வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுனர்களை உடனடியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீக்கி விட்டு மக்கள் நலன் சார்ந்த புதிய ஆளுனர்களை நியமிக்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வியாழக்கிழமை கோரியது.
நான்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் ஜனாதிபதியால் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு கல்முனையில் வைத்து தெரிவித்தவை வருமாறு
மக்கள் நலன் சார்ந்த புதிய ஆளுனர்களையே ஜனாதிபதி நியமிக்க வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியம்.
தற்போது பதவி வகித்து கொண்டிருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாண ஆளுனர்களால் மக்கள் மனங்களை வெல்லவே முடியவில்லை. அவர்களுடைய மக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்கள் உண்மையிலேயே போதாது.
மேலும் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருகின்றனர். கிழக்கை பொறுத்த வரை ஆளுனர் அனுராதா ஜகம்பத் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். இதனால் இவருக்கு கிழக்கு மண்ணின் மீதும், மக்கள் மீதும் அக்கறை இருப்பதாக இல்லை.
மூவின மக்களாலும் ஏற்று கொள்ளப்பட கூடிய கனவான் ஒருவரே கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும். அவர் மக்கள் சேவையில் உச்சத்தை தொட்டவராக இருக்க வேண்டும். நிர்வாக செயற்பாடுகளில் ஜாம்பவானாகவும் இருக்க வேண்டும்.
0 comments :
Post a Comment