இம்மாதம்13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் நீரிழிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, சைக்கிளிங் கிரீன் (Cycling Green) கழகமானது இலங்கை இள வைத்தியர்கள் சங்கம், வெல்லஸ்ஸவின் குரல், மொனறாகலை மாவட்ட பொது வைத்தியசாலை, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றுடன் இணைந்து மாபெரும் சைக்கிள் அஞ்சலோட்டத்தை மேற்கொள்ளவுள்ளது என சைக்கிளிங் கிரீன் அமைப்பினர் தெரிவித்தனர்.
இன்று இரவு மருதமுனை கமு/கமு/அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் சைக்கிளிங் கிரீன் கழகத்தின் சார்பில் கலந்துகொண்ட இலங்கை ஊவா வெல்லச பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப்.ஹிபதுல் கரீம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞான பிரிவின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.எம். றியாஸ், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வேலைத்தள பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள், இந்த சர்வதேச நீரிழிவு தின சைக்கிள் அஞ்சலோட்டம் மொனறாகலையில் ஆரம்பித்து தொம்பகஹவெல, சியம்பலாண்டுவ, வட்டினாகல, தமண, ஹிங்குறாணை, அம்பாறை, சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, மருதமுனை ஆகிய பிரதேசங்களினுடாக நடாத்தவிருக்கின்றது. இந்த சர்வதேச நீரிழிவு தின சைக்கிள் அஞ்சலோட்ட இறுதி நிகழ்வு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. இந்த அஞ்சலோட்டத்தில் 18 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் மக்களுக்கு நீரிழிவு தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்படவுள்ளது.
இந்த அஞ்சலோட்ட நிகழ்வின் தொடர்ச்சியாக மொனறாகலை மாவட்ட பொது வைத்தியசாலை, அம்பாறை வைத்தியசாலை நீரிழிவு பிரிவு, ரோட்டரி கழகம், ஆகியவற்றிலும் நீரிழிவு தொடர்பிலான சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் எக்கலோயா பகுதியில் வனபரிபாலன திணைக்களத்தின் 6000-7000 விதைப்பந்துகள் வீசும் நடவடிக்கையும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது என்றனர்.
0 comments :
Post a Comment