"ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் கண்டறியப்பட வெண்டும் என்பதில் மக்கள் காங்கிரஸ் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கும்"- பேராளர் மாநாட்டில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அறிவிப்பு!





ஊடகப்பிரிவு-
யிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளும் அதற்கு பின்புலத்தில் நின்றவர்களும் கண்டறியப்பட வேண்டும் என்பதிலும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அநியாயமாக எரித்தவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுதியுடன் இருப்பதாக கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முஸ்லிம்களை மிக மோசமாக பாதித்த இந்த விடயங்களுக்கு நடவடிக்கை எடுக்காத எவருக்கும் எமது கட்சி ஒத்துழைப்பு வழங்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் சனிக்கிழமை (10) தெஹிவளை, ரோஸ்வூட் செலோனில் இடம்பெற்றபோது, விசேட அழைப்பின் பெயரில் அங்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா உட்பட தமிழக முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதுடன் விஷேட உரைகளையும் நிகழ்த்தினர்.

இதன்போது, தொடர்ந்து உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது,

"பல சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியிலேயே கட்சியை வழிநடத்தி வருகின்றோம். சிறுபான்மை கட்சிகள் தேவையா? இல்லையா? என்ற வாதப்பிரதிவாதங்கள் ஒரு காலத்தில் இடம்பெற்றது. பெரும்பான்மை கட்சிகளில் உள்ள சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், தமது இனத்துக்கு அநீதி இழைக்கப்படும்போது தட்டிக் கேட்க வக்கத்தவர்களாகவும் பேசாமடந்தைகளாகவும் இருந்த வேளை, தமது சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்காகவே முஸ்லிம் கட்சிகள் தோற்றம் பெற்றன.

அந்தவகையில், காலவோட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் உருவாகி, மிக குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்றது. எமது கட்சிக் கொள்கையில் பற்றுக்கொண்டவர்கள் இதில் சங்கமமாகினர். முஸ்லிம்கள் மாத்திரமன்றி இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் என எமது கட்சியில் அங்கத்துவம் பெற்றனர். பன்முகத்தன்மையும் இனவாதமற்ற போக்கும் சகல இனத்தையும் சமமாக மதிக்கும், கருதும் பாங்கும் இருந்ததினால்தான் மக்களின் அங்கீகாரம் கிடைத்தது.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு, கிழக்கில் நாங்கள் பல சபைகளை கைப்பற்றினோம். அதுவும் நூறு சதவீதம் தமிழர்கள் வாழும், யுத்தத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையை நாம் கைப்பற்றினோம். மன்னாரில் 70 சதவீதம் தமிழர்கள் வாழும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் 11 வட்டாரங்களையும் கைப்பற்றி ஆட்சியை பிடித்தோம். கிறிஸ்தவர் ஒருவரை தவிசாளர் ஆக்கினோம். அவர் மரணித்ததன் பின்னர் இந்து சகோதரர் ஒருவரை தவிசாளர் ஆக்கினோம். அதேபோன்று, வட மாகாண சபையில், தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வவுனியாவில் இருந்து பௌத்தர் ஒருவரை எமது கட்சியின் சார்பில் மாகாண சபைக்கு அனுப்பினோம். சமத்துவம், சகோதரத்துவம், இன சவுஜன்யம் ஆகியவற்றின்பால் எமது கட்சி பயணிப்பதனால்தான், அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்ல முடிகின்றது. அனைத்து சமூகத்தவரையும் அதிகாரத்தில் அமர்த்த முடிகின்றது.

எந்தவிதமான பேதமும் இன்றி நாம் பயணிப்பதில் காழ்ப்புணர்வு கொண்ட அரசியல் சக்திகள் எம்மை வீழ்த்த சதி செய்தன. இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி, தலைமையையும் கட்சியையும் சிதைக்கதலைப்பட்டன. தலைமை மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறையில் அடைத்தனர். இல்லாத பொல்லாததை எல்லாம் ஊடகங்கள் வாயிலாகவும் மேடைகள் மூலமும் விஷமாகக் கக்கி, தலைமையையும் கட்சியையும் சிதைக்க முயன்றனர். இனவாதத்தை மூலதனமாக்கிஆட்சியை பிடித்தனர். ஆனால், எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அத்துடன், சட்டத்துறை நேர்மையாக செயற்பட்டதனால் பல குற்றச்சட்டுக்களிலிருந்து தலைமை நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

அது மாத்திரமன்றி, கட்சிப் போராளிகளின் தியாகத்தினாலும் நமது அர்ப்பணிப்புக்களினாலும், மக்கள் காங்கிரஸ் மூலம் பதவிக்கு வந்தவர்கள், கட்சிக் கொள்கைக்கு மாறாக செயற்பட்டு, துரோகம் இழைத்தனர். அவர்களும் எமது கட்சியை அழிக்க கங்கணங்கட்டி வருகின்றனர்.

எனினும், மக்கள் ஆதரவு பெற்ற இந்தக் கட்சி தொடர்ந்தும் நேரிய வழியில், முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் என்பதை உறுதியாக கூறுகின்றோம்.

நாங்கள் கடந்த காலங்களில் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக முன்நின்று உழைத்தவர்கள். பிரச்சினைகளை கண்டு ஓடி ஒழிந்தவர்கள் அல்லர். எதிர்வரும் காலங்களிலும் இந்தக் கட்சி மக்கள் நலனுக்காகவே காரியமாற்றும்" என்று தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் 13 ஆம் திகதி இனப்பிரச்சினை தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், தமிழர்களும் முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, சந்தோசமாக வாழக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகளை மக்கள் காங்கிரஸ் முன்வைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :