ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு . புதன்கிழமை ஆரம்பம்.



ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் திருவவதாரம் செய்து இருநூறாவது ஜனன ஆண்டிலே, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சிறப்புமிகு ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14, 15, 16 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நாவலர் பெருமான் அவதரித்த - நாளைக் கந்தன் திருவீதியுலா வரும் புனித பதியிலே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு நிகழ்ந்தேறவுள்ளது.

நாவலர் பெருமானின் குருபூஜை நன்னாளிலே ஆரம்பமாகி ஜனன தின நாளிலே நிறைவு காணவுள்ள இம்மாநாடு நிகழ்வுகள் நல்லூர்ப் பதியிலே நாவலர் மணிமண்டபம், நாவலர் கலாசார மண்டபம், ஸ்ரீ துர்க்கா மணிமண்டபம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபம் ஆகிய இடங்களிலே ஆன்மிக அரங்கு, பொது அரங்கு, ஆய்வரங்கு என நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
ஆன்மிக அரங்கு நிகழ்வுகள்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்திலே ஆன்மிக அரங்கின் தொடக்க நிகழ்வுகள் 14.12.2022 அன்று காலை 7.30 மணிக்கு குருபூஜை நிகழ்வுகளோடு ஆரம்பமாகவுள்ளன. அதனைத் தொடர்ந்து நாவலர் பெருமானின் வரலாற்றைச் சித்திரிக்கின்ற ஓவியங்களும் நாவலர் பெருமானால் நம் சமூகத்திற்குத் தரப்பட்ட படைப்புகளும் உள்ளடங்கிய கண்காட்சி நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவமும் இடம்பெறவுள்ளது.
காலை 8.00 மணிக்கு நாவலர் பெருமானின் திருவுருவப் படம் தாங்கிய திருவூர்வல நிகழ்வு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலிருந்து நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபம் நோக்கிப் பவனிவரவுள்ளது.
நாவலர் கலாசார மண்டபத்திலே, பெயர்ப் பலகைத் திரை நீக்கத்தினைத் தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களுக்கான குருபூஜை நிகழ்வுகளோடு ஆன்மிக அரங்கின் அரங்க நிகழ்வுகள், நல்லை ஆதீன முதல்வர் வணக்கதிற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் மற்றும் சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் வணக்கத்திற்குரிய து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் ஆகியோர் திருமுன்னிலை வகிக்க, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ய.அநிருத்தனன் அவர்கள் தலைமையில், யாழ்.மாநகர முதல்வர் கௌரவ வி.மணிவண்ணன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க நிகழ்வுகள் அரங்கேறவுள்ளன.
சமயப் பெரியார்கள், கல்விமான்கள், அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினர் எனப் பலரும் பங்கெடுக்கவுள்ள இந்நிகழ்வில் ‘’நாவலர் சைவக்காவலர்” எனும் தலைப்பிலான செஞ்சொற்செல்வர், கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் சிறப்புரை, நூல் வெளியீடு மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆகியவை நாவலர் கலாசார மண்டபத்திலே ஆன்மிக அரங்கில் நிகழ்ந்தேறவுள்ளன.
பொது அரங்கு நிகழ்வுகள்
நல்லூர், ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்திலே, ஐந்து நாட்கள் மாலை நேர நிகழ்வுகளாகப் பொது அரங்கு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மாலை 5.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
பொது அரங்கின் முதலாம் நாள் நிகழ்வு அமெரிக்கா, ஹவாய் சைவ ஆதீன சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் சீடர் வணக்கத்திற்குரிய ஆன்மிகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் அவர்களும் சிலாபம், முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் பிரதம குரு வணக்கத்திற்குரிய சிவஸ்ரீ ச.பத்மநாப சர்மா அவர்களும் திருமுன்னிலை வகிக்க, வடக்கு மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இந்தியத் துணைத் தூதுவர் கௌரவ ஸ்ரீ ராகேஷ் நட்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க, கனடா – சைவசித்தாந்த பீட இயக்குநர் வைத்திய கலாநிதி இ.லம்போதரன் அவர்களின் சிறப்புரை, நூல் வெளியீடு, யாழ்.பல்கலைக்கழக, இராமநாதன் நுண்கலைப் பீட, இசைத்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.பரந்தாமன் நவரட்ணம் அவர்களின் பண்ணிசைக் கச்சேரி முதலான கலை நிகழ்வுகளும் அரங்கேறவுள்ளன.
பொது அரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வு வேதாந்தமடம், சிவகுருநாத பீட எட்டாவது குருபீடாதிபதி வணக்கத்திற்குரிய ஸ்ரீ வேதவித்தியாசாகரர் சுவாமிகள் மற்றும் சண்டிலிப்பாய் ஸ்ரீ சரஸ்வதி கோயில் பிரதம குரு வணக்கத்திற்குரிய சிவஸ்ரீ சபா. வாசுதேவக் குருக்கள் ஆகியோர் திருமுன்னிலை வகிக்க, புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் முன்னாள் செயலாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலாளர் திரு.க.மகேசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க, உலகப் புகழ் பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் அவர்களின் சிறப்புரை, நூல் வெளியீடு, நாட்டிய கலாகேந்திரா நடனப் பள்ளி இயக்குநர் திருமதி துஷ்யந்தி சுகுணன் அவர்களின் நெறியாள்கையில் அறுசமய ஆராதனை - நாட்டிய நாடகம் முதலான கலை நிகழ்வுகளும் அரங்கேறவுள்ளன.
பொது அரங்கின் மூன்றாம் நாள் நிகழ்வு, யாழ்ப்பாணம், சின்மயா மிஷன் வணக்கத்திற்குரிய குணாதிதானந்த சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சுண்ணாகம், கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் பிரதம குரு வணக்கத்திற்குரிய முத்தமிழ்க் குருமணி நா.சர்வேஸ்வரக் குருக்கள் ஆகியோர் திருமுன்னிலை வகிக்க, கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர், கலாகீர்த்தி உடுவை.எஸ்.தில்லைநடராஜா அவர்களின் தலைமையில், வவுனியா பல்கலைக் கழகத் துணை வேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க, தமிழ்நாடு, சென்னை, ஸ்ரீ நடேசன் வித்தியாசாலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவுநர், டாக்டர். ந. இராமசுப்பிரமணியன் அவர்களின் சிறப்புரை மற்றும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் தலைமையிலான பட்டிமன்ற நிகழ்வுகளும் அரங்கேறவுள்ளன.
பொது அரங்கின் நான்காம் நாள் நிகழ்வு, திருக்கேதீஸ்வரம், தருமபுர ஆதீனத்தின் கிளை மடத்தின் வணக்கத்திற்குரிய ஸ்ரீமத் மீனாட்சி சுந்தரதம்பிரான் சுவாமிகள் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் பிரதம குரு வணக்கத்திற்குரிய மகாராஜாதி து.ஷ. ரத்தினசபாபதிக் குருக்கள் ஆகியோர் திருமுன்னிலை வகிக்க, யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் திரு.த.ஜெயசீலன் அவர்கள் தலைமையில், யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க, தமிழ்நாடு, சிதம்பரம், தவத்திரு ஆறுமுகநாவலர் சைவ வித்தியாசாலை அறக் கட்டளையின் தலைவர் டாக்டர்.சு.அருள்மொழிச்செல்வன் அவர்களின் சிறப்புரை, நூல் வெளியீடு, இசைச் சுடர்கள் அ.அமிர்தலோஜன், அ.அமிர்தசிந்துஜன் ஆகியோர் இணைந்து வழங்கும் நாவலர் கீர்த்தனைகள் - இசை அரங்கம் மற்றும் யாழ்.பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைப் பீட, நடனத்துறை மாணவர்கள் வழங்கும் திருமதி மைதிலி அருளையா அவர்களின் நெறியாள்கையில் நாவலர் பெருமான் - நாட்டிய நாடகம் முதலான கலை நிகழ்வுகளும் அரங்கேறவுள்ளன.
பொது அரங்கின் நிறைவு நாள் நிகழ்வு, நல்லை ஆதீன முதல்வர் வணக்கதிற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் மற்றும் சர்வதேச இந்து மத பீடச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராமச் சந்திரக் குருக்கள் பாபு சர்மா ஆகியோர் திருமுன்னிலை வகிக்க, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு.ய.அநிருத்தனன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர். சி.பத்மநாதன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க, நர்த்தன ஷேத்திரா நடனப் பள்ளி மாணவர்கள் திருமதி பிரியதர்ஷினி வாசிகன் அவர்களின் நெறியாள்கையில் வள்ளி திருமணம் – நாட்டிய நாடகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் திரு,தி.பாலச்சந்தர் அவர்களின் பண்ணிசை முதலான கலை நிகழ்வுகளோடு விருது வழங்கல் வைபவமும் இடம்பெறவுள்ளது.
கருத்தரங்கு நிகழ்வுகள்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு நிகழ்வின் கருத்தரங்கம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் 15,16,17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. கருத்தரங்கத்தின் முதலாம் நாள் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகைசார் பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது. தொடக்கவுரையினை யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் நிகழ்த்த சைவப்பணியில் நாவலர் என்னும் தலைப்பிலான கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.
இரண்டாம் நாள் கருத்தரங்கு யாழ்.பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா அவர்கள் தலைமையில் நாவலரின் தமிழ்ப்பணி என்னும் தலைப்பிலான கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.
கருத்தரங்கின் நிறைவு நாள் வைபவம் யாழ்.பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் நாவலரின் சமூகப் பணி என்னும் தலைப்பிலான கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.
நாவலர் புகழ் விருதும் விசேட கௌரவமும்
நாவலர் ஆண்டிலே நடைபெறும் இந்த மாநாட்டு நிகழ்விலே துறை சார்ந்த ரீதியில் கம்பவாரிதி இ.ஜெயராஜ், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், வைத்தியகலாநிதி இ.லம்போதரன், உலகப்புகழ் பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் ஆகியோருக்கு நாவலர் புகழ் விருதும் – ஆன்மிகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் மற்றும் இந்தியா, தமிழ் நாட்டைச் சேர்ந்த டாக்டர். ந.இராமசுப்பிரமணியன், டாக்டர். சு.அருள்மொழிச்செல்வன் ஆகியோர் நாவலர் புகழ் விசேட கௌரவம் மூலம் கௌரவிக்கப்படவுள்ளனர்.
நாவலர் பெருமானை நினைவு கூர்ந்து நாவலர் ஆண்டிலே நிகழவுள்ள இம்மாநாட்டு நிகழ்விலே பங்குகொள்ள அனைவரையும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக அன்போடு வரவேற்கின்றார்கள்.


வி.ரி.சகாதேவராஜா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :