காரைதீவு வைத்தியசாலை பாரிய மருந்துத் தட்டுப்பாட்டுடன் இன்னோரன்ன வசதியீனங்களுக்கு மத்தியில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. எனவே இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு பொது அமைப்புகள் ஆலயங்கள் தனவந்தர்கள் உடனடியாக உதவமுன் வேண்டும்.
இவ்வாறு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு சென்ற அவர் காரைதீவு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் ந.அருந்திரன் வைத்திய அதிகாரி டாக்டர் சாந்தி விவேகானந்தராஜா ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்.
மின்வெட்டு நேரங்களில் வைத்தியசாலை கும்மிருட்டில் மூழ்கிறது.
சிறுபிள்ளைகளுக்கான பனடோல் சிறப் தொடக்கம் வயதுவந்தவர்களுக்கான பிறசர், சீனி வருத்தம் என்பவற்றிற்கான மருந்துகள் எதுவுமின்றி இயங்கிக்கொண்டிருக்கின்றது.
நாட்டு நிலமை காரணமாக மருந்துதட்டுப்பாடு நிலவுவதாகவும் பொதுவாக எல்லா வைத்தியசாலைகளிலும் இப்பிரச்சினை காணப்படுவதாகவும் தெரிகிறது.
மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் நோய்களை குணப்படுத்த அரச வைத்தியசாலைகளையே நம்பியுள்ளனர்.
அந்தவகையில் இந்த மருந்து தட்டுப்பாட்டு நிலமை ஏழை மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
வரும் காலங்களில் நிலைமை இன்னும் மோசமடையலாம்.
மேலும் தற்போது நாட்டில் 2 மணித்தியாலயம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. இவ்வேளையில் வைத்தியசாலை இருளில் மூழ்கி காணப்படுவதுடன் இவ்வேளையில் நோயாளர்களுக்கான அவசர சிகிச்சைகளையும் வழங்கமுடியாமல் திணறி வருகின்றனர்.
ஜனறேற்றர் இருந்தும் எரிபொருள் வழங்கப்படாமையால் இந்நிலமை கடந்த மூன்று மாதங்களாக காணப்படுவதாக வைத்தியர் ந. அருந்திரன் தெரிவிக்கின்றார்.
மின்சாரம் இல்லாத வேளையில் ரோர்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் தாதியர்கள் சேவையாற்றுவதை அவதானிக்க முடிகின்றது.
தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு 5 லீற்றர் எரிபொருள் வீதம் மாதம் 150 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. சகோதர இன வைத்தியசாலைகளில் பொது அமைப்பினரும், தனவந்தர்களும் எரிபொருள், மருந்து பிரச்சினைகளை பொறுப்பெடுத்து நிவர்த்திசெய்துவருவதாகவும் அறியக்கிடைக்கின்றது. எனவே நாட்டு நிலமை சரியாகும்வரை இவற்றிற்கு இடைக்கால தீர்வொன்று அவசியமாகவுள்ளது.
அங்குள்ள அபிவிருத்தி குழு கடந்த இரண்டு வருடங்களாக இயங்கவில்லை. அதனால் வைத்திய அதிகாரி அனைத்து பணிகளையும் தமது குழுவினருடன் இணைந்து முடியுமான சேவையை செய்து வருகின்றார்.அவரை பாராட்டுகிறேன்.
இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் 8 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் கூட்டமொன்றை கூட்டினார்.. நானும் சென்றேன்.
அதன்படி இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு பொது அமைப்புகள் ஆலயங்கள் தனவந்தர்கள் உடனடியாக உதவமுன் வேண்டும் .
வைத்திய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு(774004949) தாராளமாக உதவலாம்.அது நன்கொடையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
என்றார்.
0 comments :
Post a Comment