இளம் தலைமுறையினர் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சூட்சகமாக அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்படல் காலத்தின் தேவையாக காணப்படுவதாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரல தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (03) அவரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவட்டத்தின் நகர் சார் பகுதிகளை மையமாக கொண்டு போதைப்பொருள் வர்த்தகம் நடைபெற்றபோதிலும் தற்போது கிராமங்களுக்கும் சென்றுள்ளன. இதனால் இளம் தலைமுறையினர் மற்றும் மாணவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகர்கள் சூட்சகமான முறையில் தமது வியாபார செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்செயற்பாட்டை உடன் தடுத்து நிறுத்த நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படல் வேண்டும். குறிப்பாக இதனோடு தொடர்புபடுகின்றவர்கள் தொடர்பான தகவல்களை உரிய தரப்பினருக்கு வழங்கல் வேண்டும். இதற்காக மக்கள் தமது ஒத்துழைப்பை தொடராக வழங்கல் வேண்டும். குறித்த செயற்பாட்டை கிரமமாக மேற்கொண்டு செல்ல ஒன்றிணைந்த குழுவை உரிய தரப்பினரை இணைத்துக்கொண்டு மாதம் ஒரு தடவை அல்லது இரு வாரங்களுக்கு ஒரு தடவை கூட்டி உரிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் தொடர்பான தகவல்களை 1913, 1927 மற்றும் 119 ஆகிய குறும் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்கக்கூடியதாக இருக்கும். போதைப்பொருள் பாவனை தொடர்பான தகவல் வழங்கும் நபர்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
இல்லையென்றால் மக்கள் இது தொடர்பான தகவல்களை வழங்க முன்வரமாட்டார்கள். அவ்வாறு தகவல் வழங்கி பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். எனவே இவ்விடயம் குறித்து கூடிய அவதானம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 10 மாதங்களில் திருகோணமலை பிராந்திய பொலிஸ் பிரிவு போதைப்பொருள் தொடர்பான 2400 க்கு அதிகமான சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலை தற்போது அமையப்பெற்ற இடம் வைத்தியசாலை அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க பொருத்தமானதாக அமையப்பெறவில்லை. இதனால் வைத்தியசாலை பணிப்பாளர் என்றடிப்படையில் தாம் பல அசெளகரியத்திற்கு உட்படுவதாகவும் குறித்த வைத்தியசாலையை பிறிதோர் இடத்திற்கு மாற்றுவதற்குறிய செயற்பாட்டை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை பணிப்பாளர் இதன்போது வேண்டிக்கொண்டார்.
வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டை வேறுகண் கொண்டு நோக்கக்கூடாது. திருகோணமலை வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். அதன் மூலமே மக்களுக்கான வைத்திய சேவைகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும். விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட வைத்தியசாலை பணிக்குழாத்தினருக்கான தங்குமிட வசதிகள் இன்மையால் அவர்களை இங்கு தொடராக சேவைக்கமர்த்துவதில் சவால்கள் காணப்படுகின்றன. எனவே இதனை அனைவரும் சாதக அடிப்படையில் நோக்கல் வேண்டும். பொது மக்களுக்கு இது குறித்து தவறான சிந்தனைகளை பரப்ப வேண்டாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல வேண்டிக்கொண்டார்.
கழிவகற்றல் பிரச்சினை, கல்விசார் அபிவிருத்தி, காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், விவசாயம் உள்ளிட்ட விடயங்கள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம, அரசியல் பிரமுகர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment