சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட கிரீன் பீல்ட் பிரதேசத்தில் ஜனாஸா மையவாடியொன்றை அமைக்க கல்முனை பிரதேச செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்கான காணியை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை முன்வைத்து கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலியிடம் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், இஸ்லாமிய ஜனாசா நலன்புரி சங்க செயலாளருமான எம்.எஸ். எம். நிஸார் (ஜே. பி) இன்று காலை மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
மகஜர் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் நிஸார் ; கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள கிரீன் பீல்ட் பிரதேசத்தில் மையவாடிக்கான காணியை பெற்றுத் தரக் கோரி இஸ்லாமிய ஜனாசா நலன்புரி சங்கத்தினால் பிரதேச செயலாளரின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்தி உள்ளோம்.
கல்முனை இற வெளிக்கன்டம் ( Green Field - IIousing Scheme ) வீட்டுத்திட்டத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் . அவர்களின் இறுதி நல்லடக்கத்திற்கான மையவாடி ஒன்றில்லாமையினால் பல சிரமங்களையும் , கஷ்டங்களையும் எதிர் நோக்கி வருகின்றார்கள். ஜனாஸாக்களை சுமந்து கொண்டு ஏறத்தாழ ஒன்றரை கிலோமீட்டர் பயணித்து கடற்கரை வீதிவரை செல்ல வேண்டியுள்ளது.
எதிர்கால சந்ததியின் நன்மையை கருத்தில் கொண்டும் இவ்விடயத்தின் அவசர நிலையை கருத்தில் கொண்டும் இப்பிரதேச மக்களின் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு , அங்கு இருக்கின்ற அரச காணிகளில் மூன்று ஏக்கர் பரப்புடைய காணியினை மையவாடி ஒன்றினை அமைப்பதற்கு இஸ்லாமிய ஜனாசா நலன்புரி சங்கத்திற்கு பெற்றுத் தர ஆவண செய்யுமாறு பிரதேச செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளோம்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக பிரதேச செயலாளர் தன்னிடம் நம்பிக்கை வெளியிட்டதாக மேலும் தெரிவித்தார். சாய்ந்தமருது, மருதமுனை பிரதேசத்திலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment