உலகில் உன்னதமான ஒர் ஆன்மீக புனித சன்னிதானத்திற்கு வருகை தந்ததில் மிகவும் சந்தோஷம் அடைகின்றேன். இப்படி அருமையான ஆன்மீக சந்நிதானம் கிழக்கிலங்கையில் இருக்கின்றது என்பதனை இன்றுதான் அறிந்து மிகவும் பூரிப்படைகிறேன்.
இவ்வாறு மட்டு.கல்லடி இராமகிருஷ்ண மிஷனுக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் நேற்று(10) வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனுக்கு விஜயம் செய்தார்.
அவருடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன், பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மாகாண கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சிவ.சுதாகரன்
ஆகியோரும் விஜயம் செய்தனர்.
ஆளுநரை இல்ல மாணவர்கள் வரவேற்றனர். மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ், உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் ஆகியோரும் வரவேற்றனர்.
அங்கு, ஆளுநர் அனுராதா மேலும் பேசுகையில் .
கிழக்கு மாகாணத்தில் இருந்து கொண்டு இங்கு வராமல் இருந்ததால்
கடந்த மூன்று வருட காலத்தை நான் இழந்து விட்டேன் என நினைக்கிறேன். இராமகிருஷ்ண மிஷன் பணிகள் பற்றி அறிந்திருக்கின்றேன். இருந்தபோதிலும் இங்கு வந்த பொழுது தான் அந்த ஆன்மீக தியான புனித பூமியை உணரமுடிந்தது. ஒரு கணம் மெய்சிலிர்த்து போனேன் .
இல்ல மாணவர்களின் நடைமுறை, இங்கு உள்ள சுத்தம் ,சுகாதாரம், ஒழுங்கு ,ஒழுக்கம் , நடைமுறைகள் என்பது என்னை மேலும் ஒரு படி ஈர்த்து நிற்கின்றன .
இந்து சமய தத்துவத்திலே சாங்கிய தத்துவம் ஒன்றிருக்கின்றது .அது பௌத்த சமயம் சார்ந்தது என்ற விடயத்தை இங்கு சுவாமிகள் கூறித்தான் அறிந்து கொண்டேன். உலகில் உயர்ந்த ஒரு தியான இடத்துக்கு வந்ததாக உணர்கிறேன் .
நானும் பல பௌத்த உயர் தியான பீடங்களுக்கு சென்று இருக்கின்றேன் .இங்கு வந்ததும் அதே போன்று உயரிய ஆன்மீக உணர்வு எனக்கு ஏற்பட்டது .
சுவாமிகளின் அன்பான வரவேற்பு இல்ல மாணவர்களின் அன்பான உபசரிப்பு எல்லாம் என்னை திக்குமுக்காட செய்கின்றது. விரைவில் நான் இமாலயம் செல்ல இருக்கின்றேன் .அங்கு தியாகம் செய்வதற்காக. இராமகிருஷ்ண மிஷன் உதவி கிடைக்குமானால் பெரு மகிழ்ச்சி அடைவேன். என்று புகழாரம் சூட்டினார் .
மேலும் சுவாமிகளிடமிருந்து பல இந்து சமய தத்துவ கருத்துக்களை ஒரு மணி நேரம் அமைதியாக இருந்து முற்றாக கேட்டு அறிந்து தெளிந்து கொண்டார்.
வாழ்க்கையிலே இதுவரைக்கும் இந்து சமயம் தொடர்பாக அறியாத பல விடயங்களையும் இந்து பௌத்த சமயங்களுக்கு இடையிலான தொடர்புகளையும் பொது தத்துவங்களையும் நிறைய அறிந்து கொண்ட ஆளுநர் சுவாமிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
வாழ்வில் இன்றைய நாள் மறக்க முடியாத நாள் மீண்டும் நான் வருவேன் என்று கூறி விடைபெற்றார்.
பின்னர் ஆளுநர் அனுராதா இல்ல மாணவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் ஐஸ்கிரீம்களை வழங்கினார்.
அங்கு நன்னடத்தை துறையைச் சேர்ந்த முக்கிய அலுவலர்கள், பக்தர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 comments :
Post a Comment