மலையக அரசியல் மறுமலர்ச்சியடையும் புதிய சூழல் தயார்படுத்தப்படுகிறது. அரசியல் உரிமைக்காகப் போராடுவதா அன்றாட உழைப்புக்காகப் போராடுவதா? இந்தளவுக்கு இம்மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. காலனித்துவ ஆட்சிதொட்டு காலாகாலமாக ஏமாற்றத்துக்குப் பழகிப்போன இம்மக்கள், இனி எதிர்கொள்ள எந்தச் சவால்களும் இல்லை. இந்த இருநூறு வருடங்களில் எதிர்கொள்ளாதவை எவையும் இல்லை.
"பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட இவர்களை இலங்கையிலா குடியேற்றுவது? இவர்களைக் கொண்டுவந்த வௌ்ளையர்களே வௌியேறிவிட்டனர், இவர்களுக்கு என்ன வேலை இங்கு?" இவ்வாறான கோணங்களில்தான், இம்மலையக மக்கள் நோக்கப்படுகின்றனர்.
இந்நோக்குகளை நீக்கத்தான் 1950 காலப்பகுதியில், சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஸ்தாபித்தார். இதனால் காந்தி, நேரு காலத்தில் இந்திய, இலங்கை காங்கிரஸ் என்று ஆரம்பமான இவர்களது உரிமைக்குரல் பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக தனித்துவம் பெற்றது.
'நாட்டுக்காக உழைக்க வந்தோம், இப்போது சமூகத்துக்காக ஆளப்போகிறோம்", இந்தப்பாணியில்தான் தமிழ் முற்போக்கு கூட்டணி உழைக்கப் புறப்படுகிறது. இந்தப் புறப்படுகை வீச்சுடையதாக இருப்பதற்காக மலையக அரசியலின் உந்துசக்திகள் எல்லாம் ஒன்றுபட்டுள்ளன. ஜீவன்தொண்டமான், பழனி திகாம்பரம் இன்னும் இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கிடையில் அண்ணன், தம்பி உறவுகள் பரிமாறுமளவுக்கு அந்நியோன்யம் அதிகரித்துள்ளது.
மலையகப் பல்கலைக்கழகம், குடும்பத்துக்கொரு காணித்துண்டு, கிலோக்கொழுந்துக்கு இத்தனை ரூபா, ஏன்? குடியிருக்க ஒரு வீடு, இதுபோன்ற முன்னேற்றத் திட்டங்கள் எல்லாம் "சீசன்" வியாபாரங்களாகிவிட்டன. இதற்குப்பிறகாவது மலையக குமரர்களின் கட்சிகள் ஒன்றுபடுவதில்லையா?
உழைப்பின் வியர்வைத் துளிகளுக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் இருநூறு வருடங்கள் போராடுவதென்பது, எந்த ஜென்மத்திலும் எமது தலையெழுத்துக்களாக இல்லாதிருக்க முதலில் நாம் பிரார்த்திப்போம். இந்தப் பிரார்த்தனைகளுடன் மலையகத்தின் இன்றைய அரசியல் புறப்பாடுகளும் பலனளிக்க குன்றத்துக் குமரனை வேண்டுவோம்.
கண்ணுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் அறிவுக்கு அற்புதத்தையும் அள்ளித்தரும் அழகுமிகு குன்றங்கள் குவிந்துள்ள இடம் மலையகம். மலைச்சாரல்களில் வழிந்தோடும் நீரும் மரங்களின் சாயல்களில் மயங்கும் மாலையும் கதிரவனின் ஔியில் தௌியும் பொழுதுகளும்தான் உல்லாசப் பயணிகளை இங்கு வர உற்சாகப்படுத்துகிறது. பறவைகளின் பாடல்களும் பட்சிகளின் ரீங்காரமும் மற்றும் பசுமையின் ஊடுருவல்களுமே இங்கு வருவோரை வரவேற்கிறது. இத்தனை வசந்தமிகு பிரதேசமிது. வசந்தம் மட்டுமா? நமது நாட்டை வாழவைக்கும் பொருளாதாரத்தின் முதுகெலும்பும் இதுதான். ஆனால், வளர்ச்சியின்றி உள்ளது.
கறுவா, ஏலம், கராம்பு, ரப்பர் மற்றும் தேயிலை உட்பட வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதிகளும் உல்லாசத்துறையும் அந்நியச்செலாவணியின் அரைவாசியை உழைக்கிறது. இந்த உழைப்புக்காக சிந்தப்படும் பல இலட்சம் பேரின் வியர்வைத்துளிகள்தான் மலையக மலைச்சாரல்களில் வழிந்தோடுகின்றன. தேசியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான இத் தேசத்தவர்கள், ஒரு தேசியத்துக்குள்ளும் உள்வாங்கப்படாது முதுகெலும்பிழந்துள்ளனர். வானைத் தொடும் குன்றங்களையுடைய இம்மக்கள், வாழ்வதற்கு குடிசை கூட இல்லாதுள்ளனர். "பொன்னோடு வந்து, கறியோடு பெயர்வர்" என்ற வரலாற்றுப் பதிவுகள், வாசனைத் திரவியங்களின் வியாபாரத்துக்கான சான்றுகளாகவும் உள்ளன. எனவேதான், உழைப்பாளர்களாக மட்டுமில்லாமல், ஆட்சியில் உரிமை கோரவும் புறப்பட்டுள்ளது மலையக அரசியல்.
மதுபான போத்தல்களுக்கும் விலைபோகும் விடயங்களுக்கும் பணத்துக்கு பணியும் மனநிலைக்கும் மலையக வாக்குகள் சோரம்போகவே கூடாது. இந்தச் சோரம்போதல் கலாசாரம் இல்லாது ஒழிய, ஏட்டிக்குப்போட்டியான அரசியல் ஒழிவது அவசியம். இதுதான், இப்போது ஒழிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய முன்னணி (திகாம்பரம்), மலையக மக்கள் முன்னணி (ராதாகிருஷ்ணன்), ஜனநாயக மக்கள் முன்னணி (மனோகணேசன்), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (ஜீவன்தொண்டமான்) கட்சிகள் ஒன்றிணைந்தால் போட்டி அரசியலுக்கு இடமிருக்காது. போட்டி அரசியலின் விலகலுடன் பொறாமை அரசியலும் விடைபெற்றுவிடும்.
இவையில்லாத மலையகத்தில் நிதானம் பிறக்கும். வாக்குகளின் சக்தி வௌிச்சத்துக்கு வரும். சமூகம் மற்றும் சமவாழ்வு என்ற சிந்தனை வளரும். இவ்வாறானதொரு முன்னேற்றத்தை நோக்கிய புறப்பாடுகள்தான், மலையகத்தின் இருநூறுவருட இன்னல்களுக்கு இனிப்பான செய்தியைத் தரும். இந்த இனிப்பு வெறும் வார்த்தைகளில் இருத்தலாகாது.
இரட்டைக்குழல் துப்பாக்கி, இனியும் இல்லை வேறுபாடு, மலையகத்தின் மறுமலர்ச்சி என்றெல்லாம் தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ள வார்த்தைகள் வாக்குகளுக்காக இருத்தலாகாது. மாறாக குன்றத்துப் பிறப்புக்களின் குல வாழ்வுக்காக இருக்கட்டும்.
0 comments :
Post a Comment