ரவூப் ஹக்கீம் இருக்கும் வரை அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைமை பதவி மு.கா.வில் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது - அடித்துக் கூறுகிறார் அப்துர் ரஸாக் (ஜவாத்)



எஸ்.அஷ்ரப்கான்-
வூப் ஹக்கீம் இருக்கும் வரை அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைமை பதவி முஸ்லிம் காங்கிரஸில் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவருமான அப்துர் ரஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழு அங்குரார்ப்பன நிகழ்வு (19.11.2022) சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளருமான ஜுனைதீன் மான்குட்டி இன் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவரும் முன்னாள் நிருவாக உத்தியோகத்தருமான உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்றது.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அப்துர் ரஸாக் (ஜவாத்) தொடர்ந்தும் தனதுரையில்,

அம்பாறை மாவட்டத்தின் மத்திய குழுவின் தலைவராக, உறுப்பினர்களாக இருக்கவேண்டிய உரிமை உள்ளவர்கள் அந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மாத்திரம் தான் என்றும் அவர்களைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்த ஒரே ஒரு கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டும்தான். இதனூடாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களுடைய உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு வீட்டினுடைய உரிமை அந்த வீட்டினுடைய தலைவருக்கு, தலைவிக்கு அல்லது அந்த வீட்டினுடைய ஒரு மகனுக்கு வழங்கப்பட வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனுக்கு அந்த உரிமை வழங்கப்பட முடியாது. பக்கத்து வீட்டுக்காரன் என்றாலும் பரவாயில்லை; மு.கா.வில்கண்டியை சேர்ந்த ஒருவருக்கு அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவி கடந்த 23 வருடங்களாக வழங்கப்பட்டு இருக்கின்றது என்றால் அது பிழை. அப்பதவியை இன்னும் கொடுக்க முடியாத, கொடுப்பதற்கு நம்பிக்கை இல்லாத ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இருக்கின்றது.

ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அப்படியானதல்ல, பிரதேசத்தில் உள்ள மக்களே அப்பதவிக்கு வர வேண்டும் என்ற ஜனநாயக கோட்பாட்டில் உறுதியாக இருந்து இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் வெளிப்பாடுதான் இன்று நாம் இந்த மத்திய குழுக்களின் நிர்வாகங்களை தேர்வு செய்து கொண்டிருக் கின்றோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சாய்ந்த மருதை இன்னும் நம்புகின்றது. ஒரு அமைச்சரை விட தகுதியான பதவியை வழங்கிய ஜெமீல் கட்சியை விட்டுப்போன போதும் இன்னும் சாய்ந்தமருதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நம்புகின்றது. ஊருக்குரிய உரிமையை அது கொடுக்கின்றது. அதேபோல, சிராஸ் மீராசாகிப் இந்தக் கட்சியில் இரண்டு சேர்மன்களை ஒரே தரத்தில் வைத்திருந்தார். அவர் இந்த கட்சியை விட்டுப்போன போதும் இன்னும் இந்த உரிமையை இந்த கட்சி வழங்குகின்றது. அந்த அடிப்படையில்தான் இப்பொழுது காய்ந்தமருது மத்திய குழுவின் தலைவராக உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். கட்சியில் மூத்தவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டி ருப்பதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன்.

எப்பொழுதும் துவண்டு போய் இருக்கவோ, பயந்து கொண்டு இருக்கவோ முடியாது. தைரியமாக அரசியலில் முன் வர வேண்டும். பயந்து ஒழிந்து அரசியல் செய்ய முடியாது. அவ்வாறு செய்பவர்களுக்கு அரசியல் சரிப்பட்டு வராது.
முஷார்ரப் எம்.பி ஆக வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம். ஆனால் சாய்ந்தமருதில் சலீம் அவர்கள் எங்களது தலைவருடன் பேசிய பேச்சுக்கு இணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு இருந்தால் இன்று இந்த கட்சியில் அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கப் போகின்றவர் சலீம் மாத்திரம்தான். அப்போதைய பொதுத் தேர்தலில் இருந்து நான் அப்போது விலகி இருப்பேன். இந்த விடயத்தை குழப்பியவர்கள் இதனை மறுப்பதற்கு முடியாது.

இன்று எல்லோருக்கும் தெரியும் சாய்ந்தமருது கல்முனை என்ற பிரச்சினை ஒன்று இருக்கின்றது. இதனை உருவாக்கியவர்கள் யார்? சாய்ந்தமருதைச் சார்ந்தவர்களா? ரவூப் ஹக்கீம், ஹரிஸ் போன்ற அரசியல்வாதிகள்தான் இதனை உருவாக்கிய வர்கள் என்பதை யாராலும் மறக்க முடியாது.

சாய்ந்தமருது மக்களை உதை பந்துபோல் அடித்து விளையாடுகின்ற கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சியின் விளையாட்டில் இன்னும் இன்னும் மாட்டிக் கொண்டு தவிக்கின்ற ஊராகத்தான் சாய்ந்தமருது இருக்கின்றது.
கல்முனை பிரதேசம் நான்காக பிரியட்டும் பிரிவதில் கல்முனைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கல்முனை ஏற்கனவே ஒரு பட்டின சபையாக இருந்தது. அது கிடைக்கட்டும்.
ஏன் நாங்கள் சாய்ந்தமருதும் கல்முனையும் சண்டை பிடிக்க வேண்டும். ஐயாயிரம் பேர் சாய்ந்தமருது கல்முனையைச் சேர்ந்த உறவுகள் இரு ஊர்களிலும் பிணைந்து இருக்கின்றோம். எங்களுக்குள் என்ன எல்லை பிரச்சினை. கருத்து முரண்பாடுகள் இருக்க வேண்டும். இவைகளை அரசியலுக்காக கையிலெடுத்தவர்கள் சாய்ந்தமருது, கல்முனை மக்களின் பாவம் பழியை சுமந்தேயாக வேண்டும்.

இன்னும் சாய்ந்தமருதூர் இந்த இடியப்பசிக்கலான உதைப்பந்தாட்ட விளையாட்டை உணரவில்லை என்பது தான் உண்மையான விடயமாகும். எதிர்வரும் காலங்களில் அதனை உணரவைப்பதற்கான பயணத்தை நாங்கள் தொடர இருக்கின்றோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் எதற்கும் அஞ்ச மாட்டார். தயங்க மாட்டார், ஓடி ஒளிய மாட்டார். அவரை எப்படியும் சிறையில் மாட்டி, சிறைக்குள் கொலை செய்ய வேண்டும் என்ற அளவு முயற்சியை மஹிந்த குடும்பம் செய்தது. ஆனால் அவரோடு இறைவன் இருந்தான். இறைவன் துணையோடு அவர் இப்பொழுது வெளியில் வெளியேறி இருக்கின்றார். பாராளுமன்றத்தில் தைரியமாக தற்போது பேசுகின்றார். எதிர்வரும் 23 ஆம் தேதி அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினை தொடர்பாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று கூட்டி இது சம்பந்தமாக ஆராய இருக்கின்றார். இதற்கான முயற்சியை அவர் செய்துள்ளார். ஏதாவது ஒரு விடயத்தை மக்களுக்காக செய்கின்ற விடயத்தில் றிஷாட் பதியுதீன் வல்லவர் என்றும் கூறினார்.
கூட்டத்திற்கு கெளரவ அதிதிகளாக கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் உச்சபீட உறுப்பினருமான நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஷ்ரப் தாஹிர், கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், உச்சபீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோரும் விசேட அதிதிகளாக கட்சியின் கல்முனை அமைப்பாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.அப்துல் மனாப், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சி.எம்.மூபீத், கட்சியின் உயர் பீட உறுப்பினரும் மாவட்ட மத்திய குழுவின் பொருளாளருமான கலீல் முஸ்தபா, மாவட்ட மத்திய குழு செயலாளர் ஆசிரியர் எம்.எம்.எம்.காதர் உட்பட சாய்ந்தமருது மத்திய குழுச்செயலாளர் ஆசிரியர் ரி.கே.எம்.சாக்கீர்,
சாய்ந்தமருது மத்தியகுழு பொருளாளர் எம்.எம்.சமூன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சியின் மகளிர் அமைப்பு முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :