மாகாண ரீதியில் முதலிடம் பெற்று "வனிதாபிமான" விருதினை வென்ற உமறு லெவ்வை உம்மு மஜினா



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
நாடளாவிய ரீதியில் சிரச TV மற்றும் NDB வங்கி ஆகியன இணைந்து நடாத்திய “ஸ்ரீலங்கா வனிதாபிமான” விருது வழங்கும் மாகாணப் போட்டியில் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த உமறு லெவ்வை உம்மு மஜினா, மாகாண ரீதியில் முதலிடம் பெற்று கிழக்கு மாகாணத்திற்கான "வனிதாபிமான" விருதை வென்றார்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 30 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

இலங்கையின் 9 மாகாணங்களில் இருந்து 9 பேர் தெரிவு செய்யப்பட்டு, இவ்விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் இலக்கியத்துறைக்கான விருதினை கிழக்கு மாகாணம் சார்பாக உமறுலெவ்வை உம்மு மஜினா பெற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் மாவடிப்பள்ளி எனும் ஊரைச் சேர்ந்த உமறு லெவ்வை மற்றும் எஸ். ஜ . உம்மு சல்மா ஆகியோரின் புதல்வியான யூ .எல். யூ. மஜினா, ஆரம்பக் கல்வியை மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் வெளிவாரியாக பட்டப்படிப்பு கற்கையினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார்.

தற்போது இலக்கியத்துறையில் சமூகத்திற்கு சிறந்த பயனுள்ள விடயங்களை எழுத்துக்கள் மூலம் வழங்கவேண்டுமென்று பயணித்துக் கொண்டிருக்கும் இவர், கட்டாரில் இயங்கும் துணிந்தெழு சஞ்சிகையில் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் சில சகோதரிகளின் உதவியுடன் வறியவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்கும் சமூகப்பணிகளையும் செய்து வருகிறார்.

பாடசாலைக்காலத்திலிருந்தே கவிதை, சிறுகதை, சிறுவர் கதை, நாடகங்கள், பாடலாக்கம், விவாதம் என பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களும் , சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.
இவர் எழுதிய ஆக்கங்கள் பிரதேச இலக்கிய போட்டிகளில் பிரதேச ரீதியில் முதலாமிடங்களைப் பெற்றதுடன் மாவட்ட ரீதியிலும் தேர்வாகி கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.


இவர் இதுவரை பெற்றுக் கொண்ட விருதுகள் வரிசையில்,

* கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2021இல் "கலைஞர் சுவதம் விருது"

* இந்தியாவில் அப்துல்கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு "கவிமணிசுடர் விருது"

* பெருந்தலைவர் காமராசரின் "சிந்தனை மாமணி விருது"

* பேரறிஞர் அண்ணாவின்" எழுதுகோல் ஆளுமை விருது "

* முத்தமிழ் கலைஞரின் "செந்தமிழ்ச்சுடர் கலைஞர் விருது"

* இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு "எழுத்தொளி சக்ரா விருது"

* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு " செந்தமிழ் ஒலிச்செம்மல் விருது" என இந்தியாவின் பல அமைப்புகள் இணைந்து விருது வழங்கி இவரை கௌரவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் சர்வதேச ரீதியில் இலங்கை, இந்தியா, கட்டார், பிரான்ஸ் , லண்டன் போன்ற நாடுகளில் தனது எழுத்தாற்றலால் அங்கும் கால் பதித்து, மின்னிப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

இலங்கையில் இலக்கியம் சம்பந்தமாக வருகின்ற தினகரன், தமிழன், மித்திரன், விடிவெள்ளி, மெட்றோ, வண்ண வானவில், மெட்றோ லீடர் போன்ற பத்திரிகைகளிலும் கட்டாரில் வெளிவரும் "துணிந்தெழு" சஞ்சிகையிலும்

"முத்தமிழ் கலசம்" "அக்கினிச் சிறகுகள்"
இந்தியாவில் தமிழகம் முழுவதும் வெளிவரும் "விடியல் இலக்கிய இதழில்" இந்தியாவில் வெளிவரும் "கதிர்ஸ் இதழில்", பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் "தமிழ் நெஞ்சம்" இதழில், லண்டனில் வெளிவரும் "காற்று வெளி" இதழிலும் இவரது பல கவிதைகள், ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.

இவரது சிறுகதை, கவிதை, ஆக்கங்கள் பிறை எப். எம், கந்துரட்ட எப்.எம் போன்ற வானொலிகளிலும் ஒலிபரப்பாகி வருகின்றன.

சென்ற வருடம் சக்தி எப். எம் இல் இவரது நேர்காணல் ஒன்றும் ஒலிபரப்பாகியது.
தினகரனில் செந்தூரம் பகுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தும் வருகிறார்.

இந்தியாவில் தமிழகம் முழுவதும் வெளிவரும் விடியல் இலக்கிய இதழில் இந்திய பெண் எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்து வருகிறார். அத்தோடு, கவிதைகளுக்கு குரல் கொடுத்தும் வருகிறார்.

இந்தியாவில் வெளியிடப்பட்ட
"இங்காவின் ஆலாபனைகள்" எனும் நூலில் இவரது ஹைக்கூக்களும்
இலங்கையில் வெளியிடப்பட்ட "சுட்டு விரல்" எனும் நூலில் இவரது கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

"இதயம் பேசும் வரிகள்" எனும் தனது கவிதை தொகுப்பு நூலை வெளியிடும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். இந்நூலில் உள்ளடக்கப்பட்ட கவிதைத்தொகுப்புக்கள் அனைத்தும் பத்திரிகைகளில் பிரசுரமானவையாகும்.
இவரது எழுத்துக்கள் தன்னம்பிக்கை நிறைந்த வரிகள், உள்ளத்திற்கு ஆறுதல் கொடுக்கும் வரிகள், மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் சோகங்கள், சமூகத்தின் தேவை, அவலங்களை சமூக அக்கறையுடன் சமூகத்திலுள்ள குறைநிறைகளை எழுத்துக்களினூடாக எழுதி வருகிறார். பிறர் மனங்களும் பிறரை உணர்ந்து மற்றவர்களுக்கு உதவியாக இருக்க இவரது எழுத்துக்கள் பயன்படும் என்பது திண்ணம்.

இன்னும் பல விருதுகள் தனதாக்கி, இலக்கியப்பயணத்தில் சிறந்த படைப்புக்களை மேலும் இவர், சமூகத்திற்கு வழங்க மன நிறைவான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :