புத்தளம், மதுரங்குளி தும்பு உற்பத்தியாளர்களுக்கும், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று சனிக்கிழமை (05) விருதோடை பகுதியில் இடம்பெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, தும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ரிஷாட் எம்.பி கூறியதாவது,
"புத்தளம் மாவட்டத்தில் வாழ்கின்ற தும்பு உற்பத்தியாளர்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களின் உற்பத்திப் பொருட்களை, ஏற்றுமதியாளர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் என்ன விலையில் வாங்கினார்களோ, அதே விலையிலேதான் தற்பொழுதும் வாங்குகின்றனர்.
ஒரு சில ஏற்றுமதியாளர்கள், தும்பு உற்பத்தியாளர்களை அடக்கி, ஒடுக்கி தமது ஏகபோக உரிமைகளை நிலை நாட்ட முற்படுகின்றனர்.
இதனால் சாதாரண உற்பத்தியாளர்களும் அவர்களை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும், ஏற்றுமதியாளர்கள் தும்பு உற்பத்திப் பொருட்களுக்கான உரிய விலையை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்வதனால் , உற்பத்தியாளர்கள் தமது தொழிலை முன்கொண்டு செல்ல முடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இதன் காரணமாக, இலங்கைக்கு பல மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொடுக்கும் இந்த தும்பு உற்பத்தித் துறையானது, இல்லாமல் போகின்ற ஆபத்தான நிலை தென்படுகின்றது.
எனவே, அரசாங்கம், கைத்தொழில் அமைச்சு, ஏற்றுமதி அதிகார சபை ஆகியன இந்த விடயத்தில் தலையீடு செய்வதன் மூலமே, தும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்" என்று கூறினார்.
அத்துடன், தும்பு உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கான சரியான விலையை நிர்ணயித்து வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment