எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி-
கேள்வி :- அரசியல் அமைப்பு திருத்தம் சம்பந்தமான வாக்களிப்பு பாராளுமன்றத்தில் நடைபெறுகின்ற போது, வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இப்படித்தான் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்ற தீர்மானங்கள் ஏதேனும் எட்டப்பட்டனவா? அதேவேளை, வாக்களிப்பு நடைபெறுகின்ற போது, அநேகமானவர்கள் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளாத ஒருநிலை இருந்தது. கலந்து கொள்ளாதவர்கள் ஏதேனும் ஒரு அழுத்தத்தின் காரணமாக கலந்து கொள்ளாதிருந்தார்கள் என்ற கருத்தும் ஒரு பக்கம் இருக்கிறது. இந்த விடயங்களை தாங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?
பதில் :- அரசியலமைப்புத் திருத்தம் சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்தில் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அளவிற்கு விமர்சனத்திற்குள்ளான காரணத்தினால், 20 ஆவது சட்ட திருத்தத்தை மாற்றியமைக்கின்ற எந்தத் தீர்மானமாக இருந்தாலும், அதிலுள்ள அனுகூலன்களை அனுசரித்து கட்சி வாக்களிக்கவேண்டும் என்பது மிகத் தெளிவானதொரு அடிப்படையாக இருந்தது.
எனவே, அதற்கென்று ஒரு தனியான கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், ஏற்கனவே அது தீர்மானிக்கப்பட்ட விடயம். அந்த அடிப்படையிலே கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 9 ஆம் திகதி வரையும் நாட்டில் இருந்த குழப்ப நிலையும், புரட்சிகரமான மாற்றங்களும் பாராளுமன்றத்தில் கட்சிகளை மீறி செயற்பட்ட எல்லோரையும் கட்சி ஓரளவிற்கு கட்டுப்பாட்டுகளுக்குள் கொண்டு வரவில்லை என்றாலும், இரு விதமாக அதன் விளைவுகள் இருந்தன. அதாவது எதிர் கட்சிகளிலிருந்து எங்களை மீறிச் சென்றவர்கள் எதிர்க் கட்சிக்கு மீண்டும் வந்து கட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்கு எத்தனிப்பதும், ஆளும் கட்சியில் இருப்பவர்கள் கட்சியை மீறி எதிர்க் கட்சித் தரப்புக்கு தாவுவதுமாக, இரண்டு விதமாக இந்த செயற்பாடுகள் இருந்தன. அந்தத் தாக்கத்தின் விளைவாக யாருக்கும் வலுக்கட்டாயமாக இதைத்தான் செய்யவேண்டும் என்று கட்சி சொல்லவேண்டிய தேவை எதிர்க் கட்சியைப் பொறுத்தமட்டில் இருக்கவில்லை. எல்லோரும் தாங்களாகவே நிலவரத்தை உணர்ந்து கொண்டு, "இதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்" என்ற நிலைப்பாட்டிற்கு வரவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்தக் கிளர்ச்சியைச் செய்த இளம் போராட்டக்காரர்கள் எல்லோரும் எங்களைப் பொறுத்தவரை, ஒரு யுக புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார்கள்.
ஆனால், சட்ட திருத்தத்தைப் பொறுத்தவரை, எதிர்பார்த்த அளவிலானதொரு முன்னேற்றம் இல்லை. என்றாலும் கூட, நிச்சயமாக, 20 ஆவது சட்ட திருத்தத்திலிருக்கின்ற மோசமான ஏற்பாடுகளில் சிறிய அளவிலாவது மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதனால், அதற்காக ஆதரிக்க வேண்டிய ஒரு கடப்பாடு எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, அரசாங்கம் முன்வைத்த சட்டவரைவு நீதிமன்றத்திற்குச் சென்ற போது, உச்ச நீதிமன்றம் சில விடயங்களில் கொடுத்த தீர்ப்பு காரணமாக நாங்கள் எதிர்பார்த்த இலக்குகளை எட்டமுடியவில்லை. அதாவது, அரசியலமைப்பின் சட்டப்பிரமானங்கள் பற்றி பாராளுமன்றத்தில் 2/3 வாக்கெடுப்பது மாத்திரம் போதாது; அதற்கு சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்ற நியதியை ஏற்படுத்தினார்கள். இதன் காரணமாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு எடுத்த எத்தனங்கள் பெரியளவில் பழிக்கவில்லை. எனவே, கடந்த 19 ஆம் சட்டத்திருத்தத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்ட அளவிலாவது இப்போதைய ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை. எனவே, இரண்டு விடயங்களிலும் இவர்தான் நன்மையடைந்திருக்கிறார்.
19ஆவது சட்ட திருத்தத்தின் போதும் அவர் பிரதமராக இருந்து பிரதமரின் அனுமதியோடுதான் அமைச்சரவை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திருத்தங்கள் வந்தன. அதனை உயர் நீதிமன்றம் அங்கீகரித்து, சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்று அறிவித்தது.
ஆனால், இப்போதைய உயர்நீதி மன்றம் இல்லை அப்படிச் செய்வது ஜனாதிபதியுடைய நிறைவேற்று அதிகாரத்தில் தலையிடுகிற விவகாரம் என்றும் எனவே அதற்கு நீங்கள் கட்டாயம் சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றாகவேண்டும் என்று ஒரு நியதியை இட்டு விட்டார்கள். இப்படி ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகத்தான் அந்த எதிர்பார்த்த இலக்கை எங்களால் அடையமுடியவில்லை. இருந்தாலும் ஓரளவுக்காவது 20ஆவது சட்ட திருத்தத்தின் சில பிரதிகூலங்கள் அகற்றப்பட்டிருப்பதன்
காரணமாக, குறிப்பாக அந்தப் பாராளுமன்ற குழுவின் மூலமாக உயர் பதவிகளுக்கான நியமனம் என்ற விடயம் வெறும் ஒரு சோடனையே ஒழிய, அதனால் எந்தப் பலனுமில்லை.
ஏனென்றால், ஜனாதிபதிக்கு விரும்பியவாறு செயற்படலாம் என்றுதான் இருந்தது. அந்தப் பாராளுமன்ற சபை உண்மையில் ஜனாதிபதி விரும்பினால் அவர்களை கலந்தாலோசிக்கலாம், அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்றாலும் அதை நிராகரித்து அவருக்கு விரும்பியோர்களை நியமிக்கலாம் என்ற அடிப்படையில்தான் இருந்தது. ஆனால், அதை விடவும் ஒரு படி மேலே போய் ஆரம்பத்திலிருந்த அரசியல் அமைப்பு சபை மீண்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் மூன்று சிவில் சமூக பிரதிநிதிகள் வருவார்கள் என்பது ஒரு வித்தியாசமான விடயம். அதுவும் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் கூட அது ஐந்துக்கு ஐந்து என்று இருந்ததைத்தான் ஏழுக்கு ஐந்தாக்கிவிட்டார்கள். முதலில் ஏழுக்கு மூன்று என்று இருந்தது. சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஏழு பேரும், பாராளுமன்றப் பிரதிநிதிகள் மூன்று பேரும் என்று இருந்ததை தலைகீழாக மாற்றி அதை பாராளுமன்ற பிரதிநிதிகள் ஏழு பேரும், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூன்று பேருமாகச் செய்ததும் இந்த மொட்டுக் கட்சிக்கார்கள்தான்.
இன்று பாராளுமன்றத்தில் இருக்கிற பெரும்பான்மையை அன்று வைத்துக் கொண்டிருந்து அவர்கள் இருந்த ஜனாதிபதியோடு தேர்தலில் தோற்ற பிறகு போய்ச் சேர்ந்து கொஞ்சப் பேர் காட்டிய சித்து விளையாட்டின் விளைவுதான் 19ஆவது திருத்த சட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள்.
அதேபோன்று இப்போது 20 ஆவது சட்ட திருத்தத்திலும் இன்றிருக்கின்ற இந்த மக்கள் மத்தியில் மக்கள் ஆணை வரிதாக்கப்பட்டிருக்கிற இந்தக் கூட்டம், என்னைப் பொறுத்தவரை இன்று பாராளுமன்றத்திலிருக்கிற நாங்கள் இருவர் (மனோ கணேசன்)உட்பட எல்லோருக்கும் மக்கள் ஆணை வரிதாகிவிட்டது. மீளப்பெறப்பட்டுவிட்டது என்றுதான் நாங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறோம். எனவேதான் ஒரு புதிய தேர்தலை நடத்துங்கள் என்று கேட்கிறோம்.
இந்தப் பெரும்பான்மையோடு இந்த ஆட்சியை கொண்டு போவதிலிருக்கிற விடயம் என்னவென்றால், மக்கள் மத்தியில் இந்த பெரும்பான்மைக்கான செல்வாக்கு என்பது இல்லை. மக்கள் ஆணை மீளப்பெறப்பட்டுவிட்டது என்பதுதான் இருக்கிற யதார்த்தம். எனவே, இதனூடாக செய்யப்படுகிற எந்த திருத்தத்திலும் எங்களுக்கு நம்பிக்கை கூடுதலாக இருக்க முடியாது.
கேள்வி :- அரசியலமைப்பு திருத்தம் வருகின்ற போது முஸ்லிம் காங்கிரஸினுடைய எதிர்பார்ப்பாக இந்தெந்த விடயங்களும் கூட நாட்டில் இருக்கக்கூடிய தமிழ் பேசும் சமூகமாக இருந்தாலும் சரி, நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களாக இருந்திருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களாக எவை, எவை இருந்தன?, இதனைத் தாண்டி ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கக்கூடிய அந்த வருடங்களில் ஒரு குறைப்பு செய்து அது இப்பொழுது வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அது வரையறுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் இப்போது ஜனாதிபதிக்கு ஒரு பிடிமானம் கிடைத்திருக்கிறது என ஒரு சிலர் சொல்கிறார்கள், இந்தப் பிடிமானம் கிடைத்ததன் மூலமாக ஒட்டுமொத்தமாக பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அந்த பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடைய தாளத்திற்கு ஜனாதிபதி ஆட்டம் போடுவது என்பது மாறி இப்பொழுது ஜனாதிபதியினுடைய கையில் பிடிமானம் கிடைத்திருப்பதன் மூலமாக ஏதேனும் தமிழ் பேசும் சமூகத்திற்கு நன்மை ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றனவா?
பதில்: இந்த அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்திற்கான முயற்சிகள் சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவுடைய 1994 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலும் தொடர்ந்தேச்சியாக அரசியல் அமைப்புக்கான மொத்த திருத்தம் என்று நாங்கள் பேசினாலும் உண்மையான நோக்கம் என்பது ஒன்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யவேண்டும் அல்லது ஜனாதிபதியுடைய நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கவேண்டும், பாராளுமன்றத்தினுடைய அதிகாரங்களைக் கூட்டவேண்டும், பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் கூட்டுகின்ற விவகாரத்தில் இரண்டு தடவைகள் மாத்திரம் 17 ஆவது சட்ட திருத்தமும்,19ஆவது சட்ட திருத்தமும். இந்த இரண்டிலும் ஒரு கணிசமான முன்னேற்றங்களைக் எங்களால் காணக்கூடியதாக இருந்தன. ஆனால், இந்த 18 ஆம், 20 ஆம் சட்ட திருத்தம் அதை முழுமையாக மாற்றியமைத்து மீண்டும் இருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை இன்னும் கூட்டுகிற நிலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதான் இதற்கெதிராக எழுந்த விமர்சனங்களுக்கான அடிப்படைக் காரணம். இந்த அடிப்படையைப் பார்க்கிற போது கடைசியாக நடந்த திருத்தம் எதிர்பார்த்த இலக்குகளை அடையமுடியவில்லை. என்பதற்கு நான் சொல்லுகின்ற காரணம் என்னவென்றால், நீதிமன்றத்தின் முடிவின் காரணமாக அந்த அமைச்சரவை அங்கீகரித்த அல்லது அமைச்சரவை மூலம் சமர்ப்பிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்திலும் நீதி மன்றம் "சில விடயங்கள் திருத்தப்படவேண்டுமாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குப் போகவேண்டும் என்ற நியதியைப் போட்ட காரணத்தினால் அது சாத்தியமாகவில்லை.
எனவே, அந்த விடயத்திலும் நான் சொன்னதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை, இதற்கு நான் என்ன செய்வது என தற்போதைய ஜனாதிபதி தப்பித்துக் கொள்கிறார். ஆனால், இதிலுள்ள முழு நன்மையும் ஜனாதிபதிக்குதான். ஏனென்றால், அவருடைய அதிகாரங்கள் எதுவும் பறிபோகவில்லை.
19ஐ விடவும் அந்த (டீமிங் ப்ரோவிசன்) போட்டோமே, அதாவது இந்த அரசியல் அமைப்பு குழு நியமனம் ஒன்றைச் செய்கிற போது ஜனாதிபதி நியமிக்காமல் இருக்கிற விடயத்தில் பெரிய குளறுபடி கடந்த காலங்களில் நடந்திருக்கிறது. அதை தவிர்ப்பதற்காக ஒரு ( டீமிங் ப்ரோவிசனை ) நாங்கள் போட்டோம். ஏனென்றால். நியமிக்கவில்லை என்றால் அது இரண்டு வாரத்திற்குப் பிற்பாடு நியமிக்கப்பட்டதாகக் கொள்ளப்படும் என்ற ஒரு விடயம் 19இல் இருந்தது. ஆனால், இந்த முறை உயர் நீதிமன்றம் அதை அப்படிச் செய்ய முடியாது, செய்தால் அது சர்வஜன வாக்கெடுப்புக்குப் போகவேண்டும் என்ற தீர்மானம் வந்துவிட்டது. அதனால் இந்த ஜனாதிபதியுடைய கரங்கள் மீண்டும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் என்னுடைய வாதம்.
அதேபோல் 2 1/2 வருடங்களில் பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற விடயம், 19 ஆவது சட்டத்திற்கு முரணான விடயம். ஆனால், இப்போது இருக்கின்ற விசித்தரமான பாராளுமன்ற சமன்பாட்டில், அதாவது விசித்திரமான சமன்பாடு என்றால், அது விபரீதமான சமன்பாடு. ஏன் விபரீதம் என்றால், ஏற்கனவே மக்கள் நிராகரித்த ஒரு பெரும்பான்மையுடைய பணயக் கைதியாக இந்த ஜனாதிபதி இருக்கிறார் என்பதுதான் எங்கள் எல்லோருடைய நிலைப்பாடும் என்பதோடு, மக்களின் நிலைப்பாடும் அதுதான். ஜனாதிபதியை மக்கள் விரட்டியடிக்கவேண்டும் என்று தீர்மானம் எடுத்திருக்கிற அளவிற்கு வந்த ஆட்சியாளர்கள் மீண்டும் இந்த ஜனாதிபதியை பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியாக ஆக்கிவிட்டு, அவருடைய தயவில் தங்கி இருக்கிறோம் என்பது ஒரு புறம், ஆனால், அவர் இவர்களுடைய தயவில் தங்கியிருப்பது போன்றுதான் விடயங்கள் நடக்கின்றன என்ற வாரியான விமர்சனங்கள் இருக்கின்றன. இதற்காகத்தான் நாங்கள் ஒரு தேர்தல் நடத்தப்படவேண்டும் எனக் கேட்கிறோம்.
எனவே அந்தத் தேர்தலை பிற்போடுவதற்கான சில கபடத்தனமான உபாயங்களை இந்த அரசாங்கம், ஜனாதிபதி உட்பட செய்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்தத் தெரிவுக் குழு நியமனம் என்ற கதை.
இப்போது நீதியமைச்சர் சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் மீண்டும் ஒரு தேர்தல் முறையை மறுசீரமைப்பதற்கான தெரிவுக் குழு. இந்த தெரிவுக் குழு என்பது சங்கீதக் கதிரை மாதிரி, உட்கார்வதும், எழும்புவதும், பிறகு போய் உட்கார்வதுமாக இது தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு தெரிவுக் குழு அமைக்கப்பட்டு, அதில் இடைக்கால அறிக்கை கொடுக்கப்பட்டு, அதில் சில சிபாரிசுகள் செய்யப்பட்டு இந்த உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான சில விடயங்கள் செய்யப்படலாம் என்று சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் செய்தால் நாள், நேரம் எடுக்கும். குறிப்பாக இந்த எல்லை மீள் நிர்ணயம் என்ற விடயம் எடுத்தெடுப்பில் செய்ய முடியாது. இது அவர்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதைச் செய்யப்போகிறோம் என்று கூறிவிட்டு காலத்தை இழுத்தடித்து, தேர்தலொன்றை நடத்தாமல் இருப்பதுதான் அதனுடைய நோக்கம்.
அதுமாத்திரமல்லாமல் இருக்கின்ற உறுப்பினர் தொகையை அரை வாசியாகக் குறைக்கவேண்டும் ஏனென்றால், இதற்காக செலவீனங்கள் கூட என்றும் ஜனாதிபதி சொல்கிறார். இது என்னைப் பொறுத்தவரை ஏற்புடைய விவாதமாக இருக்கமுடியாது. அப்படியென்றால், பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு கொடுக்கின்ற சம்பளத்தைக் குறையுங்கள். குறைத்துவிட்டு உறுப்பினர்களை வையுங்கள். ஏனென்றால், உறுப்பினர்களைக் குறைத்தால் சிறுபான்மையினர்கள்தான் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இவர்களுடைய நோக்கம் என்னவென்றால் இந்தக் கதையெல்லாம் கொண்டுவந்து பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுவதுதான்.
அது நியாயமாக, நேர்மையாக நடக்கவேண்டுமாக இருந்தால், மற்றொரு மாற்று வழி பழைய விகிதாசார தேர்தல் முறைக்கு முழுமையாக, வட்டாரத் தேர்தல் முறையும், கலவன் தேர்தல் முறையும் இல்லாமல் நேரடியாக முழுமையாக விகிதாசாரத் தேர்தல் முறை என்று போய்விட்டால் அதாவது வட்டார முறை இல்லாமல் எங்களுக்கு உறுப்பினர் தொகையை குறைப்பதற்கு எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதில் எந்த குழப்படியும் இல்லாமல் இருந்ததே! ஏனென்றால், மூன்று விருப்ப வாக்குகளையும் ஒருவருக்கு போடலாம் என்று இருந்த விடயம் காரணமாக சிறுபான்மையுடைய வாய்ப்புக்கள் கூடுதலாக இருந்தன.
எனவே இப்படியாகச் செய்யப்பட்ட சில திருத்தங்கள் பிரேமதாஸா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் செய்யப்பட்டவை. அதாவது சர்வ கட்சி மாநாடொன்றில் ஏ.சீ.எஸ். ஹமீட் அதன் தலைவராக இருந்து கொண்டுவந்த திருத்தம்தான் அந்த மூன்று விருப்பு வாக்குகளையும் ஒரே ஆளுக்கு போடலாம் என்று உள்ளூராட்சி சபையில் கொண்டுவந்த திருத்தம். அது அந்த யூத் கொமிசன் அறிக்கையில் வந்த விடயம். அதன் அடிப்படையில்தான் இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டது.
அப்படியான திருத்தங்கள் மூலம் சிறுபான்மையினர்களுக்கான நியாயமான பங்குகள் கிடைத்தன. யாரும் எங்களின் பங்கை மீறி எங்கேயும் நாங்கள் எடுக்கவில்லை. எனவே, இப்படியான நிலவரங்கள் ஏற்பட்டன. ஆனால், இந்தப் பெரிய கட்சிகள் இரண்டு பேருக்கும் இது அவ்வளவு ஏற்புடைய விடயமல்ல. ஏனென்றால், அவர்களுக்கு ஸ்திரத்தன்மைதான் தேவை, எப்போதும் ஆட்சி அமைப்பதற்கு வேறு பங்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. நாங்கள் வேறு: யார் தயவிலும் தங்கியிராமல் தனியாட்சி அமைக்கக்கூடியதாக எங்களுக்கு தேர்தல் முடிவுகள் வரவேண்டும் என்பதில் இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இருக்கின்றன. இது ஜனநாயகத்திற்கு விரோதமான விடயம். ஜனநாயகம் என்பது எல்லாக் கட்சிகளுக்கும் தங்களுக்கு கிடைக்கிற வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப அவர்களுக்கான அதிகாரமும், பலமும் இருக்கவேண்டும். அதைப் பறிக்கவேண்டும் என்றும் இவர்களை உதாசீனம் செய்துவிட்டு நாங்கள் ஆட்சி நடத்தவேண்டும் என்ற நோக்கில்தான் இந்த திருத்தங்கள் எல்லாம் செய்யப்படுகிறது.
கேள்வி : தகவல் அறிகின்ற சட்டமூலத்தின் பிரகாரம் இனி வரக்கூடிய தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமை என்ற அடிப்படையில் இரட்டை பிரஜாவுரிமை இருக்கிறவர்களை முதலில் கட்சி சார்ந்து வடிகட்டுவதற்கான ஏதேனும் கட்டமைப்பைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?
பதில்: எல்லாக் கட்சிகளும் வழமையாக ஒரு சத்தியக்கடதாசியை எடுப்பது சாமான்யமாக நடந்து வருகிற விடயம். அதாவது தேர்தல் நியமனப்பத்திரத்தில் அவர்கள் கைச்சாத்திடுவதற்கு முன்பு, அவர்களிடம் இந்த விவகாரம் சம்பந்தமான ஒரு சத்தியக்கடதாசி பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதை நம்பித்தான் நாங்கள் அவர்களுக்கு நியமனப்பத்திரத்தில் கைச்சாத்திட அனுமதிக்கிறோம். ஆனால், உண்மையில் ஒரு சிலர் அந்த விடயத்தை மறைக்கலாம். ஏனென்றால், இந்த விவகாரம் அந்த குறிப்பிட்ட நாட்டுக்குதான் தெரியுமே ஒழியே, இந்த நாட்டில் யாருக்கும் தெரியும் என்பதல்ல. அவர்கள் இங்கு வந்து விமான நிலையத்தில் இறங்கின்ற போது, அவர்கள் இலங்கை கடவுட்சீட்டை பாவித்துவிட்டு, இங்கிருந்து வேறெங்கும் போகும் போது தங்களுடைய இரண்டாவது கடவுச்சீட்டை பாவித்துவிட்டுப் போகலாம். இப்படி கபடத்தனமாக செய்கிற ஒரு சிலர் இருக்கலாம் என்ற காரணத்தினால், இப்படியான விவகாரங்கள் நடக்கலாம். ஆனால், இது ஏதோயொரு வகையிலே எப்படியாவது உண்மைகள் வெளிவந்தாகவேண்டும் என்பதற்காகத்தான் இந்த விடயங்கள் சம்பந்தமாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இது எல்லோருக்கும் தெரிந்த விவகாரம். முன்னைய ஆளும் குடும்பத்தில் ஒருவர் கலிபோர்னியாவில் இருப்பவர், அவரை இலக்கு வைத்து செய்யப்பட்டதுதான் இந்த 40 பேர், அது 40 பேர் அல்ல எத்தனை பேர் உண்மையாக அவர் சார்பாக பாராளுமன்றத்தில் வாக்களிக்காமல் தவிர்ந்து கொண்டார்களோ எனக்குத் தெரியாது. ஆனால், குறைந்தது 20 பேர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, அந்த 20 பேருடைய விவகாரமும் ஒரு தனி நபரை இலக்கு வைத்து செய்யப்பட்ட விடயம், இது உண்மையில் இரட்டைக் குடியுமையுள்ளவர்கள் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள் என்ற தோரணையில் இல்லாமல், தனி நபரை இலக்கு வைத்தது என்ற காரணத்திற்காக, நாங்கள் இதற்கு ஆதரவளிக்கமாட்டோம் என்ற அடிப்படையில்தான் அவர்களுடைய நியாயங்களைப் பேசி வருகிறார்கள்.
ஒரு புறத்தில் பார்க்கப்போனால் இன்று இந்த நாடு இரட்டைக் குடியுரிமை இருக்கின்ற இலங்கையர்களை வரவேற்பதற்கு தயாராகவிருக்கிறது. நிறைய நல்ல புத்திஜீவிகள் பலரை நாங்கள் இழந்திருக்கிறோம். அந்த புத்திஜீவிகள் தங்களுடைய இரட்டைக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்த நாட்டுக்கு முதலிட வரமாட்டார்கள். இந்த நாட்டுக்கு சேவை செய்வதற்கு அவர்களை நாங்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராகவிருக்கிறோம்.
அந்த வகையில் பார்க்கும் போது, பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை இரண்டு நாடுகளுக்கு, அதாவது ஒரு நாட்டின் தேசியக் கொடிக்கு சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு, இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக இருப்பது எவ்வளவு நியாயம் என்ற அடிப்படையில் ஒரு தேசாபிமான அடிப்படையில் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது. இதுதான் அதிலுள்ள பிரச்சினை. எனவே என்னைப் பொறுத்தமட்டில் நல்ல புத்திஜீவிகள் ஏன் பாராளுமன்றத்திற்கும், அமைச்சரவைக்கும் வரக்கூடாது.
வெளியில் இருக்கிற நாட்டுப்பற்றுள்ளவர்களைப் பார்த்தால், அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற இலங்கையர்கள் எல்லோரும் அங்கு அவுஸ்திரேலியா அணிக்கு ஆதரவாக ஆரவாரம் செய்யவில்லை, அவர்கள் எல்லோரும் இலங்கையினுடைய கிரிகெட் அணியைத்தான் ஆரவாரம் செய்து வரவேற்கிறார்கள். அவுஸ்திரேலிய மக்கள் அதற்காக எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. ஆனால், தான் பிறந்த நாட்டுக்கிருக்கின்ற அந்தப் பிணைப்பு, அந்த உறவு யாருக்கும் இலகுவில் அற்றுப்போவதில்லை. ஏனென்றால், எவ்வளவுதான் நீங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் பிறந்த நாட்டில் இருக்கிற பற்று என்பது, இன்றைக்கு இந்தியா கூட NRI (Non Residence Indians) என்ற அவர்களுக்கு ஒரு பெரிய அந்தஸ்தைக் கொடுக்கிறார்கள். அதற்கான அட்டையைக் கொடுக்கிறார்கள்.
மற்றொரு வகையினர் எல்லாவற்றிற்கும் அமெரிக்காவை எதிர்த்து, எல்லாவற்றிலும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பான போக்கைக் காட்டுவார்கள். ஆனால் அமெரிக்கா குடியுரிமையை வைத்திருப்பார்கள்.
இப்போது என்னவென்றால், நாங்கள் அமெரிக்கா அரசாங்கம் கொண்டுவந்த மிலேனியம் சலேஞ் (MCC) ஒப்பந்தத்தை எதிர்த்து இவர்கள் செய்த ஆர்பாட்டமும், பெரிய மக்கள் பிரசாரமும் ஏதோ நாடு அடகு வைக்கப்படப் போகிறது என்றவாறு பேசினார்கள். பேசிவிட்டு இவரே போய் அங்கிருந்தவனைக் கொண்டுவந்து, எங்கட இங்க இருக்கிற அந்த லக்தனவி பிளான்ட் அதிலுள்ள 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பதற்கான ஏற்பாட்டை அவர்தான் இரவோடு இரவாகச் செய்தார் என்று இப்படியொரு போலித்தனமான தேசாபிமானம்.
கேள்வி : இரட்டைப் பிரஜாவுரிமை இருக்கின்றவர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதை தடுக்கவோ அல்லது பதவியில் இருக்கின்றவர்களை நீக்குவதற்கான அதிகாரம் என்வசமில்லை என்றும், இது சம்பந்தமான விடயங்களுக்கு உயர் நீதிமன்றம்தான் செல்லவேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிகேவா சொல்லியிருக்கிறார்.
அதேவேளை, இன்னும் ஒரு சிலர் சொல்லியிருக்கிறார்கள், சமூகவலைத்தளங்களில் கூட வந்திருக்கிறது என்னவென்றால், பிரித்தானியாவுக்கு ரிஷி சுனக் வாய்த்தார். ஆகவே, அவர் வாய்த்ததுக்கு இந்த இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தது என்பது கூட ஒரு விதத்தில் அனுகூலம்தானே! ஏன் எங்களுடைய நாட்டில் இருக்கிறவர்களைப் பற்றி புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இது பற்றி?
பதில் : ரிஷி சுனக் அவர் இரண்டாவது பரம்பரையினராக அங்கே இருப்பவர். இலங்கையை பொறுத்தளவில் பிரஜாவுரிமை கொடுப்பதில் நீண்டகாலமாக மலையக தமிழ் மக்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை மறுக்கப்பட்டது ஒரு பெரிய நீண்ட வரலாறு, அதற்கான போராட்டம் நீண்ட, நெடிய போராட்டம். சுதந்திரம் கிடைத்தவுடன் முதலாவது செய்த மிகப் பெரிய அநியாயம். இப்படிச் செய்து அதில் முஸ்லிம்களும் நிறையபேர் விரட்டியடிக்கப்பட்டார்கள். அதில் இந்திய வம்சாவளி முஸ்லிம்கள். இந்திய, பாகிஸ்தானியர் நிறையப்பேர், எனவே இந்தப் பிரச்சினையை ரிஷி சுனாக்கோடு இதைப் பார்ப்பது, இங்கிலாந்தைப் பொறுத்தவரை அங்கு பிரஜாவுரிமை பெற்றவர்கள் மத்தியில் எந்த மாறுபாடும், வேறுபாடும் காட்டப்படுவதில்லை. ஆனால், இங்கு இன்னும் நடக்கிறது. அதான் இங்குள்ள பிரச்சினை. இன்றைக்கு இந்திய வம்சாவளி பிரஜைகள் பிரஜாவுரிமை பெற்ற பிறகும் அவர்களுக்கு வேற்றுமை காட்டப்படுகிறது, அவர்களுக்கு தொழில்வாய்ப்புகளில் வேற்றுமை காட்டப்படுகிறது, அவர்களுக்கு கல்வி வாய்ப்புகளில் வேற்றுமை காட்டப்படுகிறது, காணி உரிமை மறுக்கப்படுகிறது. இது முஸ்லிம்களுக்கும் நடக்கிறது. இந்த நாட்டில் பிறந்த பிரஜைகளாக இருந்தாலும், ஆரம்பத்தில் கேட்டார்கள்; உங்கள் பாட்டன், பாட்டனின் பாட்டனுடைய பிறப்புச் சான்றுதழ் சமர்ப்பிக்கவேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட, அவமானத்திற்குள்ளாகிய நாட்டவர்களாக இதைச் சரியாக நிரூபிக்கமுடியாமல். இன்னும் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள். இப்படி விடயங்கள் ஏற்பட்டு, அதை அமரர் தொண்டமான், பிரமதாச காலத்தில் முழுமையாகத் தீர்த்துவைத்தார்.
உண்மையில் அந்த விடயம் அமரர் தொண்டமான் குறிப்பாக ஜனாதிபதி பிரமதாசாவுக்கு செல்லவேண்டும். அந்த விடயத்திலிருந்த இந்த சின்ன சின்ன இடர்பாடுகளை முழுமையாக நீக்கி, வாக்குரிமையை முழுமையாக கொடுத்ததுதான் ஒரு பெரிய விடயம். அதுமட்டுமல்லாமல், இந்த வாக்குரிமை இல்லாமலிருந்த நபர்களின் ஆசனங்களையும் சிங்கள பெரும்பான்மையினர் அனுபவித்தனர். ஏனென்றால், தேர்தல் எல்லை நிர்ணயங்கள் செய்யப்பட்டபோது கிட்டத்தட்ட 10 இலட்சம் தமிழ் மக்களுடைய வாக்குகள் கணக்கிலெடுக்கப்படவில்லை, அதிலில்லாமல்தான் தொகுதிகளை நிர்ணயம் செய்தார்கள், அதனாலுள்ள நன்மைகள் அத்தனையும் சிங்களப் பெரும்பான்மைக்குதான் போய்ச் சேர்ந்தன.
கேள்வி :- எத்தனையோ எதிர்பார்ப்புக்களெல்லாம் இருக்கின்ற போது, அவை பல சந்தர்ப்பங்களில் தவிடுபொடியாகி இருக்கின்றன,எதிர் பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகி இருக்கின்றன. ஆகவே, "ஓர் ஆண்டுக்குள் தீர்வு" என்ற ஜனாதிபதி சொல்லும் அந்த செய்தியை முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமையாகிய தாங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? இது சாத்தியமாகுமா?
பதில்: என்னைப் பொறத்தமட்டில் நிச்சயமாக அது சாத்தியமில்லை; ஏனென்றால், இன்று இருக்கிற பாராளுமன்ற பெரும்பான்மை அதற்கு அனுமதிக்கப்போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லாம் கடுப் போக்காளர்கள், கடும் போக்கு பேரின சிந்தனையில் இருக்கிற ஒரு பாராளுமன்ற பெரும்பான்மையை வைத்துக் கொண்டு இந்த நாட்டின் அதிகாரப் பகிர்வை அதிகரிப்பதற்கோ, 13ஆவது சட்ட திருத்தத்தை இன்னும் வலுப்படுத்துவதற்கோ அல்லது சிறுபான்மையினரின் ஜனநாயக அதிகாரங்களைக் கூட்டுவதற்கோ எந்த முயற்சி எடுத்தாலும் இவர்கள் அதற்குத் தடையாக இருப்பார்கள். எனவே, இந்தப் பாராளுமன்றத்தில் அதிவும் 2/3 பெரும்பான்மை எடுத்தாகவேண்டும் என்று இருக்கிற சூழலில், புதிய மக்கள் ஆணையைக் கோரி, அதனூடாக தேர்தலில் ஒரு விஞ்ஞாபனத்தை சமர்பித்து, இதே ஜனாதிபதி முன்னேற்றகரமாக, அவரோடு நாங்கள் 2004 ஆம் ஆண்டு அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு இப்படி ஒவ்வொரு தேர்தல்களிலும் அவருடைய விஞ்ஞாபனங்களிலேயே நிறைய விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எனவே, அவற்றை தனி ஒருவராக இவர்களுடைய தயவில் தங்கியிருக்கிற இந்த ஜனாதிபதி சாதிப்பார் என்று எதிர்பார்த்தால், அது எந்தவிதத்திலும் சாத்தியமாகாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.
0 comments :
Post a Comment