மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யூ.எம்.இஸ்மாயில் தனது 38 வருட கல்விப் பணியிலிருந்து நவம்பர் 1 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த ஏ.பி.முகம்மது உசனார், எம்.ஐ பாத்து முத்து தம்பதிகளுக்கு 1962 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 7 ஆம் திகதி மகனாக பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வி முதல் உயர் தரம் வரை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கற்றுள்ளார்.
1984 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 27 ஆம் திகதி ஆசிரியர் நியமனம் பெற்று தனது முதலாவது ஆசிரியர் பணியை குறுநாகல் இப்பாகமுவ மடிகே முதுந்துவ முஸ்லிம் வித்தியாலயத்தில் இணைந்து சேவையாற்றினார்.
1988 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் 15 ஆம் திகதி அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இணைந்து பயிற்சியை முடித்த இவர், சொந்த ஊரான ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார்.
அதைத் தொடர்ந்து, 1994 ஆம் ஆண்டு பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயம், 1995 ஆம் ஆண்டு ஓட்டமாவடி தேசிய பாடசாலை, 1999 ஆம் ஆண்டு பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயம், 2000 ஆம் ஆண்டு மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயம், 2001 ஆம் ஆண்டு ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயம் ஆகியவற்றில் சேவையாற்றியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு 01 ஆம் மாதம் 25 ஆம் திகதி ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்ட இவர், தனது சேவைக் காலத்தில் கல்வி நடவடிக்கைகளை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வந்தார்.
பின்னர் 2010 ஆம் ஆண்டு மாவடிச்சேனை இக்பால் வித்தியாலயத்தில் பணிபுரிந்த இவர் 2014 ஆம் ஆண்டு பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் அதிபர் கடமையை பொறுப்பேற்று சேவையாற்றினார்.
அத்துடன், 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி அதிபர் சங்க தலைவராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
2019 ஆண்டில் செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தில் இணைந்து கொண்ட இவர், அதே ஆண்டில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு முறைசாராக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்று தனது பணிகளை திறன்பட செய்து வந்தார்.
அரசியல், சமூகசேவைகள் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், 2008 ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலின் இடைக்கால நிருவாக சபையின் செயலாளராகவும் செயற்பட்டுள்ளார்.
இவ்வாறு செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் தனது முயற்சியால் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து பள்ளிவாசலுக்கு 36 ஏக்கர் வயல் காணியை பெற்றுக்கொள்ள பெரும் பங்காற்றியுள்ளார்.
இவரது சேவைக் காலத்தில் கல்வி கற்ற மாணவர்கள் தற்போது வைத்தியர்களாகவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் மற்றும் ஏனைய துறைகளிலும் அரச பணிகளில் சேவையாற்றி வருகின்றனர்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த ஹயாத்து முகம்மது ஆசியா உம்மா என்பவரை கரம் பிடித்துக் கொண்ட இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரது மூத்த மகன் வைத்தியராகவும் (டொக்டர் எம்.ஐ. இல்ஹாம் MBBS), இரண்டாவது மகள் பி.எஸ்.சி - ஐ.சீ.ரி பட்டதாரியாகவும், இளைய மகன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி பௌதீகவியல் மாணவனாகவும் கல்வி கற்று வருகிறார்.
அதேபோன்று, மருமகள் வைத்தியராகவும், மருமகன் பொறியியலாளராகவும் செயற்பட்டு வருகின்றனர்.
கல்விப் பணிக்கு சிறந்த சேவைகளை வழங்கி தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யூ.எம்.இஸ்மாயிலுக்கு கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment