கல்முனை விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக தீர்மானம் எடுக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்; முதல்வர் ஏ.எம்.றகீப் உறுதி



ஊடகப் பிரிவு-
ல்முனை விவகாரத்தில் முஸ்லிம்களின் இணக்கப்பாடின்றி ஒருதலைப்பட்சமாக தீர்மானம் எதுவும் எடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுதியளித்துள்ளார்.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டமானது கல்முனை விவகாரம் சம்மந்தப்பட்டதல்ல. அது பெரிய நீலாவணையிலுள்ள ஒரு கிராம சேவகர் பிரிவு தொடர்பிலான சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினால் கல்முனையில் ஞாயிற்றுக்கிழமை (30) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்படி விடயம் பற்றி முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை உப செயலக பிணக்கு தொடர்பில் நாங்கள் மௌனம் காத்து வருவதாக சிலர் குற்றச்சாட்டி வருகின்றனர். இது 30 வருட காலமாக புரையோடிப்போயிருக்கின்ற பிரச்சினையாகும். இதனை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரே இரவில் தீர்த்து விட முடியாது. முஸ்லிம், தமிழ் சமூகங்கள் சம்மந்தப்பட்ட இந்த நீண்ட கால பிணக்கு தொடர்பில் இரு சகோதர சமூகத்தினரும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடாத்தி, இணக்கமான தீர்வொன்றைக்காண வேண்டியிருக்கிறது.

நாங்களும் இதற்கான நகர்வுகளை மிகவும் சாணக்கியமாக உயர் மட்டங்களில் செய்து கொண்டுதான் இருக்கிறோம். எமது தரப்பு நியாயங்களை உரிய இடங்களில் முன்வைத்து வருகின்றோம். இவற்றையெல்லாம் நாங்கள் ஊடக செய்திகளுக்காக பிரஸ்தாபிப்பதில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லி விடவும் முடியாது. இது விடயமாக ஊடகங்களில் எமது தரப்பு செய்திகளை காணக்கிடைக்கவில்லை என்பதற்காக நாங்கள் எதுவும் செய்யாமல் மௌனமாக இருக்கிறோம் என்று அர்த்தமாகி விடாது.

எமது நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் தனது தலையாய கடமையாக இதனைச் சுமந்து கொண்டு, மிகுந்த அர்ப்பணிப்புடன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். சகோதர தமிழ் பிரதிநிதிகள் என்ன சொல்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஹரீஸ் என்றொரு எம்.பி. இல்லாதிருந்தால் நாங்கள் நினைத்தது போன்று எப்போதோ சாதித்திருப்போம் என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆக, எவரும் நினைத்தது போன்று செய்து விடாமல், இரு தரப்பினரதும் இணக்கத்துடனேயே இப்பிணக்கு தீர்க்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்து செயற்படுகின்றோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த விடயத்தில் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் மிகப் பொறுப்புணர்வுடன் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பான நகர்வுகளின்போது அவர் எமது எம்.பி. ஹரீஸ் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து செயலாற்றி வருகின்றார்.

அதேவேளை, கல்முனை பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்காக நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றதாக ஒரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. இது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்று அப்பட்டமான பொய்யாகும். உண்மையில் அங்கு நடந்தது என்ன ?

எமது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பிலான பிரச்சினை இருந்து வருகின்றது. அதில் ஒன்று- பெரிய நீலாவணை-02 தமிழ், முஸ்லிம் கிராம சேவகர் பிரிவு சம்மந்தப்பட்ட விடயமாகும்.

கல்முனையிலுள்ள கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பிலான 2001ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பெரிய நீலாவணை பகுதியில் பெரிய நீலாவணை-01, பெரிய நீலாவணை-01A, பெரிய நீலாவணை-01B, பெரிய நீலாவணை-02 ஆகிய நான்கு பிரிவுகளும் கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்றன.

அதேபோல் இவ்வர்த்தமானியின் பிரகாரம் பெரிய நீலாவணை-01 முஸ்லிம் பிரிவு, பெரிய நீலாவணை-02 முஸ்லிம் பிரிவு ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளும் கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன.

இவற்றை விட அந்த வர்த்தமானியில் பெரிய நீலாவணை- முஸ்லிம் பிரிவு 71/A ஆம் இலக்க கிராம சேவகர் என்றொரு பிரிவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கிராம சேவகர் பிரிவைக் காணவில்லை. அது எஙகே? இதுகால வரையும் அந்த கிராம சேவகர் பிரிவு ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நாங்கள் ஆராய்ந்தபோது பெரிய நீலாவணை- 02 தமிழ் பிரிவினுள் மேற்படி 71/A எனும் கிராம சேவகர் பிரிவும் உள்வாங்கப்பட்டு, அது பெரிய நீலாவணை- 02 தமிழ், முஸ்லிம் பிரிவு என மாற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம்.

இக்கிராம சேவகர் பிரிவில் 841 முஸ்லிம் குடும்பங்களும் 241 தமிழ் குடும்பங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை இணைக்கப்பட்டே பெரிய நீலாவணை- 02 தமிழ், முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்டு, மிகவும் சூட்சுமமாக கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இதனால் குறித்த முஸ்லிம் குடும்பங்கள் தமது கிராம சேவை நிர்வாக விடயங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம் குடுமபங்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான எனது முயற்சியின் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, தெளிவுபடுத்தியிருந்தேன். எனது வேண்டுகோளை நேரடியாக விசாரித்து, பரிசீலிப்பதற்காகவே நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அவர் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்.

அதில் அரசாங்க அதிபருடன் மேலதிக அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர், கல்முனை பிரதேச செயலாளர் மற்றும் உப பிரதேச செயலாளரும் நானும் பங்கேற்றிருந்தோம். அங்கு குறித்த கிராம சேவகர் விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்யப்பட்டது. இதன்போது என்னால் முன்வைக்கப்பட்ட நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒரு கிராம சேவகர் பிரிவை உருவாக்குவதற்கான சாதக நிலைமை எட்டப்பட்டிருக்கிறது.

இது தவிர இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் காணியொன்று பற்றிய முறைப்பாடு தொடர்பிலும் அரசாங்க அதிபர் கள விஜயம் மேற்கொண்டு, நிலைமையை ஆராய்ந்து, உரிய தீர்வினை வழங்கியிருந்தார்.

இவற்றுடன் கல்முனை உப செயலக சர்ச்சையை தொடர்புபடுத்தி, தகவல்களை திரிபுபடுத்தி முகநூல்களில் சிலர் புரளியைக் கிளப்பி விட்டிருக்கின்றனர். தயவுசெய்து இவ்வாறு வதந்திகளைப் பரப்பி, மக்களை குழப்ப வேண்டாம் என சம்மந்தப்பட்டவர்களை அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்.

மேற்படி நிந்தவூர் கூட்டத்தில் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பிலோ எல்லைகள் பற்றியோ எதுவும் பேசப்படவில்லை. மாவட்ட அரசாங்க அதிபரின் நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் இருக்கவில்லை. ஹரீஸ் எம்.பி. பங்குபற்றாத எந்தவொரு கூட்டத்திலும் கல்முனை விவகாரம் உத்தியோகபூர்வமாக பேசப்படவோ தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவோ மாட்டாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

கல்முனை விவகாரத்தை சிறப்பாக கையாள்வதற்கான தகுதியும் அறிவும் ஆற்றலும் அனுபவமும் எம்மிடம் இருக்கிறது. இது விடயத்தில் நாங்கள் ஒருபோதும் சோடை போக மாட்டோம் என்பதையும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, எம்.எம்.நிஸார், ஏ.எம்.சித்தி நஸ்ரின், முன்னாள் உறுப்பினர் ஷரீப் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ.பாவா, கல்முனை 12ஆம் வட்டார மு.கா. வேட்பாளர் எம்.பளீல் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :