மல்வத்தை பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபையை வென்றெடுப்பதற்கான தருணம் மலர்ந்து இருக்கின்றது - சமாச தலைவர் லோகநாதன் அழைப்பு



நூருல் ஹுதா உமர்-
ல்வத்தை பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபையை வென்று எடுப்பதற்கான தருணம் மலர்ந்து இருக்கின்றது என்று அம்பாறை - கல்முனை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

மல்வத்தை சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தை புனரமைப்பதற்கான முன்னோடி கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மல்வத்தையில் இடம்பெற்றது. இதில் சமாசத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ். யு. செசலியா மற்றும் ஊடக இணைப்பாளர் த. தர்மேந்திரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில் பேராளராக கலந்து கொண்டு உரையாற்றியபோது லோகநாதன் மேலும் தெரிவித்தவை வருமாறு

90 இல் இடம்பெற்ற இன வன்செயலில் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக மாறி அகதிகளாக இடம்பெயர்ந்த மல்வத்தை மக்களை இன்றும் கண்ணீருடன் நினைத்து பார்க்கின்றேன். ஆயினும் இன்னமும் மல்வத்தை பிரதேச மக்கள் ஏதோ ஒரு வகையில் அடக்கப்பட்டு நசுக்கப்பட்டு கொண்டுதான் உள்ளனர்.

மல்வத்தை பழம்பெரும் தமிழர் பாரம்பரிய மண் ஆகும். மல்வத்தை மண்ணில் கிராம சபை ஆரம்ப காலத்தில் காணப்பட்டது. கிராம சபையின் தலைவர்களாக தமிழர்களே விளங்கினர். ஆனால் அம்பாறை நகரம் புதிதாக உருவாக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் ரீதியாக அம்பாறை நகர சபை கொண்டு வரப்பட்டது. மாநகர சபையாக அந்த நகர சபை தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

ஆனால் மல்வத்தை பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை அமைத்து தரப்படவே இல்லை. சம்மாந்துறை பிரதேச சபைக்குள் அது அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மிக நீண்ட காலமாக மல்வத்தை பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபை அமைத்து தரப்பட வேண்டும் என்று நாம் ஓங்கி குரல் கொடுத்து வருகின்றோம்.

ஆணை குழுக்கள் முன் ஆஜராகி சாட்சியம் அளித்து உள்ளோம். தற்போது இங்கு தனியான பிரதேச சபையை வென்று எடுப்பதற்கான தருணம் மலர்ந்து இருக்கின்றது. எல்லை நிர்ணய ஆணை குழு முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் கடந்த நாட்களில் நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆணை குழு நியமனம் செய்யப்பட்டு இருப்பதை நாம் வரவேற்கின்றோம்.

அதே நேரம் மல்வத்தை பிரதேச சபையை இதன் மூலமாக வென்றெடுக்க வேண்டும் என்பதில் பற்றுறுதியாக உள்ளோம். வீரமுனை பிரதேசத்தையும் சேர்த்ததாக மல்வத்தை பிரதேச சபையை பெற முடியும். பிரதேச சபையை பெற்று கொண்ட பிற்பாடு பிரதேச செயலகத்தையும் பெற்று கொள்ள முடியும்.

மல்வத்தை பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபை வேண்டும் என்பது ஒட்டுமொத்த மல்வத்தை மக்களினதும் முதலாவது தேவைப்பாடு ஆகும். அரசியல்வாதிகளை நம்பி பயன் கிடையாது. நாம் ஒவ்வொருவரும் முன்வந்து மல்வத்தை பிரதேச சபையை வென்றெடுக்க வேண்டும். இதற்காக இப்பிரதேசத்தின் புத்திஜீவிகள், பொதுநல செயற்பாட்டாளர்கள் முன்னின்று பாடுபட வேண்டும். என்றார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :