முனீரா அபூபக்கர்-
கரையோர சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நாட்டைச் சூழவுள்ள கரையோரப் பகுதிகளை உரிய முறையில் அபிவிருத்தி செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை... கடற்கரையின் இருப்பிடத்தைப் பொறுத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது...
கடற்கரையோரத்தில் 24 புதிய சுற்றுலாத் தலங்கள் கண்டறியப்பட்டுள்ளன...
சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் நாட்டின் கடற்கரையோரம் 24 புதிய சுற்றுலாத் தலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தினால் இந்த புதிய சுற்றுலா தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆற்றங்கரை, புத்தளம் குடா தீவுகள், குடவ, வைக்கால, நீர்கொழும்பு குடா, கபுன்கொட, பிரிதிபுர, கொக்கல குடா, சீதகல்ல, ரெகவ குடா, லுனம குடா, மலால லேவாய, கிரிந்த, குனுகலே கடற்கரை, எலிபெண்ட் ரொக், சலதீவ் தீவு, தம்பலகமுவ விரிகுடா, கவர்னர் ஒப்பிஸ், உப்புவெளி, சம்பல்தீவு கடற்கரை, சாம்பல்தீவு கடற்கரை, அரியமல்ல கடற்கரை, நாயாறு கடற்கரை, நந்திக்கடல் கடற்கரை, சாந்தகுளம் கடற்கரை ஆகியவை புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களாகும்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பயனளிக்கும் அவசர வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு சுற்றுலா அமைச்சு மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நாட்டின் கரையோர சுற்றாடலைப் பாதுகாத்து நாட்டைச் சூழவுள்ள கரையோரத்தை உரிய முறையில் அபிவிருத்தி செய்வதன் மூலம் எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் மேலும் அங்கு சுட்டிக்காட்டினார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதம் தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் கரையோரத்தின் இயற்கையான அமைவிடத்திற்கு ஏற்ப, காற்றாலை மின் திட்டங்கள், சூரிய சக்தி உற்பத்தி பூங்காக்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, நாட்டின் கடற்கரையோரங்களில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதுடன், கடற்கரையோரங்களில் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளைகண்டறியுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இவ்வாறான திட்டங்களுக்கு தனியார் துறையை போன்று அரச துறையையும் இணைத்து அவசர திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வளங்கள் நிறைந்த இந்நாட்டின் கடற்கரை 1620 கி.மீ. நீளமுடையதாகும்.எனவே இந்நாட்டின் கரையோரப் பகுதியைப் பாதுகாத்து, கரையோர வளங்களை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான மற்றும் நிலையான அபிவிருத்தியில் நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடலோர வலயத்தையும் அதனுடன் தொடர்புடைய வளங்களையும் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு உரிமையாக்கும் நோக்கத்துடன் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பானம் மணல்மேடுகளும் புத்தளத்தில் உள்ள சண்டிக்காடு மணல்மேடுகளும் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வருட இறுதிக்குள் அறுகம்பே கடற்கரையோரத்தில் உள்ள உல்லை மணல்மேடைச் சூழவுள்ள பகுதியை விசேட பாதிப்புக்குள்ளான பிரதேசமாக வனவளத் திணைக்களத்துடன் இணைந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2021 வரை, 24 கடலோர பாதுகாப்பு திட்டங்களும், 43 அவசரகால கடலோர பாதுகாப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களால் 10.7 கிலோமீற்றர் கடற்கரைப் பகுதியைப் பாதுகாக்க முடிந்தது.
மேலும், இந்த ஆண்டு கடலோர அரிப்பைத் தடுக்க 11 கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களும், 12 இதர திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் 5 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் 18 திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்போதும் கூட தலைமன்னார், தோடுவாவ, பிடிப்பன, மொரட்டுவ, கலிடோ, அம்பலாங்கொடை, மிரிஸ்ஸ, நிந்தவூர் மற்றும் திருக்கோவில் ஆகிய இடங்களில் கரையோரப் பாதுகாப்புத் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தவிர இரணைவில, நிந்தவூர், பேருவளை, பயாகல, காத்தான்குடி மற்றும் சம்பூர் ஆகிய பகுதிகளில் சுமார் 10 அவசரகால கரையோர பாதுகாப்புத் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment