிதமாக செயற்பட்டு வைத்தியசாலையிலுள்ள வளங்களைக்கொண்டு மிகக்குறைந்த செலவில் இந்த உணவகத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.
குறுகிய காலத்திற்குள் மிகவும் அழகிய முறையில் வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட இந்த உணவகத்தில், காலை, பகல் மற்றும் இரவு நேர உணவு போன்றவற்றுடன் மேலும் பல வசதிகள் உள்ளன. வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்கள் என சகலரும் அமர்ந்து உணவு உட்கொள்ளும் வகையிலும் பிரத்தியேகமான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் அழைப்பின் பேரில் அவ்வைத்தியசாலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டீ.ஜி.மலிண்டன் கொஸ்டா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், பிரதிப்பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.ஏ.வாஜித், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ், பிரதேச சபை தவிசாளர் அப்துல் றஹிம் ஆகியோரினால் குறித்த உணவகம் திறந்து வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment