கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னர் நிலையற்ற கடன், மோசமான பண இருப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றிலிருந்து எமது நாடு இன்னும் மீளவில்லை. இதன் காரணமாக எமது நாட்டில் போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளின் போசாக்கு தேவையை பெற்றோர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் தெரிவித்தார்.
இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை இலுப்பங்குளம் கிராமத்திலுள்ள 100 சிறுவர்களுக்கு போசாக்குணவு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை (12) இலுப்பங்குள கிராம சேவகர் அலுவலகத்தில், அதன் ஒருங்கிணைப்பாளர் வி.ஆர்.விஜித்ரா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் இதுவரை 21,000 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சர் அன்மையில் தெரிவித்துள்ளார். இந்நிலைமையை இல்லாதொழிக்கவும், எமது நாட்டில் ஒரு நிலையைான இஸ்த்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கும் பல தொண்டு நிறுவனங்கள் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.
போசாக்குள்ள சிறார்களை எமது நாட்டில் உருவாக்கவேண்டும் என்ற நன்நோக்கில் வெளிநாட்டில் இருக்கின்ற எமது நாட்டவர்கள் எங்களைப் போன்ற தொண்டு நிறுவனங்கள் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் போசாக்கான உணவு வகைகளை வழங்கி வருகின்ற அதேவேளை கற்றல் உபகரணங்களையும், உலர் உணவுப் பொதிகளையும், பயன்தரும் மரக்கன்றுகளையும் வழங்க பல உதவிகளைச் செய்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் வறுமை, நலன்புரி பாதிப்புகள், பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களின் வறிய நிலை மற்றும் சிறுவர்களைப் பாதிக்கப்படக்கூடிய போசாக்குத்திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற செயற்பாடுகளை பாதுகாப்பதிலும், சமூகப் பாதுகாப்பின் பங்கை எடுத்து நோக்குவதிலும் இலங்கை காப்போம் தொண்டு நிறுவனம் பல ஆண்டுகாலமாக பாரிய அர்ப்பணிப்புடனான சேவைகளைச் செய்து வருகின்றது என்றார்.
இந்நிகழ்வில், இலுப்பங்குளம் பிரதேச முக்கியஸ்தர்கள், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிறுவாக உறுப்பினர்கள் உள்ளிட்ட அக்கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment