அதிகாரப் பகிர்வு விடயத்தில் முஸ்லிம் புத்திஜீவிகள் செயற்பாட்டில் இறங்க வேண்டும் - சட்ட முதுமாணி வை. எல். எஸ். ஹமீட்.



எஸ்.அஷ்ரப்கான்-
திகாரப் பகிர்வு விடயத்தில் முஸ்லிம் புத்திஜீவிகள் செயற்பாட்டில் இறங்க வேண்டும் என்று சட்ட முதுமாணி வை. எல். எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி அதிகாரப் பகிர்வு விடயத்தில் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். சூழ்நிலைகள் பலவந்தப்படுத்தினாலேயொழிய ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெற வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் உரிய காலத்திற்குமுன் நடாத்தமுடியாது.

எது எவ்வாறிருந்தபோதிலும் ஜனாதிபதித் தேர்தலை மனதிற்கொண்டு ஒரு தீர்வினைத் தமிழ்தரப்பிற்கு வழங்க ஜனாதிபதி முனைப்புக்காட்டுவது புரிகிறது. 2/3 பெரும்பான்மை கிடைக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் எதையும் இப்பொழுது அறுதியிட்டுக் கூறமுடியாது.

இந்நிலையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இதுவரை தெளிவான நிலைப்பாடுகள் இல்லை. அதிகாரப்பகிர்வு என்பது வட-கிழக்கு இணைப்பு, பிரிப்பு சம்பந்தமானது; என்பதே பலரது பார்வையாக இருக்கின்றது. அதற்கு அப்பால் எதுவும் தெரியாது; அதுப்பற்றி சிந்திப்பதற்கும் ஆயத்தமில்லை.

இதில் மிகவும் பரிதாபகரமான நிலை என்னவென்றால் வட-கிழக்கிற்கு வெளியில் வாழும் சாதாரண முஸ்லிம்கள் மட்டுமல்ல, நான் சந்தித்த சில புத்திஜீவிகள்கூட, அதிகாரப்பகிர்வு வட-கிழக்கிற்கே தாக்கம் செலுத்தக்கூடியது; அதற்கு வெளியே அல்ல; என்றுதான் நினைக்கிறார்கள். அதிகமான மலையகத் தலைவர்களும் அவ்வாறே நினைக்கிறார்கள். வட-கிழக்கைவிட வெளியே வாழுகின்ற சிறுபான்மைகள் மீதுதான் அதிகாரப்பகிர்வு பாரதூரமான எதிர்மறைத் தாக்கத்தைச் செலுத்தப்போகிறது; என்பதை ஏனோ அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதிகப்பட்டச அதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது. சமஷ்டி அதைவிட பேராபத்தானது; என்பது தொடர்பில் சமூகத்திற்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. கண்மூடித்தனமாக அரசியல் தலைமைகளை நம்பும் ஓர் சமூகம் நம் சமூகம்.
சமூகத்தில் எதுவித அக்கறையுமற்ற அரசியல் தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம். தலைவர் மறைந்து 22 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் தலைவரின் பெயரைச்சொல்லி அரசியல் செய்யும் கட்சிகள் சமூகத்திற்காக தீர்த்துக்கொடுத்த பிரச்சினை எதுவுமில்லை.

முஸ்லிம்களில் அன்றி தமிழ்த்தரப்பில் அதிக அக்கறைகொண்ட முஸ்லிம் தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம். தமிழர் கோருகின்ற வட-கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கத்தை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் வழங்க, கடிதம் எழுதி கையொப்பம் வைக்கமுனையும் தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம்.

கல்முனையைக் கூறுபோட எத்தனிக்கும் தமிழ்த்தலைவர்களிடமிருத்து கல்முனையைப் பாதுகாத்துத்தர, அதற்காக உருப்படியான ஒரு பேச்சை பாராளுமன்றத்தில் பேசுவதற்குக்கூட வக்கற்ற தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம்.

இந்நிலையில், ஏற்கனவே, நல்லாட்சியில் வரையப்பட்ட யாப்பு வரைபில் பல விடயங்கள் முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் பாதிக்கக் கூடியாதாய் இருக்கின்றன. சமஷ்டிக்கும் மேலான அதிகாரப்பகிர்வு அதில் முன்மொழியப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக அச்சந்தர்ப்பத்தில் நிறைய எழுதியிருக்கின்றேன். பல கருத்தரங்குகள் நடாத்தியிருக்கின்றேன்.

எனவே, அதகாரப்பகிர்வுக்கான முஷ்தீபுகள் நடைபெறும் இச்சந்தர்ப்பத்தில் அரசியல்தலைமைகளை நம்பி முஸ்லிம் சமூகம் ஏமாந்துவிடக்கூடாது. நாம் தமிழர்களின் அபிலாசைகளுக்கு எதிரானவர்களல்ல, ஆனால் அது முஸ்லிகளை ஓர் இருண்ட யுகத்திற்குள் தள்ளிவிடக்கூடாது.

ஏதோ ஓர் தீர்வுத்திட்டம் வரப்போகிறது. அது நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பது வேறுவிடயம். அவ்வாறு தீர்வுத்திட்டம் வெளிவரும்போது நாம் தடுமாறிக்கொண்டிருக்க முடியாது. 21 வது திருத்தத்தில் அரசியலமைப்பு சபையில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் வரக்கூடிய விதத்தில் ஒரு வரியை சேர்க்க வக்கற்ற தலைவர்கள்தான் நம் தலைவர்கள். கோட்டாவின் 20 இன் பாராளுமன்ற சபையில் ஒரு முஸ்லிம் வருவதை உறுதிப்படுத்தக்கூடிய சரத்து இருந்தது. ( அந்த சபைக்கு அதிகாரம் இருந்ததா? இல்லையா? என்பது வேறுவிடயம்)

இது தொடர்பாக விரிவாக வேறாக எழுதுகின்றேன். இன்ஷா அல்லாஹ்.

எனவே, இந்த சூழலில் புத்திஜீவிகள் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒன்றுசேரவேண்டும். தீர்வுத்திட்டத்தில் நமது உரிமைகளைப் பாதுகாக்கும் அம்சங்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும்; என்பதை அடையாளம் காணவேண்டும். பின்னர் பல பிரதேச புத்திஜீவிகளை இணைத்த ஒரு சம்மேளனம் உருவாக்கப்பட்டு அவற்றில் ஒரு பொது நிலைப்பாடு எட்டப்பட வேண்டும்.

அதனை முஸ்லிம் கட்சிகளிடம் சமர்ப்பித்து அதுவே அவர்களின் நிலைப்பாடாகவும் இருக்கவேண்டும். அதேபோன்று, அரசிடமும் எதிர்க்கட்சிகளிடமும் அந் நிலைப்பாட்டை சமர்ப்பித்து அழுத்தம் கொடுக்கவேண்டும்.

தயவுசெய்து பஸ் போனபின் கைகாட்டாமல் இப்பொழுதே புத்திஜீவிகள் செயற்பட முன்வரவேண்டும் என்று முள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :